Saturday, January 2, 2021

ஐந்தாம் வகுப்பு அ பிரிவு

 சந்திரா மாராப்பை போர்த்திக்கொண்டு எழுந்த போது அவளோடு சேர்ந்து கொஞ்சம் மணலும் அவள் முதுகு மற்றும் தொடையில் இருந்து உதிர்ந்துக் கொட்டியது. அந்த இருளிலும் அவள் தொடைகள் மின்னியது. ரவிக்கைக்கு மேலே பரவலாக தெரிந்த முதுகில் கொட்டாமல் பிடித்துக்கொண்டு மிச்சமிருந்த மணலையும் கையை எக்கி தட்டிவிட்டாள். சேகர் அந்தப் பக்கமாக திரும்பி கறைப்படிந்த தன் லுங்கியை சரி செய்துக் கொண்டிருந்தான். சந்திராவுக்கு முதுகில் இருந்து இப்படி மணல் கொட்டுவது ஒன்றும் புதிது இல்லை. இன்று மணலை பார்த்த அவள் முதுகு இன்னும் பலவற்றைப் பார்த்து இருக்கிறது. பிசுபிசுப்பான களிமண்ணில் ஒருமுறை படுத்து எழுந்த போது முதுகு முழுவதும் சேறாகிப் போனது. பின் வீட்டிற்கு சென்று தேங்காய் நாற்றை வைத்து தேய்த்துக் கொண்டிருந்தாள். ஒரு முறை பட்டப்பகலில் கடற்கரை மணலில் படுக்க வேண்டியதாய் போய் விட்டது. முதுகு முழுவதும் தீக்காயங்கள் போல கொப்பளித்து விட்டன. மருந்து தேய்த்துக் கொண்டு வீட்டிலேயே படுத்தவள் தான், இரண்டு வாரம் தொழில் பக்கமே போகவில்லை. இன்னும் ஒருமுறை முட்புதருக்குள், சொல்லவா வேண்டும்? காயம் ஆறுவதற்குள் ரண வேதனை தான். 


மேற்கூரையே இல்லாமல் நான்கு பக்க சுவர்களில் இரண்டு மட்டுமே நின்று, மற்ற இரண்டு பக்கமும் சரிந்துக் கிடந்த எருக்கஞ் செடிகள் சூழ்ந்த ஒரு காட்டின் இருட்டிலிருந்து சந்திராவும் சேகரும் ஆடைகளை சரி செய்துக் கொண்டு வெளியே வந்தனர். ஜனக்கூட்டத்தின் சத்தமும் வாகனங்களின் சத்தமும் அவர்களின் இருப்பை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டது. சந்திராவும் சேகரும் வெவ்வேறு திசைகளில் சாலை ஓரமாக நடக்கத் தொடங்கினர். இருட்டைக் கடந்து வெளிச்சத்திற்கு சென்று நின்றுக் கொண்டாள் சந்திரா. சேகர் அவளை திரும்பிப் பார்க்காமல் வேறு திசையில் சென்றுக் கொண்டிருந்தான். சந்திரா நின்ற இடம் ஒரு பேருந்து நிறுத்தம் போல, ஒரு பேருந்து வந்து நின்றதும் அதில் ஏறிக் கொண்டாள். சேகர் குறுக்கு சந்திலிருந்து மெயின் ரோட்டில் ஏறி ஒரு பெரிய மளிகைக் கடையில் நுழைந்து உள்ளே சென்றான். மடித்து சுருட்டப்பட்ட ஒரு செய்தித்தாள் அவன் தலையில் மடார் என்று அடித்தது, கூடவே ஒரு குரலும்..."ஏன்டா...வேல எம்புட்டு கிடக்கு இங்க...ஒன்னுக்கு இருக்க உனக்கு ஒருமணி நேரமா..." கல்லாப்பெட்டியிலிருந்து முதலாளி கத்துவதை காதில் கேட்காதது போல சரக்கு வைக்கும் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். பெரிய சாக்கு மூட்டையிலிருந்து மிளகாயை பிரித்து சின்ன சின்ன கவர்களில் போட ஆரம்பித்தான்.

சந்திரா சென்ற பேருந்தில் யாருமே இல்லை. முழுவதும் காலியாக இருத்தது. சந்திராவுக்கு முன்னர் இரண்டு சீட்டு தள்ளி ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். சந்தைக்கு காய்கறி எடுத்து வந்திருப்பாள் போல. எதுவும் விற்காமல் அப்படியே இருந்தது. பாவம் அவள் வயதிற்கு எப்படி அந்த கூடையை இறக்கி வைப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் சந்திரா. ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே அந்த பாட்டியே கூடையை அலேக்காக தூக்கி இறக்கி வைத்தது அவளுக்கு பிரம்மிப்பாய் இருந்தது. அவள் வியர்வை அவளுக்கே எரிந்தது. நெருப்பு பட்டது போல. இல்லை "அந்த சேகர் பைய மொளவாய தொட்டுட்டு வந்து இருப்பான்" என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள். அவள் தாடையிலிருந்து வழிந்த ஒரு சொட்டு வியர்வை மார்பு பள்ளத்திற்குள் இறங்கி மேலும் எரிச்சலாக்கியது. அவளுக்கு கோபத்தை விட வெட்கம் தான் தலைக்கு ஏறியது. அந்த கண்டெக்டர் அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே இருட்டில் எதுவும் தெரிந்த பாடில்லை. வேகமாக செல்லும் பேருந்து குளிர் காற்றை வாரி அப்படியே அவள் மீது அடித்தது. சன்னலை சாத்த விருப்பமில்லாமல் மேலும் அந்த காற்றை சுவாசிக்கலானாள். அப்படியே சன்னல் கம்பியில் தலையை சாய்த்து கண்களை மூடினாள். தேங்கியிருத்த கொஞ்சம் கண்ணீர் வழிந்து பேருந்தின் வேகத்தில் துகள் துகளாய் உடைந்தது. சேகரை அவள் முதல் முதலாய் சந்தித்த நாளின் நினைவுகள் வந்தது.

***

நகரங்களை விட்டு வெளியே இருக்கும் ஊர்களில் அந்த அந்த ஊருக்கான, கோவிலுக்கான திருவிழாக்கள் பிரசித்தியாக இருக்கும். நகரங்களில் அந்த நிகழ்வுகள் குறைவாக இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தான் நகரங்கள் ஜொலிக்கும். நகரத்து கடைவீதிகளில் அந்தந்த பண்டிகைக்கான பொருட்கள் வியாபாரத்தில் இருக்கும். இங்கு நகரத்து குடும்பங்கள் என்று ஒன்று இல்லவே இல்லை. எல்லாம் கிராமத்திலிருந்து பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஏதோ ஒரு தலைமுறையில் வந்தவர்கள். பெரிய ஜவுளிக்கடைகள் முதல் ரோட்டுக் கடைகள் வரை மக்கள் கூட்டம் அலைமோதும். அதை நம்பியே பெரிய பொருளாதாரம் நகரங்களில் இருக்கிறது. அந்த இரவு வயிற்றை நிரப்ப வேண்டிய கட்டாயம் நகரத்திற்கு இருக்கிறது. ஒரு சின்ன தெருவோர வளையல் கடையில் எந்த அளவிற்கான லாபம் கிடைத்துவிடுவதாய் நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த கடை முதலாளிக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் இருநூறு ரூபாயில் முப்பது ரூபாயை அந்த கடையில் வேலை செய்யும் ஒரு பையனுக்கு கொடுத்தாக வேண்டும். அந்த பையன்தான் சேகர்.

சேகரை சந்திரா முதல் முதலில் அந்த தீபாவளி கடைவீதியில் வளையல் கடையில் தான் பார்த்தாள். மஞ்சள் நிறப் புடவையில், கால்வாசி மார்புகளை வெளியே தெரியவிட்டு, தன் முகத்தைப் போலவே உடலும் சிகப்பு தான் என்பதைக் காட்ட இடுப்பை பெருமளவு தெரியப்படுத்துவாள். தலையில் மல்லிகைப்பூ இல்லாமல் சந்திராவை பார்க்க முடியாது என்று அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும். பேருந்து நிறுத்தத்தை அடுத்து உள்ள ஒரு புதரின் பக்கம் நிற்பாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஆண்கள். பெண்களை ஆண்கள் வகைப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் சந்திரா மொத்த ஆண் கூட்டத்தையும் தனக்கு ஏற்றது போல வகைப்படுத்தி இருக்கிறாள்.

பெரும்பாலும் கல்யாணம் ஆனவர்கள் தான் தன்னிடம் வருவதாய் சொல்லிக் கொள்வாள். பெரும்பாலும் புதரின் நடுவில் இருக்கும் பாழடைந்த வீட்டில் தான் எல்லாம் நடக்கும். கொஞ்சம் பணக்கார ஆண்கள் காரில் வந்து கூட்டிப்போவார்கள். ஏதாவது ஹோட்டலில் ஏசி காற்றில் கொஞ்சம் நேரம் இருப்பாள். தான் எப்படி இந்த தொழிலுக்கு வந்தேன் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ள மாட்டாள். அந்த ஊரில் அது யாருக்குமே தெரியாது. ஒரு சமயம் ஒரு காலேஜ் பையன் கூட்டிச் சென்றுள்ளான். அங்கு போய் பார்த்தால் ஐந்தாறு பேர் இருந்திருக்கின்றனர். அந்த இரவிற்கு பின் அத்தோடு தொழிலை விட்டுவிட்டு ஒரு ரோட்டு ஓரத்தில் ஒரு பஜ்ஜி கடை போட முடிவெடுத்தாள். ஆனால் அவள் செய்த தொழில் அவளை துரத்தியது, கழுத்தை நெருக்கியது.

ஒரு நாள் இரவு வெகு நேரத்திற்குப்பின் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது நான்கு பேர் அவளை வழி மறித்தனர். அவள் பாத்திரங்களை தள்ளிவிட்டு அவளை அடித்து கீழே தள்ளி, சேலையை உருவச் சென்ற போது ஒரு சில்வர் தூக்கு சட்டியை ஒருத்தன் தலையில் எடுத்து ஓங்கி அடிக்க, அவன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. மற்றவர்கள் அதை பார்ப்பதர்க்குள் சந்திரா இருள் புதரில் மறைந்து விட்டாள். இப்படி தினமும் ஒவ்வொரு பிரச்சினை என இருந்த சந்திரா மீண்டும் இந்த தொழிலுக்கே திரும்பிவிட்டாள்.

சந்திரா முதல் முதலில் சேகரை தீபாவளி கடைத்தெருவில் ஒரு வளையல் கடையில் பார்த்தாள். ஒவ்வொரு கடையிலும் விளக்கொளிகள் மின்னியது. வளையல் கடைகளில் அவை கூடுதலாகவே மின்ன வேண்டும். அப்போது தான் வளையல்கள் ஜொலிக்கும். சந்திரா வருவதைப் பார்த்து சேகரின் முதலாளி இடத்தை காலி செய்துவிட்டார். அவர் சந்திராவுக்கு ஏதோ பாக்கி தர வேண்டும் போல. சேகர் சந்திராவின் பெயரை கேள்வி பட்டிருந்தாலும் அவளை பார்த்ததில்லை. சந்திரா சேகர் முன் வந்து நின்றாள்.

"ஏம்பா தம்பி. இந்த பச்ச வளவி எம்புட்டு..."

"இது பத்து...அது இருபது...அந்த கல்லு வச்சது அம்பது..." என்று எல்லாருக்கும் சொல்லும் பழகிப்போன ஏற்ற இறக்கத்தோடு சொன்னான்.

"ஆங்...எல்லாருக்கும் ஒரே வெல...எனக்கும் ஒரே வெலயா..."

"யாரா இருந்தாலும் ஒரே வெல தானுங்க...கடைவீதியில வந்த கலவரம் பண்ணுரீகளே. நான் என்ன கடை முதலாளியா. நானே அஞ்சுக்கும் பத்துக்கும் ஒண்டிக்கிட்டு இருக்கேன்..."

சந்திராவுக்கு உண்மையில் பெரிய மாறுபாடுகள் தெரிந்தது. அவள் ஆண்கள் என்று வகைப்படுத்தியிருந்த எந்த ஒரு வகையிலும் சேகர் வந்து விழவில்லை. அவன் தனித்துவமான இருந்தான். அவன் கண்கள் அவள் மார்பை பார்க்காமல் கண்களைப் பார்த்தது அவளுக்கு பிடித்திருந்தது.

"வளவிலாம் வேணாம்...உன் பேரு என்ன சொல்லுறீயா ?"

"என் பேரு சேகரு. ஏன் என்னாத்துக்கு? உங்க பேரு என்ன?"

"என் பேரு சந்திரா" என்றாள்.

சேகருக்கு ஒரு நிமிடம் சுர்ரென்று இருந்தது. மஞ்சள் நிற விளக்கொளியில் அவள் ஏற்கனவே போட்டிருந்த மஞ்சள் தங்கமாக மின்னியது. அவள் மேலும் அழகாகக் தெரிந்தாள். ஒருவேளை பெயர் சொல்லாமலே போயிருத்தால் கூட இவ்வளவு அழகாய் தெரிந்திருக்க மாட்டாள் போல.
"ஓ...இவ தான் சந்திராவா? இவள தான் எல்லாரும் தேவடியான்னு சொல்லுறானுங்களா? நல்ல பொண்ணாட்டம் இருக்காளே? என்ன கொறச்சல் இவளுக்கு இந்த தொழில் பாக்குற? என்ன கஸ்டமோ? இனிமே இவள எவனாது தேவடியான்னு சொன்னா பல்ல ஒடச்சருனும்? இல்ல இல்ல வேணாம், அப்புறம் என்ன தேவடியா புருசன்னு சொல்லி கலாய்ப்பானுங்க...இருக்கட்டுமே. அந்த பெயர் இருந்தா என்ன தப்பு?" என்று மனதிற்குள்ளே பேசிக் கொண்டிருந்தான்.

அப்புறம் சந்திரா ஒரு வளையலை தேர்ந்தெடுத்து கையில் போட்டுப் பார்த்தாள். அது கையிலேயே மாட்டிக் கொண்டது. சேகர் அதை கழற்ற முற்பட்டு முடியாமல் போனது. பின் அதையே வாங்கிக் கொண்டாள். அன்று வளையலை எடுக்க சேகர் முயன்ற போது அவன் கை படப் பட சந்திரா முதல்முறையாக வெட்கத்தை உணர்ந்தாள்.

***

அந்த திருவிழா கடைவீதியில் முதல் முறையாக சந்தித்த பின்னர் சேகரும் சந்திராவும் நான்கு வருடமாக காதலித்து வந்தார்கள். சந்திரா அந்த தொழிலையே தான் செய்து வந்தாள். அது சேகருக்கு எந்தவிதமான தப்பாகவும் தெரியவில்லை. சந்திராவுக்கும் உண்மையான காமம் என்ன என்று இப்போது புரிந்திருந்தது. சேகரோடு சேரும் போதும் மற்ற ஆண்களோடு பணத்திற்காக சேரும் போதும் இருக்கும் வித்தியாசம் அவளுக்கு நன்கு தெரிந்தது. சேகருக்கும் அந்த வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். இது வெறும் தொழில் என்று புரிந்திருக்க வேண்டும். இரண்டு பேரும் காதலிப்பதை அந்த ஊரில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். சேகருக்கும் ஒரு பெரிய மளிகை கடையில் வேலைக்கிடைத்தது. ஒரு நாளிற்கு இருநூறு ரூபாய் கிடைத்தது. சேகர் அதை பத்திரமாக சேர்த்து வைத்து வந்தான். ஆனால் அவன் கடையின் முதலாளி அவனை ஏதோ விலைக்கு வாங்கிய மாடு போல நடத்தி வந்தார். ஆனால் சேகருக்கும் சந்திராவுக்கும் நிறைய திட்டங்களும் கனவுகளும் முளைத்திருந்தன.

இரவு மூன்று மணிக்கு மேலிருக்கும். ஆள் ஆரவாரமற்ற குளத்தின் கரையில் மல்லாக்க படுத்திருந்த சேகரின் மார்புமீது தலையை வைத்து படுத்திருந்தாள் சந்திரா.

"ஏன்யா...உனக்கு என்ன புடிக்குமா?"

"புடிக்காமவா நாலு வருசம் உன்ட வந்து பேசிட்டு இருக்கேன்"

"ஊர்ல இருக்க பூரா பயலும் தான் வந்து பேசுறான்" என்று கோபித்துக் கொள்வது போல தலையைத் திருப்பிக் கொண்டாள் சந்திரா.

"அது வேற...இது வேற...சந்திரா"

"எப்படி அது வேற...?"

"அது உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. சரி, நான் ஒன்னு சொன்னா கேட்பியா ?"

"இந்த தொழில விட்டுறேன். நம்ம வேற ஊருக்கு போவோம். சென்னைக்கு போவோம்...சரியா?"

"எனக்கு மட்டும் என்ன ஆசையா...காலுக்கு நடுவுல மரத்துப்போயி வேல பாக்க...இன்னும் இருபதாயிரம் தான்...அத மட்டும் சம்பாரிட்டா நாலு லட்சம் வந்துடும்..."

"அத வச்சு...???"

"சென்னைப் போவோம். புது வாழ்க்கை. புது துணி மணிங்க. புது வேலை. ஒரு வாடகை வீடு. கொஞ்ச நாள் கழிச்சு புது வீடு கட்டிக்கலாம்..."

"ம்ம்ம்...நம்ம பசங்கள பெரிய பெரிய ஸ்கூல்ல சேர்க்கலாம். அப்படியே அங்கையே செட்டில் ஆகிடுவோம். திரும்ப இந்த ஊர் பக்கமே வரக்கூடாது..."

"ஆமா...வரக்கூடாது.." என்றவாறே சந்திரா வானத்தைப் பார்த்துப் படுக்க நிலவு மேகத்தை விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தது.

****

அன்று இரவு சந்திராவும் சேகரும் பேருந்தில் சென்னை செல்வதாக திட்டம். சந்திரா நான்கு லட்சம் பணம் சேர்த்துவிட்டாள். ஆனால் இடையில் போலீஸ்காரர்களிடம் ஒரு நாள் மாட்டிக் கொண்டாள். சட்ட ரீதியான நடவடிக்கைகளை விட சந்து பொந்திற்குள் குடித்தனம் நடத்துவதையே அவர்கள் விரும்பியதால் சந்திரா எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டாள். அடுத்த ஒரு வாரம் அவள் வெளியே எங்கேயும் வர முடியவில்லை. ஏதாவது போலீஸ் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவு தான். சேகரும் தன் மளிகைக் கடை முதலாளியிடம் சொல்லிக்கொண்டு வர முடியாது. அது பாக்கி இது பாக்கி என்று சொல்லி போக விட மாட்டார். கூடவே மண்டை மேலேயே அடிகள் விழும். ஆனால் இதை எல்லாம் தாண்டி அவர்கள் இன்று இரவு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து இருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தித்துக் கொள்வதாய் திட்டம்.

இரவு பத்து மணி என்னும் போது பேருந்து நிலையத்தின் கூட்டம் கால்வாசி குறைந்து இருக்கும். சந்திரா ஒரு துணியால் தன் முகத்தை மூடியிருந்தாள். ரொம்ப மூடியிருந்தாலும் சந்தேகம் வந்துவிடும். குளிருக்கு போர்த்தி இருப்பது போல தலையில் முக்காடு போட்டும். சால்வையால் தன் முகத்தையும் சுற்றியிருந்தாள். பத்து மணிக்கு சென்னை செல்லும் பேருந்து வந்து நின்றது. அடுத்த அரைமணி நேரத்தில் அது கிளம்பிவிடும் என்றும் அதுதான் இன்றைக்கு கடைசி பேருந்து என்றும் கண்டெக்டர் கத்தி விட்டு சென்றார். யாருமே இன்னும் ஏறாத அந்த பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக பேருந்தில் கூட்டம் வர ஆரம்பித்தது. எல்லாரும் சந்திராவையே பார்ப்பது போல இருந்தது அவளுக்கு. கூனி குறுகி பேருந்தின் ஒரு சீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்.

மணி பத்தரை தொட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் விசில் சத்தங்கள் காதை கிழித்தது. சேகர் இன்னும் வரவில்லை. சந்திராவின் கலங்கிய கண்கள் சன்னல் வழியாக சேகரைத் தேடிக்கொண்டிருந்தன. சந்திரா உட்கார்ந்திருந்த சென்னைப் பேருந்து கிளம்பி அதிர்ந்தது. மெதுவாக பேருந்து நிலைத்தில் இருந்து வெளியே செல்ல தயாரானது. சேகர் இன்னும் வரவே இல்லை.

வேகம் கிளப்பிய பேருந்திற்கு தடையாய் பேருந்தை நிறுத்தச் சொல்லி ஒரு சத்தம். கண்டக்டர் விசில் ஒலித்தது.

***

அந்த வகுப்பின் கரும்பலகையில் ஆங்கிலத்தில் பழமொழி கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழே "V - A" என்று எழுதியிருந்தது. ஒரு மூலையில் அன்றைய தேதியும் இன்னொரு மூலையில் மாணவர்கள் எண்ணிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அன்று தான் முதல் நாள். பெரிய கண்ணாடி போட்டிருந்த ஆசிரியை ஒவ்வொரு ஆளாக அறிமுகம் செய்ய சொன்னார். முதல் வரிசையில் முதல் ஆளாக இருந்த ஒரு பெண் எழுந்து தன்னை தடுமாறும் ஆங்கிலத்தில் இப்படி அறிமுகம் செய்துக்கொண்டாள்.

"ஐ அம் எஸ்.மாலினி, மை ஃபாதர் நேம் இஸ் சேகர், ஹீ இஸ் சூப்பர்வைசர் இன் ஃபேக்டரி, மை மதர் நேம் இஸ் சந்திரா, ஷீ இஸ் இன் ஷாப்பிங் மால்."