Friday, February 25, 2022

வானவில் விற்பனைக்கு - 2

ஆல்பினா கண்விழுத்துப் பார்த்த போது அவளை சுற்றி விமான பணிப்பெண்கள் சூழ்ந்து இருந்தனர். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டிருந்தனர். விமானம் தில்லி விமான நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தது. ஆல்பினா கண்விழித்ததும் ஒரு பணிப்பெண் அவளுக்கு எலுமிச்சை பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். இன்னொருத்தி வைன் போன்ற ஏதோ ஒன்றை எடுத்து வந்து நீட்டினாள். ஆல்பினா அந்த எலுமிஞ்சை சாறை மட்டும் குடித்துவிட்டு வைனை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மேலதிகாரி போன்ற தோற்றத்துடன் ஒருவர் வந்து ஆல்பினாவிடம் பேச ஆரம்பித்தார். விமானம் தரையிறங்கும் போது இப்படி தான் நடக்கும் என்றும் இதற்காக தாங்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் கூறிக் கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு மருத்துவர் உள்ளே வந்து ஆல்பினாவின் பக்கத்தில் அமர்ந்து அவளுடைய கையில் ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியை சுற்றி பார்க்க ஆரம்பித்தார். ரத்த அழுத்தம் நார்மலாக தான் இருக்கிறது என்று கூறிவிட்டு அவளுக்கு ஒரு மாத்திரையை கொடுத்துவிட்டு நகர்ந்தார். இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் இங்கிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


எல்லா பயணிகளும் ஆல்பினாவையே பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு கடுப்பாக இருந்தது. எல்லாரும் அவர்கள் மனதில் என்னென்ன நினைத்து இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள். அவளுக்கு ஒரு மாதிரி அசிங்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது. 


மருத்துவர்கள் பணிப்பெண்கள் எல்லாம் நகர ஆல்பினாவின் பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்தான். வயது இருபத்தி ஐந்து இருக்கலாம். பார்த்தவுடனேயே முடிவு செய்துவிடும் வடநாட்டு முகம். போலிஸ் கிராப் வெட்டு. முட்டிவரை மடிக்கப்பட்ட சட்டை என்று டிப்டாப்பாக அந்த இளைஞர் வந்து அமர்ந்தான். அது அவனுடைய இருக்கையாக தான் இருக்கும் என்று ஊகித்துக்கொண்டாள். தில்லியில் ஏறி இருப்பான். இங்கு நடந்த களேபரங்களின் காரணமாக அவனை வேறு சீட்டில் உட்கார வைத்து இருப்பார்கள். பேசலாமா வேண்டாமா என்ற என்ன ஓட்டம் அவள் மனதிற்குள் பீறிட்டு வந்தது. சிறு வயதில் படித்த அரைகுறை ஹிந்தியை வைத்து பேசிப்பார்க்கலாம் என்று நினைத்தாள். இவ்வளவு டீசென்டான ஆளுக்கு ஆங்கிலம் தெரியாமலா இருக்கும். ஆங்கிலத்தில் பேசலாம் என்று நினைத்தாள். பின்பு மீண்டும் ஹிந்தியில் பேசலாம் என்று நினைத்தாள். குழப்பத்தில் குழப்பிக் கொண்டிருந்தாள். விமானம் மெதுவாக நகர்ந்து ரன்வே பாதையில் வந்து நின்றது. வேகமெடுத்து வானில் செலுத்தியது. 


ஆல்பினா அவனிடம் பேசத் தொடங்கினாள். அரைகுறை ஹிந்தியில், "ஆப்...காஹாஹே சலியே...?"


கையில் வைத்திருந்த புத்தகத்தை கீழே இறக்கி ஆல்பினாவை பார்த்தான். "நீங்க தமிழ்லையே பேசலாம். எனக்கு தமிழ் தெரியும்..."


"இல்ல...நீங்க எங்க போறீங்கன்னு கேட்டேன்...?"


"நியூயார்க் போயிட்டு அங்க இருந்து அலாஸ்கா போறேன். நீங்க?"


"நான் நியூயார்க் தான். கார்னல் யூனிவர்சிட்டில பி.எச்.டி படிக்க போகிறேன்."


"வாவ் அருமை. நல்லா படிங்க..."


"தேங்க்ஸ். நீங்க எதுக்கு போறீங்க..."


"ஒரு சில பிஸ்னஸ் விசயமா போறேன். அங்க எனக்கு பைன் மரங்கள்ள இருந்து எடுக்குற எண்ணெய் வியாபாரம் இருக்கு... ஐ அம் அன் ஏஜென்ட் அதுக்காக போறேன்..."


"நீங்க தமிழ்நாடா.. பார்த்தா அப்படி தெரியலையே?"


"இல்ல தில்லி தான். வியாபார விசயமா இந்தியா முழுக்க சுத்த வேண்டி இருக்கும். அதுனால நிறைய மொழிகள கத்துக்கிட்டேன். தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி..."


"சூப்பர் சார்..."


"சார்ன்னு கூப்பிட வேண்டாம். எனக்கு இன்னும் அவ்வளவு வயசு ஆகல... கால் மீ ஷ்யாம்"


"ஐ அம் ஆல்பினா. சாரி ஷ்யாம். நான் மயக்கம் போட்டு விழுந்து இங்க ஒரே கூத்தா போச்சு. உங்களுக்கு ஏதாவது டிஸ்டர்ப் ஆகி இருந்தா மன்னிச்சுடுங்க..."


"இட்ஸ் ஓகே. முதல் தடவ விமானத்துல வந்த இதெல்லாம் நடக்கும் தான். இனிமே பழகிக்கனும்."


விமான பயணம் முழுவதும் இருவருக்குமான பேச்சுகள் தொடர்ந்தது. சினிமாவில் சொல்வதைப் போல ஆல்பினாவிற்கு ஷ்யாமை எங்கோ பார்த்தது மாதிரியே இருந்தது. அவன் பேசும் விதமும் என்னதான் தமிழ் நன்றாக தெரிந்தாலும் அவன் பேச்சில் இருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பிசுறுகளை ரசித்துக் கொண்டிருந்தாள். இவன் இதுபோல எத்தனை விமானங்களில் எத்தனை பெண்களிடம் பேசி இருப்பானோ என்று நினைத்துக்கொண்டாள். நியூயார்க் வந்தது. 


பரஸ்பர விடையுடன் அவன் ஆல்பினா இறங்குவதற்கு முன்பே விமானத்திலிருந்து இறங்கி வேகமாக இறங்கி சென்றான். தனக்கு அவசர வேலை இருப்பதாக கூறி சென்றான். எல்லா பயணிகளும் இறங்கிக் கொண்டிருந்தனர். அவன் இறங்கிய கொஞ்சம் நேரத்தில் தான் ஆல்பினா கவனித்தாள். அவன் தன்னுடைய சிறிய சூட்கேஸ் ஒன்றை மறந்து விட்டுவிட்டான். எப்படியும் விமான நிலையத்தில் தான் இருப்பான் கொடுத்துவிடலாம் என்று நினைத்து ஆல்பினாவே அந்த சூட்கேஸையும் எடுத்துக்கொண்டாள். விமான நிலையம் முழுக்க தேடிவிட்டாள். அவனை காணவில்லை. என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை.

செக்யூரிட்டி அதிகாரிகளிடம் கொடுத்தால் அவனை சென்று சேருமா என்று தெரியவில்லை. அந்த பெட்டியில் எந்த முகவரி டேக்களும் இல்லை. சரி நாமே வைத்து இருப்போம், எப்படியும் தேடி கொடுத்துவிடலாம் என்று அவளே எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள். பாதுகாப்பு சோதனைக்குள் அந்த சூட்கேஸ் சென்று வர அலாரம் பயங்கரமாக அடித்தது. அங்கிருந்த போலீஸ் அதிகாரி அவளை சூட்கேஸை திறக்க சொன்னார். எந்த பூட்டும் இல்லாமல் திறந்த சூட்கேஸுக்குள் சிகப்பு நிற துணியில் கையடக்க பிஸ்டல் துப்பாக்கி இருந்தது. எல்லா போலீஸ் அதிகாரிகளின் துப்பாக்கியும் இப்போது ஆல்பினாவை சூழ்ந்து குறி பார்த்தது. 


- தொடரும்

வானவில் விற்பனைக்கு - 1

 ஆல்பினாவுக்கு அதுதான் முதல் விமானப் பயணமாக அமைந்தது. அதற்கு முன் வரை அவள் எங்குமே விமானத்தில் சென்றதில்லை. சின்ன வயதில் அப்பாவோடு ரயில் பயணம் செய்வதே அவளுக்கு பெரிய கனவாக இருந்தது. அதன் பின்னர் ரயில் பயணம் என்பது அவளின் சென்னை நாட்களின் அன்றாடம் ஆகிப்போனது. ஆனால் எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பாள். என்றாவது ஒருநாள் நிறைய பணம் சேர்த்து குறைந்தபட்சம் மதுரையிலிருந்து சென்னை வரையிலாவது விமானத்தில் ஒரு முறை சென்று வர வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. பிறகொரு காலத்தில் அதற்காக பணமும் சேர்க்க ஆரம்பித்தாள். சென்னையில் விடுதியில் தங்கி கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அனுப்பும் பணத்தில் கொஞ்சத்தை எப்படியாவது மிச்சப்படுத்தி வைத்து வந்தாள். ஆனால் அது எப்படியோ செலவாகிப் போன அதிசயத்தை இன்று வரை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. 


சென்னை விமான நிலையத்தின் முகப்பில் ஆல்பினா பெரிய ட்ராலி பையுடன் நின்றுக் கொண்டிருந்தாள். டாக்ஸி ட்ரைவர் இன்னொரு சிறிய பையையும் இறக்கி வைத்துவிட்டு கிளம்பினான். பின்னாலேயே இன்னொரு டாக்ஸி வந்து அவள் அருகே நின்றது. அதிலிருந்து அவளின் அப்பா, அம்மாவும் இறங்கினர். இந்த காலத்தில் எத்தனையோ புது மாடல்களில் கண்ணாடி வந்தாலும் நான் தேடிப்பிடித்து அந்த பழைய தடிமனான கருப்பு கண்ணாடியை தான் வாங்குவேன் என்று வாங்கி போட்டிருந்தார் அவள் அப்பா. நடு மண்டை முழுமையாக சொட்டை விழுந்து, டை அடிக்கப்பட்ட சில நீண்ட முடிகள் மட்டும் அந்த சொட்டையை மறைக்க முயன்றன. சஃபாரி கோட் சூட் அவர் ஏதோ பெரிய அரசு அதிகாரியாக இருக்க வேண்டும் என்று காட்டியது. உண்மைதான். மின்துறையில் பெரிய அதிகாரி. இன்னும் இரண்டு வருடங்களில் ரிடையர்டுமண்ட். ஆல்பினாவின் அம்மா வழக்காமான ஒரு தமிழ் அம்மாவாகவே இருந்தாள். எதுவுமே தெரியாத வயதில் நடந்த கல்யாணம், அதை தொடர்ந்த குழுந்தை, அடுத்த முப்பது வருடங்களாக கிச்சன் வாசம் என்று அவளின் வாழ்க்கையில் சுவாரஸ்யமான பகுதிகள் மிகக் குறைவு. அவளின் சந்தோசங்கள் எல்லாம் தினமும் காலை அவள் கணவருக்கு மதிய சாப்பாடு கட்டிவிட்டு, டிப்பன் பாக்ஸில் அடங்காத மிச்சத்தை கொல்லைபுற குருவிகளுக்கு கொடுப்பதாகவே இருந்தது. 


பின்னால் வருசையாக டாக்ஸிகள் வர இவர்கள் மூவரும் விமான நிலையத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். ஆல்பினாவின் அப்பா பரந்தாமன் நிறைய முறை தான் விமானத்தில் பறந்ததாகவும் எப்படியெல்லாம் விமானத்தில் இருக்க வேண்டும் என்றும் ஆல்பினாவிடம் கூறிக்கொண்டு வந்தார். ஆம். இப்போது பறக்கப் போவது ஆல்பினா மட்டுமே. இங்கிருந்து நியூயார்க்கிற்கு பறக்கப் போகிறாள் ஆல்பினா என்ற 'அங்காள பரமேஸ்வரி'. பரந்தாமன்-ராஜம்மா தம்பதிக்கு பிறந்தவள் தான் இந்த அங்காள பரமேஸ்வரி. சிறு வயதில் இருந்தே இந்த பெயரை அவள் வெறுத்து வந்திருக்கிறாள். பள்ளியில் படிக்கும் போது ஆடி மாத ஒலிப்பெருக்கிகளில் இவளின் பெயர் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒலித்து வகுப்பறைகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்திவிடும். வருகைப்பதிவேட்டிலும் வருடம் தவறாது இவளின் பெயர் தவறாகவே வாசிக்கப்படும். கல்லூரி வரை பொறுத்து வந்த 'அங்காள பரமேஸ்வரி' அதற்கு பிறகு தன்னை ஆல்பினா என்று நண்பர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள். பின்னர் அனைவரின் கைப்பேசிகளிலும் அவளின் பெயர் அதுவாகவே சேமிக்கப்பட்டது. மாநிறத்திற்கும் சிகப்பிற்கும் ஒரு நிறம் இருக்குமல்லவா. அந்த நிறம். பார்ப்பவர்கள் எளிதாக அவளை வட இந்தியக்காரி என்று நினைத்துவிடுவர். போஷாக்கான உடம்புடன். தேவையான தசைகள் இருந்தும், தேவையில்லாத தசைகள் இல்லாமலும் இருந்தாள். அவளுடயை நிறத்துக்கும் அழகுக்கும் அவள் எத்தனையோ விடலைப் பையன்களை கட்டிப்போட்டு காலடியில் வைத்திருப்பாள் என்று அவள் தோழிகள் சொல்லி கேலிச் சிரிப்பார்கள். அது ஒருவகையில் உண்மையும் கூட. பள்ளியிலேயே அவளுக்கு பல காதல் கடிதங்கள் வந்து சேர்ந்தன. காதலர் தினம் என்றாலே அவள் முடிந்தவரை பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்தாள். கல்லூரியில் சொல்லவே தேவையில்லை. ஆனால் இறுதி வரை ஆல்பினா எந்த காதல் வலைகளிலும் சிக்காமல் இப்போது அமெரிக்கா பறக்கப்போகிறாள். 


நியூயார்க் கார்னல் பல்கலைகழகத்தில் ஆல்பினாவிற்கு பி.எச்.டி படிக்க ஊக்கத்தொகையுடன் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் பரந்தாமனும் ராஜம்மாவும் அமெரிக்கா செல்ல சுத்தமாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் பல்வேறு சண்டைகளுக்கும் கொஞ்சல்களுக்கும் பின் ஆல்பினா அவர்களை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாள். சொந்தக்காரர்களின் கல்யாண பேச்சுகளுக்கு இடையில் ஒரு கட்டத்தில் ஆல்பினாவிற்கு அமெரிக்கா வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற நிலையில், பரந்தாமன் வேகமாக பேசி ஆட்டத்தை கலைத்து இப்போது அவளை அமெரிக்கா அனுப்புகிறார். சங்கர் பெரியப்பா தன் வாழ்க்கை முழுவதும் இனி ஆல்பினாவிடம் பேசப்போவதில்லை என்று சபதம் செய்துக்கொண்டார். சரியாக ஒரு வாரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது.


"நான் சொல்லுறத கேளு பரமா. எதுக்கு இவ்வளோ வருசத்துக்கு பின்னாடி இந்த படிப்பெல்லாம். அதுவும் அமெரிக்கா போயி.. தேவை தானா? நம்ம தனசேகரோட பையன் டாக்டரா தான் இருக்கான். நல்ல பையன்...நல்ல சம்பாத்தியம்... நீ ஓ.கேன்னு சொல்லு நானே பாத்து பண்ணுறேன்...என்ன சொல்லுற?"


"வேணாம் பெரியப்பா. நான் படிச்சுட்டு வரேனே..இந்த வாய்ப்புலாம் யாருக்கும் கெடைக்காது..." என்று தலையை கீழே போட்டுக்கொண்டு சொன்னாள் ஆல்பினா.


"என்னமா பெரிய வாய்ப்பு. எங்க படிச்சாலும் இதே டிகிரி தானே.."


"இல்ல பெரியப்பா உங்களுக்கு புரியல. அப்பா போக சொல்லி சம்மதிச்சுட்டார். பாஸ்போர்ட் விசா எல்லாமே ரெடி. இப்போ எதும் மாத்த முடியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..." ஆல்பினாவிற்கு கோபம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. கையை பின்னால் கட்டிக்கொண்டு முறுக்கிக் கொண்டிருந்தால். இந்த ஆளை தாடையில் ஒரே குத்தாக குத்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டாள். 


"உங்க அப்பாவையே நான் தான் படிக்க வச்சேன். உன்ன பாத்துக்க எனக்கு தெரியாத... உனக்கு அமெரிக்கா பாக்கனும்னா சொல்லு.. கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் பொயிட்டு வா... என் செலவுல நானே அனுப்பி வைக்கிறேன்...என்ன சொல்லுற..." என்று நக்கலாய் சிரித்தார் சங்கர் பெரியப்பா. 


"யோவ்...உனக்கு சொன்னா புரியாதா...அறிவில்ல உனக்கு..." என்று சீறிவிட்டாள் ஆல்பினா. பரந்தாமன் ஓடி வந்து ஆல்பினாவை ஒரு அறை அறைந்து சங்கரிடம் மன்னிப்புக் கேட்டார். 


"இனிமே உன் வீட்டு பக்கம் வந்தாலோ...இவ கல்யாணம் பத்தி பேசனாலோ என்ன செருப்ப கழட்டி அடி... இவ நல்லாவா இருப்பா நாசமா தான் போவா..." என்று திட்டிக்கொண்டே அன்று வெளியே போனார். பின்னர் அம்மாவும் வந்து ஆல்பினாவை இரண்டு அடி போட்டார். ஆனால் அவரை திட்டிவிட்டோம் என்று ஆல்பினா மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். 



செக்-இன்களை தாண்டி ஆல்பினா உள்ளே சென்றாள். பரந்தாமனும் ராஜம்மாவும் கையசைத்தனர். பரந்தாமன் வந்த கண்ணீரை அடக்க முடியாமல் தோற்றுப்போனார். ராஜம்மா எந்த முயற்சியும் இல்லாமல் விம்மி விம்மி அழுதாள். ஒரே பெண் அல்லவா! 


முதல் அனுபவமாய் இருந்தது ஆல்பினாவிற்கு எல்லாமே. சன்னலுக்கு அருகே இருக்கை கிடைத்தது. ஒரு பணிப்பெண் வந்து சீட் பெல்ட் போடும் யுக்திகளை விளக்கிக் கொண்டிருந்தாள். முதலில் தடுமாறிய ஆல்பினா பின்னர் போட்டாள். எல்லா பயணிகளும் ஏறிக்கொண்டனர். விமானம் கிளம்பப் போவதாய் அறிவிக்கப்பட்டது. மெதுவாக விமானம் நகர ஆல்பினாவிற்கு அடிவயிற்றில் ஏதோ அழுத்துவது போல இருந்தது. விமானத்தின் வேகம் அதிகரித்தது. ஆல்பினா கண்ணை மூடிக்கொண்டாள். வேகமெடுத்த விமானம் விண்ணில் தன்னை செலுத்திக்கொண்ட பின் தடுமாற்றங்களின்றி நிதானமானது. ஆல்பினா கண்ணைத் திறந்தாள். அவள் மேகங்களுக்கு மேலே நகர்ந்துக் கொண்டிருந்தாள். மாலை சூரியனின் கதிர்கள் ஒவ்வொரு மேக உருண்டைகளில் மேலும் பட்டு பட்டு அவள் கண்ணை கூசியது. அவள் பக்கத்து இருக்கை காலியாக இருத்தது.


சில மணி நேரத்திற்கு பின் விமானம் தில்லியில் ஒரு மணிநேரம் நின்றுவிட்டு செல்லும் என்ற அறிவிப்பு வந்தவுடன் விமானம் இறங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தன. விமானம் இறக்குவதற்காக தரையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அதிகமாக ஆடியது. ஆல்பினாவிற்கு ஏதோ சரியில்லாதது போல தோன்றியது. கண்கள் இருண்டு தன்னால் மூடிக்கொண்டன. ஆல்பினா மயங்கிப் போனாள்.


- தொடரும்...