Saturday, August 8, 2020

பகுதி 8 - இதுவல்ல உன் இடம்

மந்திராயினி தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சையமான அந்தக் கண்கள் தன் முகத்தை விலக்கிக் காட்டியது. அந்த முகத்தைப் பார்த்ததும் அவள் உடம்பில் பாய்ந்த அத்தனை வாள்களின் வலியை விட அதிகமாக இருந்தது. அவளால் அந்த வலியை கூட வார்த்தைகளால் பேச முடியவில்லை. அந்த முகம் அவள் பக்கத்தில் வந்து வில்லத்தனமான அந்தச் சிரிப்பை உதிர்த்தது. அந்த முகம் தான். அவள் நிறைய முறை பார்த்த முகம். ஏன், இப்போது கூடப் பார்த்துவிட்டு வந்த முகம். அந்த முகம் தங்ககுமாரருடையது. இத்தனை சதிகளுக்கும் காரணமான ராஜ துரோகி தங்ககுமாரர் என்று நினைக்கும்போது மந்திராயினியிக்கு வருத்தமாக இருந்தது. பல்லவ அரசின் விசுவாசம் மிக்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தங்ககுமாரரா இதைச் செய்தார் என்ற கேள்விகள் அந்த இறுதி நேரத்தில் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.


தங்ககுமாரர் தன் முகமூடியை கழற்றிவிட்டு தன் வாளை உறையில் நுழைத்தார். இதற்கு மேல் மந்திராயினியால் தனக்கு ஆபத்து இல்லை என்பது போல இருந்தது அவரின் முகபாவனை. வீழ்ந்துக்கிடந்த மந்திராயினி அருகில் மண்டியிட்டு அவள் காதுகளில் அருகில் சென்று பேசினார்.



"பரவாயில்லை. நல்ல வீரமானவள் தான் நீ. ஆனால் உன்னுடைய வீரத்திற்கு இந்தப் பல்லவ தேசம் சரியான இடம் கிடையாது. அதனால்தான் உன்னைச் சொர்க்க தேசத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தேன் ....ஹாஹாஹா..." அவரின் சிரிப்புச் சத்தத்தில் அந்தக் காடு அதிர்ந்தது.



மந்திராயினியின் கண்கள் இவர் ஏன் இப்படிச் செய்தார் என்று கேட்பதுபோல இருந்தது. தங்ககுமாரர் தொடர்ந்தார்,


"என்னை மன்னித்துவிடு மந்திராயினி எனக்கு வேறு வழியில்லை. காலம் காலமாக இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் வம்சத்தின் விதியை மாற்ற நினைத்தேன். நான் நல்லவனாகத்தான் இருந்தேன். இந்தத் தேசத்திற்கு என் செல்வத்தை முழுவதும் கொடுத்தேன். ஆனால் எங்களுக்கென்ற ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துக்கொண்டே இருந்தது. மாபெரும் குமார சாம்ராஜ்யம் அமைய நான் எதுவும் செய்யாமல் போக எனக்குத் தோணவில்லை. இதோ இந்தச் சாளுக்கியர் படையின் துணையுடன் இந்தப் பல்லவ தேசத்தைப் பிடிக்கப்போகிறேன். ஆம்! சூழ்ச்சி தான். இது மதிநுட்பம் வாய்ந்த சூழ்ச்சி. பெருந்தவம். உன் கணவர் சிம்மவிஷ்ணுவையும் நான் தான் விஷம் வைத்துக் கொன்றேன். இதோ இப்போது உன்னைக் கொன்றுவிட்டேன். சிறிது நேரத்திற்கு முன் விரைந்து சென்றதே, உன் மகனை கட்டிய குதிரை அது இந்தக் காட்டைத் தாண்டி வடவூருக்குச் செல்லும் அடுத்த நொடி வடவூர் படைகள் அவனையும் கொன்றுவிடுவார்கள். அவர்களும் எனக்குத் துணையாக இருக்கிறார்கள். நாளை விடியும்போது என் பேரன் முத்துக்குமாரன் இந்தத் தேசத்தின் குமார சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடிசூட்டியிருப்பான். இனி வம்சம் வம்சமாக உங்களுக்குத் தங்ககுதிரை செய்யும் வேலை எங்களுக்கு மிச்சம்...ஹாஹாஹா..." என்று மீண்டும் சிரித்தார் தங்ககுமாரர்.


மந்திராயினி தேவி இளவரசர் சென்ற குதிரை போன திசையில் தன் தலையைத் திருப்பிப் பார்த்தார். பாதுகாப்பு என்று நினைத்து தன் மகனை ஆபத்தை நோக்கி அனுப்பி விட்டோமே என்று வருந்திக்கொண்டிருக்கும் போதே, தங்ககுமாரர் ஒரு குறுவாளை எடுத்து அவள் கழுத்தில் குத்த, மிச்சமிருந்த உயிரும் பிரிந்தது.


தங்ககுமாரர் சொன்னது போல மந்திராயினியின் வீரத்திற்கு இந்த உலகம் இடம் கிடையாது. இது சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்தது. தங்ககுமாரர் மற்ற இரண்டு வீரர்களுடன் இளவரசர் குதிரை சென்ற திசையில் விரைந்தார்.






நடந்த அனைத்து சம்பவத்தையும் அந்தக் காட்டில் இருந்த ஒரு பழங்குடி தலைவனைப் பார்த்தான். அவனால் உதவி செய்ய வரமுடியவில்லை. ஆனால் மந்திராயினி யாரோ மிக வீரமான பெண் எனவும் அவளை எல்லாரும் சேர்ந்து கொன்றுவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. மந்திராயினி அவன் கண்களுக்கு தெய்வம் போல தெரிந்தாள். அந்தப் பழங்குடியின் வீரத்திற்கான தெய்வமாகவே ஆகினாள் மந்திராயினி. அவள் இறந்த அந்த இடத்திலேயே ஒரு சிறிய கோவில்கட்டி அந்தப் பழங்குடியினர் வணங்க ஆரம்பித்தனர். நாளடைவில் அந்த இடத்தில் அவளுக்கு ஒரு சிலையும் வந்தது. ஒரு வீரப்பெண் தன் குழந்தையை முதுகில் சுமந்துக்கொண்டு கையில் வாளுடன் இருப்பதுபோன்ற சிலை. பின்னர் அந்தப் பகுதியின் தெய்வமாக மாறினாள் மந்திராயினி. யாருக்கும் அவள் பல்லவ தேசத்தின் மகாராணி என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவள் வீரத்தின் வடிவம் என்று தெரிந்திருந்தது.


*


ஜெயக்குமாரும் சதீஷும் ஐந்து வருடத்திற்கு முன் அந்தக் கல்வெட்டை படித்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த தங்ககுதிரை சிலை அந்தக் கல்வெட்டிற்கு அடியிலேயே இருக்கும் என்று தப்பாக ஊகித்து விட்டனர். எப்போதும் இதுப்போன்ற கல்வெட்டுகளில் ஒன்று அந்தப் பொருள் இருக்கும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது அந்தப் பொருள் அந்தக் கல்வெட்டுப் பக்கத்திலேயே எங்கேயாவது கிடைக்கும். ஆனால் அங்கெல்லாம் கிடைக்காமல் காஞ்சிபுரத்தின் ஆய்விலிருந்து இவ்வளவு தூரம் தள்ளியிருக்கும் வடவூரில் எப்படி வந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.


தங்ககுதிரையை எடுத்தபின் அதனைப் பத்திரமாக ஒரு பெட்டியினுள் வைத்து அதைச் சீல் செய்தான் ஜெயக்குமார். அந்தத் துணியையும் மண் பானையையும் அரிசியையும் தனித்தனியாகப் பெட்டிகளில் போட்டு அதைப் பத்திரப்படுத்தினான். அனைவரையும் வீட்டிற்குப் பத்திரமாகப் போகச் சொல்லிவிட்டு அந்தச் சிலையை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு தானும் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வண்டியை எடுக்கக் காரில் ஏறினான் ஜெயக்குமார். கதிர் அப்போது வந்தான்.



"அப்போ இது தானே சார் அந்த ரகசியம்...?"



ஜெயக்குமாரின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.



"ரகசியம்ன்னு சொல்ல முடியாது கதிர்...இது ஒரு கனவு... இதுக்காகத் தான் நான் என்னோட நண்பன இழந்து இருக்கேன்"



"இந்தச் சிலையோட வரலாற்ற பத்தி சொல்லவே இல்லையே சார்...உங்களுக்கு அது தெரியும் தானே சார்..."



"அது ஒரு பெரிய கதை கதிர். பல்லவ மன்னர்கள் முடிசூட்டுற விழாவில இந்த மாதிரி ஒரு தங்ககுதிரை சிலையை ஒரு குடும்பத்த சேர்ந்தவங்க பரிசா கொடுக்குறது ஒரு வழக்கமா இருந்துட்டு வந்துச்சு...சிம்மவிஷ்ணுனு ஒரு மன்னர் வரைக்கும்...அதுக்கு அப்புறம் வந்த மகேந்தரவர்மன் சின்ன வயசிலையே நாட்ட விட்டு துரத்தப்பட்டு மறுபடியும் சோழர்களோட உதவியோட அவன் திரும்ப அரசன் ஆனான். இது அவனுக்காகச் செய்யப்பட்ட தங்ககுதிரை. ஆனா சின்ன வயசுல அவனுக்கு இது போய்ச் சேரவே இல்லை. இத புதைச்சு வச்சுட்டாங்க...அதுதான் அந்தக் கல்வெட்டுலையும் இருந்துச்சு. நானும் சதீஷும் அதைத் தப்பான இடத்துல தேடிட்டு இருந்து இருக்கோம்..."



"அப்போ இந்தச் சிலைக்காகத் தான் உங்க நண்பர் சதீஷ் உயிர விட்டாரா சார்...ஆனா யாரோ ஒருத்தர் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லைன்னு சொல்லுறாங்களே..."



"என்ன கதிர் பேசுறீங்க...எதுவா இருந்தாலும் நாளைக்குக் காலையில ஆபீஸ் வாங்க பேசிக்கலாம்"



ஜெயக்குமாரின் கார் வேகமாக அந்த இடத்தில் இருந்து இருளுக்குள் மறைந்தது. கதிரும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினார்கள். ஒரு வருடம் அவர்கள் வேலை செய்த அந்த இடத்தை நாளை அவர்கள் காலி செய்துவிடுவார்கள்.


ஜெயக்குமாரின் கார் வடவூர் சாலைகளை விடுத்து முக்கியச் சாலைகளுக்கு வந்தது. தெரு விளக்குகள் ஏதும் இல்லாத சாலையில் எந்த வண்டிகளும் போய் வராமல் காலியாக இருந்தது. மணி ஒன்று ஆகிக்கொண்டிருந்தது.


*


கந்தசாமியின் இறப்பினால் முரளிதரன் கொஞ்சம் ஆடிப்போயிருந்தார். செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்தப்பின் அவரின் உடல் அன்று இரவே வீட்டிற்குக் கொடுக்கப்பட்டது. முரளிதரனுக்கும் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி உயர் அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இந்த விசயங்களை எல்லாம் செய்யும் கூட்டத்தை உடனே பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர் மனதில் இருத்தது. அந்த இரவே சென்னைத் துறைமுக அலுவலகத்திற்கு வந்து இதுபோன்ற சிலை கடத்தலில் தொடர்புடைய பழைய ஃபைல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தப் போன் அவருக்கு வந்தது. அவர் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இது இந்த வழக்கில் மிகப்பெரிய ஒரு தடயமாகக் கூட இருக்கலாம்.







-தொடரும்...


Leave your comments on the story below.

No comments:

Post a Comment