Sunday, August 9, 2020

பகுதி 9 - எங்கிருந்தோ வந்த கை

இளவரசர் சென்றுக்கொண்டிருந்த குதிரை காட்டைத் தாண்ட இன்னும் சிறிது தூரம் இருந்தது. தூக்கத்தில் இருந்த இளவரசர் மகேந்திரனுக்குக் குதிரையின் ஓட்டம் தாலாட்டுப்போல இருந்தது. அவர் உடல் குதிரையோடு சேர்த்து கட்டியிருந்ததால் கீழே விழுவதற்கு வாய்ப்பில்லை. தூக்கத்தில் இருந்து எழுந்தபோதுதான் தெரிந்தது தன்னுடன் அம்மா இல்லை என்று. அம்மா இல்லாமல் தான் மட்டும் இவ்வளவு வேகத்தில் குதிரை மீது செல்வது பயமாக இருந்தது. சில பள்ளங்களில் குதிரை இறங்கி ஏறும்போது பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார். ஒருவேளை அம்மா நான் பயப்படாமல் இருப்பதற்காகச் சோதனை செய்கிறாளா? என்று நினைத்துக்கொண்டான் மகேந்திரன்.



அதே சமயம் தங்ககுமாரரால் இருள் நிறைந்த காட்டில் இளவரசரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதனால் வேறு பாதை வழியாகக் காட்டைவிட்டு வெளியே சென்று, அந்தப்பக்கம் காத்திருந்த வடவூர் படையுடன் சேர்ந்துக்கொண்டார். எப்படியும் இளவரசர் வரும் குதிரை காட்டைவிட்டு வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால் இப்படித்தான் வரவேண்டும் என்று தயாராக அங்குக் காத்திருந்தனர்.



தங்ககுமாரரின் இந்தச் சூழ்ச்சியைச் சூரியத்தேவர் கண்டுப்பிடித்திருந்தார். அதற்காக மகாராணியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விரைந்தார். ஆனால் அவரையும் கொன்று விட்டார் தங்ககுமாரர்.


ஒரு குதிரையைத் தடதடவென வரும் சத்தம் கேட்டது. தங்ககுமாரர் எல்லாரையும் தயாராக இருக்கச் சொன்னார். அந்தச் சத்தம் வரவர அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதோ வரப்போகிறது, வரப்போகிறது என்று அனைவரும் குதிரையில் வரும் அந்தப் பச்சிளம் குழந்தையின் தலையை எடுக்க ஆவலாக இருந்தனர். என்னதான் மன்னரும் மகாராணியும் இறந்துவிட்டாலும், அரியணைக்கு உரிமையுள்ள ஒரு உயிரை முடிப்பதில்தான் இந்த மொத்த சூழ்ச்சியின் வெற்றி இருக்கிறது.



காட்டின் இருட்டிலிருந்து அந்தக் குதிரை வெளிப்பட்டது. தங்ககுமாரர் கொடுத்து அனுப்பிய அதே குதிரை. மிக வேகமாக வந்த குதிரை தங்ககுமாரர் முன்னால் வந்து அமைதியாக நின்றது. ஆனால் அதில் இளவரசர் இல்லை. தங்ககுமாரர் ஏமாற்றமாக இருந்தது. உடனே அந்தப் படைகளைக் காட்டிற்குள் அனுப்பி, மொத்த காட்டையும் அலச சொன்னார். அந்தச் சிறுவன் எங்கு இருந்தாலும் அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்.


ஆம் உண்மையில் அந்தக் குதிரையில் இளவரசர் மகேந்திரன் இல்லை. இளவரசர் அங்கு இல்லாமல் இருப்பதற்கு அந்தக் குதிரை காட்டை விட்டு வெளியேறும் சில நொடிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சி அரங்கேறியது. குதிரை காட்டின் வெளிப்பக்கத்தை நோக்கி சீறிக்கொண்டிருக்கும் போது, ஒரு கை இளவரசரை அந்தக் குதிரையின் கட்டில் இருந்து விடுவித்து லாவகமாக அவரை நிலத்தில் கொண்டு நிறுத்தியது. ஒரு நிமிடம் நடப்பது அறியாமல் திடுக்கிட்ட மகேந்திரன் அந்தக் கைக்குச் சொந்தக்காரரை பார்த்தவுடன் நிம்மதியடைந்தான். அவர் அமைச்சர் மருதையப்பர்.


மருதையப்பர் இளவரசரை குதிரையை விட்டு இறக்கியவுடன் வெறும் குதிரையே காட்டைவிட்டு வெளியே வந்தது. உடனே இளவரசரை தூக்கிக்கொண்டு ஓடினார் மருதையப்பர். புதர் மண்டிய ஒரு இடத்தில் புதர்களை எல்லாம் நீக்கினார். தரையில் ஒரு இரும்பு கதவு இருந்தது. அதைத் திறந்து இளவரசரை உள்ளே அனுப்பிவிட்டு அவரும் உள்ளே நுழைந்து கதவை மூடினார். அது ஒரு சுரங்கப்பாதை. அங்கிருந்து அடுத்தச் சில மணி நேரத்திற்குள் அவர்களை வடவூரின் அந்தப்பக்கம் கொண்டு செல்லக்கூடிய பாதை. மன்னர் சிம்மவிஷ்ணு, மருதையப்பர், சூரியத்தேவர் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பாதை. அந்தச் சுரங்கத்தின் அந்தப் பக்கம் மருதையப்பருக்கு இன்னும் நெடுதூரம் பயணிக்க ஒரு குதிரை தயாராக இருந்தது.







2016 – சென்னை


"சார்...நான் போஸ்ட் மார்டம் பண்ண டாக்டர் சுரேஷ் பேசுறேன் சார். போஸ்ட் மார்டம் பண்ண ரிப்போர்ட்ஸ்ல சில புதுத் தடயங்கள் கிடைச்சு இருக்கு...அது உங்களுக்குக் கேஸ்ல யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தான் சொல்லலாம்னு கால் பண்ணேன் சார்" என்று ஆரம்பித்தது அந்த ஃபோன் கால். முரளிதரனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது என்று சொல்வதைவிட அந்தக் கட்டத்தில் அவனுக்கு அது அவசியமாக இருந்தது. கந்தசாமியின் மரணத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.



"சொல்லுங்க சார்..." என்று தேங்கிப்போயிருந்த தொண்டையைக் கனைத்துச் சரிசெய்துக்கொண்டான் முரளிதரன்.



"அந்த ஆள் நாங்க முன்னாடி சொன்ன மாதிரி ஒரு ஐரோப்பா காரரோ இல்ல வெளிநாட்டுக்காரரோ இல்லை சார்...அவர் கண்டிப்பா ஒரு இந்தியர். அதும் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா தான் இருக்க முடியும்"



"எப்படிச் சுரேஷ் சொல்லுறீங்க?"



"அவனோட டி.என்.ஏ ரிப்போர்ட்ஸ் தயார் பண்ணி இருக்கோம். அதுல இருக்கது முழுசா தென்னிந்திய, குறிப்பா தமிழ்நாட்டி டி.என்.ஏ தான்"



"ஆனா அவன் பார்க்க வெளிநாட்டுக்காரன் மாதிரிதானே இருந்தான்."



"அதுக்கும் எங்ககிட்ட பதில் இருக்கு. இறந்துப்போன இந்த ஆள் சில வருசத்துக்கு முன்னாடி முகமாற்று அறுவை சிகிச்சை பண்ணியிருக்கனும், கூடவே உடம்புல இருக்கத் தோல் எல்லாத்தையும் மாத்தியிருக்கனும். ஒன்னு இவன் ஏதும் விபத்துல சிக்கி முகம் சிதைஞ்சு அதுனால் இப்படி ஆகியிருக்கனும். இல்ல தன்னோட அடையாளத்த மறைச்சு ஏதும் வேலை செய்ய இந்த மாதிரி மாறி இருக்கனும்...தட்ஸ் ஆல் சார்..."



"ஓகே சுரேஷ். எனக்கு இந்த ரிப்போர்ட்ஸ மெயில் பண்ணிங்க...ஐ வில் ப்ரொசீட் வித் இட்..."


முரளிதரன் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அப்படி அடையாளத்தை மறைத்துக்கொண்டு அவன் இருக்க வேண்டும் என்றால் யார் அவன். அவனின் உண்மையான அடையாளம் என்ன? அவனைப் பின்னால் இருந்து யார் இயக்குவது யார்? போன்ற கேள்விகள் அவன் மனதை துளைத்தது.


*

ஜெயக்குமாரின் கார் ஆளில்லாத சாலையில் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தது. எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு கார் ஜெயக்குமார் காரை இடிப்பதுபோல வந்து மறித்து ப்ரேக் போட்டு நின்றது. ஜெயக்குமாரும் நிலைத்தடுமாறி ப்ரேக் போட்டு நிறுத்தினான். அந்த எதிர் காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கருப்பு உடையில் முகமூடி அணிந்திருந்தனர். யார் முகமும் தெரியவில்லை. ஜெயக்குமார் காரை நோக்கி வந்தனர். ஜெயக்குமாரின் காரை திறந்து அவனை இழுத்து வெளியில் போட்டு இரண்டு பேர் அடித்தனர். இருவர் காருக்குள் சென்று தங்ககுதிரை இருக்கும் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் காரில் போய் வைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தனர். இந்த இரண்டு பேரும் ஜெயக்குமாரை அடிப்பதை விட்டுக் காரில் ஏறிக்கொண்டனர். அவர்கள் கார் வந்த திசையிலேயே புறப்பட்டது. ஜெயக்குமார் தன்னுடைய காரில் ஏறிக்கொண்டு அந்தக் காரை வேகமாகப் பின் தொடர்ந்தான். அவர்கள் அடித்ததில் ஜெயக்குமாரின் உதடு கிழிந்து இரத்தம் வந்துக்கொண்டிருந்தது.






அந்தக் காரை பின் தொடர்ந்தே செல்ல அது சென்னைத் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் போய் நின்றது. ஜெயக்குமார் தனது காரை கொஞ்சம் தூரத்தில் நிறுத்திக்கொண்டே அவர்களைக் கண்காணித்தான். அந்தக் காரில் இருந்த நால்வரும் இறங்கினர். இப்போது அவர்கள் முகத்தில் முகமூடி இல்லை. அனைவர் முகமும் நன்றாகவே தெரிந்தது. அந்த நான்கு முகங்களில் ஒரு முகம் நன்றாகவே தெரிந்தது. அது வேறு யாருமில்லை. கதிர் தான்.


-தொடரும்


Leave your comments on the story below.

No comments:

Post a Comment