தங்ககுதிரை
-ஆயுதமொழியன்
பகுதி 1
இரு மரணங்கள்
கிபி 7ஆம் நூற்றாண்டு - காஞ்சிபுரம்
அரண்மனையின்
மாட விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இருள் பரப்பிய இருள் அதன்
இருட்டை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. தூண்களை அலங்கரித்துக் கொண்டிருந்த
தங்க தகடுகள் அதன் பிரதிபலிப்பை இழக்கத் தொடங்கியிருந்தன. அந்த அமாவாசை நாளில் வானமுன்
காலியாகி இருந்தது. நட்சத்திரங்களையும் காணவில்லை. காஞ்சிபுரத்தின் இரவு நேரத்தில்
தூரத்தில் மென்மையாகக் கேட்கக்கூடிய அந்தக் கடலின் சப்தம்கூடக் கேட்கவில்லை. கொஞ்சம்
கொஞ்சமாக அந்தச் செய்தி வெளியே கசிய மக்களும் அவர்கள் வீட்டிகளில் விளக்கை அணைத்தனர்.
சிலர் அழும் சத்தமும் தெருக்களில் கேட்டது.
முக்கிய
அமைச்சர்களும் படைத்தளபதிகளும் அரண்மனையை நோக்கி விரைந்ததில் தெருக்களில் கொஞ்சம் பரபரப்பு
ஏற்பட்டது. இந்தத் துக்கத்தைத் தாண்டி நாளை சூரியன் உதிக்குமா? என்ற கேள்வியோடு மக்கள்
கண்களை மூடாமல் மூடிக்கொண்டிருந்தனர்.
மிகப்
பிரமாண்டமான அறையில் அலங்கரிக்கப்பட்ட கட்டில் நடுவே கிடந்தது. கட்டிலின் தூண்களில்
இருந்த வேலைப்பாடுகள் கம்பீரமாக மிளிர்ந்தது. சன்னல்கள் திரையால் மறைக்கப்பட்டிருந்த
போதிலும் காற்று அந்த மரணத்தை விலக்கிப்பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிலில்
ஒரு மனிதர் உடலில் உயிரில்லாமல் படுத்திருந்தார். தூக்கத்திலேயே உயிர் போயிருக்க வேண்டும்.
அருகில் இரண்டு பணியாளர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களின் பார்வை அந்த மனிதரின்மீது
இருந்து அகலவில்லை. பெரும் ஓலத்துடன் ஒரு பெண் உள்ளே வந்து இறந்துகிடந்த அந்த மனிதரின்
மார்பில் சரிந்து விழுந்து அழ, அவள் அணிந்திருந்த ஒரு வைர மாலை சிதறி விழுந்தது. அவளைப்
பின் தொடர்ந்து வந்த இருவர் அந்தப் பணியாளர்களுக்குச் சைகை காட்ட, அவர்கள் அந்த அறையைவிட்டு
வெளியே சென்று கதவை சாத்தினர். அந்தப் பெண்ணின் அழுகைகளும் விசும்பல்களும்தான் அந்த
அறை முழுவதையும் நிறைத்தன. ஒரே ஒரு மூலையில் இருந்த விளக்கும் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்தது.
"மகாராணி
தாங்களே இவ்வண்ணம் அழுது தீர்த்தால் இனி நடக்க வேண்டிய ராஜ காரியங்களை யார் பார்ப்பார்கள்?
மக்கள் தங்கள் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறார்கள் அரசியே"
சத்தம்
வந்த திசையில் பார்த்தோமேயானால், பின்னால் நின்று கொண்டிருந்தான் மருதையப்பர். பல்லவ
அரசின் அப்போதைய தலைமை அமைச்சர். மிகவும் அனுபவம் உள்ள அமைச்சர். ராஜாங்க காரியங்கள்
மட்டுமின்றிப் போர் தந்திரங்களிலும் வல்லவர். ஒரு காலத்தில் சாளுக்கியர்களின் ஆதிக்கத்தைப்
பல்லவர்கள் முறியடித்துக் காஞ்சியில் ஆட்சியமைக்க முக்கியமான காரணமாக இருந்தவர் மருதையப்பர்.
மன்னர்
சிம்மவிஷ்ணு கடந்த ஒரு மாதமாகவே நோய்வாய்ப்பட்டுப் படுத்தப் படுக்கையாகிப்போனார். வடக்கில்
இமயம் முதல் தெற்கில் இலங்கை வரை எத்தனையோ மருத்துவர்கள் வந்து பார்த்தும் மன்னரின்
உடல்நலம் சரியாவதாய்த் தெரியவில்லை. மகாராணி மந்திராயினி தேவியும் அரசர் கூடவே இருந்து
சேவைகளைச் செய்துக்கொண்டிருக்க, மருதையப்பர் அனைத்து அரசாங்க காரியங்களையும் திறம்படச்
செய்துவந்தார். இதுதான் சமயம் என்று சாளுக்கிய ஒற்றர்கள் காஞ்சியில் புகுந்துவிட்டார்கள்.
அதைப் படைத்தளபதி சூரியத்தேவன் சரியான முறையில் கையாண்டு அந்த ஒற்றர்களைச் சிறையில்
தள்ளிக்கொண்டிருந்தான். இப்படியே சென்ற அந்த ஒரு மாத காலம் பெரிய இடியாக மன்னரின் மரணத்தில்
வந்து நின்றது.
"அரண்மனை
வாயிலில் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது மகாராணி. நாம் ஆகவேண்டிய காரியங்களை மேற்கொண்டாக
வேண்டும்...", கணீரென்று ஒலித்த படைத்தளபதி சூரியத்தேவனின் குரலில் மெல்ல எழுந்தார்
மகாராணி. அழுது தோய்ந்து அவரின் கண்கள் சிவந்துப்போயிருந்தது. ஒரு மகாராணிக்கான எந்தவொரு
கலையும் இல்லாமல் போனது அவரது முகம். மரணம் எல்லாருக்கும் அப்படித்தானே. மன்னரின் உடல்
முழுவதும் மந்திராயினி தேவியின் கண்ணீர் ஈரப்படுத்தியிருத்தது. எதுவும் பேசாமல் பித்தபிடித்தவர்
போல அமர்ந்திருந்தார். அந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை. அவரை ஒருபோதும் அப்படி இருந்து
யாரும் பார்த்ததில்லை.
சிறிது
நேரத்தில் மற்ற முக்கியமான அமைச்சர்களும் அதிகாரிகளும் வந்தனர். தலைமை அமைச்சர் மருதையப்பரும்
படைத்தளபதி சூரியத்தேவனும் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு அந்த
அறையைவிட்டு வெளியே வந்து மாடத்தில் நடந்துக்கொண்டிருந்தனர்.
"மன்னர்
இவ்வளவு சீக்கிரம் இறந்திருக்கக் கூடாது" என்றார் சூரியத்தேவன்.
மருதையப்பர்
தலையைக் கவிழ்ந்துக்கொண்டு பேசினார்.
"வடக்கே
சாளுக்கையர்களும், தெற்கே சோழர்களும் கண்டு அஞ்சும் ஒரு மாபெரும் பல்லவ அரசனை இந்தக்
காஞ்சி நகரம் இழந்துவிட்டது. ஒருகாலத்தில் இந்தத் தமிழகத்தில் பல்லவம் என்ற ஒரு அரசாங்கமே
பெயர் தெரியாமல் போவதாய் இருந்ததது, அப்போது சரிந்துக்கொண்டிருந்த நமது ராஜ்யத்தை மீண்டும்
தூக்கி நிறுத்தியவர் நம் மன்னரே. எத்தனை ஆண்டுகளானாலும் நம் மன்னரின் புகழ் அழியப்போவதில்லை"
"சரியாகச்
சொன்னீர்கள் அமைச்சரே, ஆனால் அரசரின் பாதியாகிய நம் மகாராணி இப்படி உடைந்துப்போயிருப்பதைப்
பார்க்க முடியவில்லை. வடக்கில் சாளுக்கியர்களுக்கு எப்படியும் மன்னரின் மரணம் இன்னேரம்
தெரிந்திருக்கும். எந்த நேரத்திலும் தாக்க வரலாம், எனவே உடனடியாக அரசி இளவரசருக்கு
முடிசூட்ட வேண்டும்"
"என்ன
சொல்கிறீர்கள் தளபதி! நம் இளவரசர் மகேந்திரனுக்கு வெறும் ஆறு வயது தானே ஆகின்றது. அவரால்
எப்படி இந்த நாட்டை ஆளமுடியும், எதிரிகளை விரட்ட முடியும்? என்னைப் பொருத்த வரையில்
மகாராணியே அரசேற்று இளவரசர் வளரும் வரையில் நாட்டை ஆளவேண்டும்"
"சரிதான்,
ஆனால் மகாராணியின் இப்போதைய நிலையைப் பார்த்தீர்களா? அவர் ஏற்கனவே இழப்பின் துயரில்
இருந்து மீளமுடியாமல் இருக்கும் இந்த நேரத்தில், அவர்மீது ராஜ்ய சுமையை ஏற்றி வைப்பது
சரியாகத்தெரியவில்லை"
"ஆம்.
எனக்கும் அதுதான் படுகிறது. நீங்கள் நம்முடைய ராஜ்ஜிய எல்லைகளின் பாதுகாப்புகளைப் பலப்படுத்துங்கள்.
சாளுக்கிய அரசவையில் எடுக்கப்படும் முடிவுகளை நமது ஒற்றர்கள் மூலம் உடனடியாகத் தெரிந்துக்கொண்டு
எனக்குத் தெரியப்படுத்துங்கள். மன்னரை ராஜ மரியாதைகளுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச்
செய்கிறேன். மேலும் இளவரசர் முடிசூடுவதற்கான வேலைப்பாடுகளைச் செய்கிறேன். நாம் தாமதிக்கும்
ஒவ்வொரு நிமிடமும் நம் எதிரிகளுக்கு நாம் தரும் வாய்ப்பாக அமைந்துவிடும்"
"அப்போது
நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன் அமைச்சரே" என்றவாறே தலைமை அமைச்சர் மருதையப்பருக்கு
வணக்கம் வைத்து நகர்ந்தார் சூரியத்தேவன்.
"ஒரு
நிமிடம் தளபதி அவர்களே...நம் தலைமை பொற்க்கொல்லன் தங்ககுமாரரை ஆட்கள் அனுப்பி உடனடியாக
அரண்மனைக்கு அழைத்துவர செய்யுங்கள்"
"இந்த
நேரத்தில் யாரையும் தேவையில்லாமல் அரண்மனையிற்குள் விடுவது நல்லதல்ல அமைச்சரே..."
"என்ன
தளபதியாரே மறந்துவிட்டீரோ? நம் காஞ்சி நகரித்தின் அடுத்த மன்னர் முடிசூடப்போவது அந்தப்
பொற்கொல்லன் கையில்தான் இருக்கிறது"
"என்ன
சொல்கிறீர்கள் அமைச்சரே, அந்தப் பிராமாண்ட பல்லவ சாம்ராஜ்யம் அமைவது ஒரு பொற்க்கொல்லன்
கையில் இருக்கிறதா?"
"ஆம்
சூரியத்தேவரே, நம் ராஜகுல வழக்கப்படி பரம்பரை பரம்பரையாகத் தங்கத்தால் செய்யப்பட்ட
குதிரை சிலையை இளவரசருக்கு பரிசாகக் கொடுத்து அரசமைப்பது வழக்கம். நம் மன்னரோ அவருக்குக்
கொடுக்கப்பட்ட தங்க குதிரை சிலையை மிக நெருக்கடியான காலத்தில் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு
நிதியாகத் தந்துவிட்டார். இனி புதிய தங்க குதிரை சிலை செய்யவேண்டுமல்லவா? அதற்காகத்தான்
அவரை வரச் சொன்னேன்"
"சரி
மருதையப்பரே அப்படியே ஆகட்டும்"
சூரியத்தேவர்
அங்கிருந்து வேகமாகச் சென்றார்.
அந்த
நள்ளிரவில் காஞ்சி நகரின் வியாபாரிகளின் மாடவீடு தெருவைத் தாண்டி, எளிமையான குடிசைகள்
அமைந்த வீதியில் காவலர்கள் ஐந்துபேர் அந்த வீட்டின் மரக்கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தனர்.
வேகமாகத் தட்டியதில் கதவில் விரிசல் விழுந்தது. ஒரு முதியவர் கையில் விளக்குடன் வந்து
கதவை திறந்தார்.
"தங்ககுமாரர்
ஐயாவிற்கு வணக்கங்கள். படைத்தளபதி சூரியத்தேவன் தங்களை விரைந்து அரண்மனைக்கு வருமாறு
உத்தரவிட்டுள்ளார்", என்று ஐந்து வீரர்களும் செய்தியை கூறிவிட்டு நகர்ந்தனர்.
தங்ககுமாரர் தள்ளாத வயதில் நடுங்கும் விரல்களுடன் கதவை சாத்திவிட்டு ஒரு துணியை எடுத்து
உடலை சுற்றிக்கொண்டார். குதிரைகள் என்ன நிலையில் இருக்கிறதென்று பார்ப்பதற்காகக் கொல்லைபுறத்திற்குச்
சென்றுவிட்டுத் திரும்புகையில் அவர் பேரன் முத்துக்குமாரன் விழித்திருந்தான். அவனுக்கு
ஆறுவயது இருக்கும்.
"இப்போ
கோட்டைக்குப் போகனுமா தாத்தா? என்னைத் தனியா விட்டுட்டுப் போகப் போறீர்களா?" தூக்கத்தில்
கண்விழித்துத் தூக்கம் கலையாமல் கேட்டான் பேரன் முத்துக்குமாரன்.
"ஆமா
முத்து, நான் போயிட்டுச் சீக்கிரமா திரும்பி வந்துவிடுகிறேன். நீ சமத்தா தூங்கிட்டு
இரு. நீ முழிக்கும் முன் தாத்தா வந்துடுவேன்" என்று அவனைப் படுக்கையில் படுக்க
வைத்துவிட்டு, கொல்லை வழியாகக் குதிரையில் கோட்டையை நோக்கி விரைந்தார் தங்ககுமாரன்.
தங்ககுமாரன்
குடும்பம்தான் அந்த ஊரிலேயே மிகச் செல்வந்த பொற்கொல்லன் குடும்பமாக இருந்தது. பரம்பரை
பரம்பரையாக அரச முடிசூட்டுகளுக்குத் தங்ககுதிரையை இவர்கள் குடும்பம்தான் செய்வார்கள்.
ஒரு காலத்தில் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனை காட்டுப்பகுதியில் எதிரிகள் சுற்றி
வளைத்த போது, தங்ககுமாரரின் முன்னோர்களில் ஒருவர் அவரது உயிரை கொடுத்துக் காப்பாற்றினார்
என்று ஒரு கதை இருக்கிறது. அதன் காரணமாக அப்போதிலிருந்து மன்னர்களுக்கு மிக நெருங்கிய
குடும்பமாக மாறிப்போயினர். அன்றிலிருந்து முடிசூட்டுதலின்போது இளவரசருக்கு பரிசாகத்
தரப்படும் பாரம்பரிய தங்ககுதிரை சிலையைச் செய்யும் பெருமையும் வந்து சேர்ந்தது. இப்போது
இறந்துப்போன சிம்மவிஷ்ணுவின் முடிசூட்டுவிழாவில் தங்ககுதிரை செய்தது தங்ககுமாரர் தான்.
ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் தங்கத்தோடு புரண்ட இவர்கள் இன்று குடிசையில் இருப்பதற்கு
ஒரு காரணம் இருக்கிறது. சிம்மவிஷ்ணு முடிசூட்டிக்கொண்ட காலத்தில் சாளுக்கியர்களுடன்
நடந்த போரில் பல்லவர்களின் ஆயுதங்களும் படைபலமும் குறைந்துப்போனது. அப்போது மக்கள்
அனைவரும் தங்களால் முடிந்த செல்வத்தைத் தந்து ஆயுதங்கள் செய்ய உதவியளித்தனர். அப்போதுதான்
சிம்மவிஷ்ணு தன்னுடைய தங்ககுதிரை சிலையையும் அதற்காகக் கொடுத்தான். அந்தக் காலத்தில்
தங்ககுமாரர் தன்னுடைய அனைத்து செல்வத்தையும் பல்லவ அரசுக்கு கொடுத்தார். அதை வைத்து
பல்லவ அரசு ஆயுதங்கள் செய்து போரில் சாளுக்கியர்களை விரட்டியது. தங்ககுமாரரின் மகன்
அந்தப் போரில் கலந்து உயிரைவிட, அவன் மனைவியும் இறந்துப்போனாள். அதன்பின் அவர்கள் மகன்
முத்துக்குமாரனை, தங்ககுமாரர் தான் வளர்த்து வருகிறார்.
அவரைப்போலவே
உடல் முழுவதும் நரைத்த ரோமங்களைக் கொண்ட தங்ககுமாரரின் குதிரை அரண்மனை கதவுகளை அடைந்தது.
2015 - காஞ்சிபுரம்
"இதுவரைக்கும்
நமக்கு இந்தக் காஞ்சிபுரத்த சுத்தி இருக்கு ஏரியாக்கள்ள அதிகமாகத் தொல்லியல் எச்சங்கள்
கிடைச்சு இருக்கு. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ஆரம்பிச்சு பல்லவர்களோட
சின்னங்கள் எச்சங்கள் உட்பட ஒரு பல காலவரையறை சேர்ந்த பொருட்கள் நமக்குக் கிடைச்சு
இருக்கு. தென் தமிழகத்திற்கு எப்படி ஒரு மதுரையோ அது மாதிரி இங்க காஞ்சிபுரம். இந்த
நகரத்தோட ஒட்டுமொத்த வரலாற்றையும் நாம வெளிய கொண்டு வருவோம். இதுவரைக்கும் நீங்க ப்ரொஜெக்டர்ல
பார்த்த எல்லாமும் இதுவரைக்கும் இங்க கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள். ஆனா
நம்ம தமிழ்நாட்டோட வரலாற முழுமையா எழுதுறதுக்கும் நம்மோட பழங்கால வணிகச் செயல்பாடுகளைத்
தெளிவா புரிஞ்சுக்கவும் நமக்கு இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் தேவை. இப்போ நம்ம இருக்க
வடவூர்ல நிறையத் தொல்லியல் தடயங்கள் இருக்கும்னு நம்புறோம். அடுத்த ஒரு வருடத்திற்கு
நம்ம வேலை இந்த வடவூர்லதான் இருக்கப் போகுது. நம்மோட இந்த எக்ஸவேஷன் ஆர்கனைஸரா ஜெயகுமார்
இருப்பார். நமக்காக நிறையத் தொல்லியல் மாணவர்கள் உதவிக்கு வந்து இருக்காங்க. நாளைக்கு
இருந்து நாம இந்த வேலைய ஆரம்பிக்காலாம். தட்ஸ் ஆல் ஜென்டில்மேன்! மத்த விஷயங்களை ஜெயக்குமார்
உங்களுக்கு ப்ரீஃ பண்ணுவாறு. டேக் எ ப்ரேக் எண்ட் கம் பேக் ஆஃப்டர் தி லன்ச்"
என்று அந்தத் தொல்லியல் உயர் அதிகாரி சத்தியசீலன் உரையை முடிக்க, காஞ்சிபுரம் வடவூர்
தொல்லியல் ஆய்வு பகுதியில் போடப்பட்டிருந்த டென்ட்டிலிருந்து அனைத்து அதிகாரிகளும்
எழுந்து சென்றனர்.
ஜெயக்குமார்
மட்டும் எழுந்து செல்லவில்லை. டென்ட் காலியானது. சத்தியசீலன் அவரின் ஃபைல்களை எடுத்துவைத்துவிட்டு
ஜெயக்குமார் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
"என்ன
ஜெய்...யோசனை வேற எங்கையோ இருக்க மாதிரி இருக்கு?" நெடுநேர உரையை ஒரு பெரிய மூச்சு
வாங்கலில் ஓய்வெடுத்துக்கொண்டார்.
"அப்படியெல்லாம்
ஒன்னும் இல்லை சார்?"
"இல்ல
ஜெய், உன் முகத்த பார்த்தா அப்படித் தெரியல...தேர் மஸ்ட் பி சம்திங்..."
"நான்
வேற என்ன சார் யோசிக்கப் போறேன்...எல்லாம் அந்தக் கல்வெட்டுத்தான்"
"நீ
இன்னும் அத மறக்கலையா ஜெய்...நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கனும்...எல்லா வரலாற்று
ஆதாரங்களும் உண்மையின்னு சொல்ல முடியாது...அப்படியே அது உண்மையா இருந்தாலும் அது பாதுகாக்கப்பட்டு
இருக்கனும்...அப்படியே பாதுகாக்கப்பட்டு இருந்தாலும் அது நம்ம கையிக்கு கிடைக்கனும்..."
"கண்டிப்பாகக்
கிடைக்கனும் சார்...எனக்காக இல்லாவிட்டாலும் சதீஷ்காகக் கிடைக்கனும்..." ஜெயக்குமாரின்
வார்த்தைகள் தீர்ந்துப்போய்த் தலையைக் கீழே போட்டான்.
"ஐ
அம் சாரி ஃவார் சத்தீஷ். அது உங்க தப்பு இல்ல...அத மறந்திடு ஜெய்..."
"இல்ல
சார்...அது என் தப்பு தான்...முழுக்க முழுக்க என்னோட தப்புதான்...அந்த மழையில நான்...அவன....."
ஜெய்யின் விசும்பல்கள் அழுகையாக மாற ஆரம்பித்தது. சத்தியசீலன் அவனைக் கட்டியணைத்து
ஆசுவாசப்படுத்தினார்.
"எங்களுக்கு
அது புரியும் ஜெய்...அது நடந்து ஐந்து வருடம் ஆச்சு...நீ அதையே நினைச்சிட்டு இருக்காத...யூ
ஹேவ் டூ கம் அவுட் மேன்... உன்ன நம்பி இவ்வளவு பெரிய வேலைய ஒப்படைச்சிரூக்கேன்...இது
நீ உன்னையே நிருபிக்க வேண்டிய நேரம் உனக்காக இல்லாட்டியும் சதீஷ்காக நீ நிதானத்தோட
செயல்பட வேண்டிய நேரம் இது ஜெய்"
ஜெய்
தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். அவன் கண்கள் சிவந்துப்போயிருந்தன.
"சரி
சார். இன்னிக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் எனக்கு அது கிடைக்கும். அன்னைக்குச்
சதீஷ் பெயர் வெளிய வரும். அவன் செய்த தியாகம் வெளிய தெரியும். அந்த ஒரு நாளுக்காகத்
தான் நான் காத்திருக்கேன் சார். இல்லையினா இது எதுக்குமே அர்த்தமில்லாம பொய்விடும்"
"இட்
வில் ஹேப்பன் ஜெய். சரி நான் கிளம்புறேன் ஹெட் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. இந்த ப்ராஜெக்ட
நீ சிறப்பா பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு ஜெய். ஆல் தி வெரி பெஸ்ட்"
"தேங்க்
யூ சார்..."
சத்தியசீலன்
அந்த டென்ட்டை விட்டு வெளியே வந்து அவர் காரில் ஏறிப்போனார். ஜெயக்குமார் வழியனுப்பிவிட்டு
மீண்டும் டென்ட்குள் போய் அமர்ந்தான். கதிர் உள்ளே வந்தான்.
"சார்
சாப்பிடலையா...?" என்றான் கதிர்.
"இல்லை
கதிர்...பசிக்கல...மதியம் பள்ளி குழந்தைகளோட செமினார் கேள்வி பதிலுக்கு ஸ்டீடன்ட்ஸ்
வந்துட்டாங்களா?"
"வந்துட்டே
இருக்காங்கலாம் சார்"
"நம்ம
டீம்ம ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க...செமினார் முடிச்சிட்டு நம்ம ஈவினிங் பேசுவோம்...அப்புறம்......"
"சொல்லுங்க
சார்..."
"ஒன்னுமில்ல...ஏதோ
சொல்ல வந்தேன் மறந்துட்டேன்"
ஜெயக்குமார்
ஒரு தொல்பொருள் ஆய்வு அதிகாரி. சாதாரண அதிகாரியாகத் துறையில் சேர்ந்த ஜெயக்குமாரின்
ஈடுபாடு காரணமாக ப்ரோமோஷன் வழங்கப்பட்டு இன்று காஞ்சிபுரத்திலுள்ள வடவூரில் தொல்பொருள்
ஆய்வு அவர் தலைமையில்தான் நடக்கிறது. சிறிது நாட்களுக்கு முன் அங்குக் கண்ணாடி பாசிகள்
கிடைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில் இப்போது அங்கு ஆய்வு நடத்தப்படுகிறது. ஜெயக்குமாருக்கு
அப்பா அம்மா கிடையாது. ஆசிரமத்தில் வளர்ந்த அவருக்கு இருந்த நண்பன் சதீஷ் தான். அவரும்
தொல்பொருள் அதிகாரி. ஆனால் ஒரு சம்பவத்தில் ஜெயக்குமார் சதீஷை இழந்துவிட்டான். அதன்பின்,
பெரிதாகத் தொல்லியல்துறையில் ஈடுபாடு காட்டவில்லை. அந்த இறப்புக்குக் காரணம் ஒரு கல்வெட்டு.
"சார்...நம்ம
எவ்வளோ அதிகமா அறிவியல் வளர்ச்சியில முன்னோடியா இருக்கோம்...இந்த காலத்துல வரலாறு நமக்கு
முக்கியமா சார்...?"
மாணவர்கள்
செமினாரின் முதல் கேள்வி கேட்கப்பட்டது. இப்போது அந்த டென்ட் முழுவதும் மாணவர்களால்
நிரம்பி இருந்தது. சில புகைப்படக் காரர்கள் அங்குமிங்கும் ஆங்கிள் பார்த்துப் படம்
பிடித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நடுநாயகமாக ஜெய் உட்கார்ந்திருந்தான்.
"முக்கியம்
தான் தம்பி...எந்தவொரு சமுதாயமா இருந்தாலும் அந்தச் சமுதாயம் அதோட வரலாற்றைத் தெரிஞ்சிருக்கனும்..அப்போதான்
அவங்க வருங்காலத்தை அமைக்க முடியும்...என்னைக்கோ கலிலியோ போட்டுவச்ச விமானத்தோட வடிவமைப்ப
வச்சு நாம விமானம் கண்டுபிடிக்கலையா? அது மாதிரிதான் இது...அடுத்த கேள்வி"
"தமிழ்
தான் முதலில தோன்றின மொழின்னு சொல்லுறாங்களே அது உண்மையா சார்?"
"அது
உண்மையின்னு இந்த உலகத்துக்கே தெரிஞ்சாலும் அது நிருபிக்கிறதுக்கு நம்மகிட்ட மிக வலுவான
ஆதாரங்கள் இல்லை. எந்த ஒரு மொழிய எடுத்துக்கிட்டாலும் அதன் அடிப்படை நோக்கம் செய்தி
பறிமாற்றமா இருக்கு... ஆனா நம்மளோட தமிழ்மொழி, அதையும் தாண்டி நம்ம வாழ்வியலோட கலந்து
இருக்கு...அத நினைச்சு நாம பெருமை படலாம்...ஆனால் மத்த மொழிகளை அதை வச்சுக் குறை சொல்ல
கூடாது...அடுத்த கேள்வி..."
"சார்...சரியா
ஐந்து வருசத்துக்கு முன்னாடி நீங்க ஒரு கல்வெட்ட சுக்குநூறா உடைச்சு சேதப்படுத்தினதா
உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே...அது உண்மையா சார்..."
"அது......."
ஜெயக்குமாரின்
உடல் வியர்த்தது. கைகள் லேசாக நடுங்கியது. கண்கள் பரபரப்படைந்தது. எதுவும் பேசாமல்
டென்டைவிட்டு வெளியே சென்று விட்டான். மாணவர்களுக்குள் சலசலப்பு ஏற்ப்பட கதிர் அனைவரையும்
செமினார் முடிந்தது என்று அனுப்பி வைத்துவிட்டான். ஜெயக்குமார் டென்டைவிட்டு வெகுதூரம்
சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்துக்கொண்டான். அந்த மரத்தின் நிழல் அவனுக்குப் போதுமானதாக
இல்லை. உடலில் அங்குங்கு சூரியன் சுட்டது. ஆனாலும் அவன் கைகள் நடுங்குவது நிற்கவில்லை.
உதடுகள் துடித்தது. மிகச் சத்தமாக வெடித்து அழுதான்.சத்தம் டென்ட் வரை கேட்டது. அனைத்து
அதிகாரிகளும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்களுக்குள் ஏதேதோ சலசலத்துக்கொண்டனர்.
சிறிது
நேரம் கழித்து ஜெய் வந்தான். எல்லா அதிகாரிகளுக்கும் அடுத்த நாள் நடக்க வேண்டிய வழிமுறைகளை
அறிவுறுத்திவிட்டுக் காரில் ஏறினான். கதிரையும் காரில் ஏற்றிக்கொண்டான்.
"எனக்குத்
தெரியும் சார்..." கதிர் பேசினான். ஜெயக்குமார் ஓடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாட்டை
அணைத்தான்.
"என்ன
தெரியும்?"
"ஐந்து
வருடத்துக்கு முன்னாடி நடந்த அது..."
"ம்ம்ம்ம்..."
"அந்தக்
கல்வெட்டுல அப்படி என்னதான் இருந்தது சார்?"
"....."
"சார்...நான்
ஏதும் தப்பா கேட்டு இருந்தா மன்னிச்சுடுங்க சார்..."
"இல்லை
கதிர்...தப்பெல்லாம் ஒன்னும் இல்ல...நாம இத பத்தி நாளைக்குப் பேசுவோமே..."
கதிர் இறங்க வேண்டிய இடம்வர அவன் இறங்கிச் சென்றான். ஜெயக்குமாரின் மனதில் அந்தக் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த நினைவகளின் வடு அவன் மனதை கிளறிக்கொண்டு இருந்தது. கல்வெட்டில் இருந்த 'தங்கக்குதிரை' என்னும் ஒற்றை வார்த்தையை அவனால் ஐந்து வருடமாகியும் மறக்க முடியவில்லை.
பகுதி – 2
ஒரு தியாகமும் ஒரு நம்பிக்கையும்
மன்னன் சிம்மவிஷ்ணு இறந்ததற்குச் சுமார் ஆறு வருடங்களுக்கு
முன்னால் நடந்தது...
"மன்னா!
சாளுக்கிய படைகள் நமது நெல் வயல்களை அழித்தது மட்டுமில்லாமல் தற்போது நமது உணவு சேமிப்பு
கிடங்குகளையும் தாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நமது படைபலமும் முக்கால்வாசி குறைந்துவிட்டது.
ஆயுதங்கள் உற்பத்தியை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஆனால் நம்மிடம் கருவூலத்தில் இருக்கும்
பணத்தை வைத்துக்கொண்டு ஆயுதங்களை உற்பத்தி செய்வதா? அல்லது மக்களின் பசியைப் போக்குவதா?
என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக நம்முடன் நட்பு பாராட்டுவதுபோல இருந்த பல சிற்றரசர்கள்
தற்போது சாளுக்கியர்களுடன் கைக்கோர்த்து உள்ளனர். நமக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டனர்.
தங்கள் தந்தையை ஏற்படுத்தி வைத்த அண்டை நாட்டு நட்புகளுக்குப் பெரும் கலங்கம் விளைவித்துவிட்டனர்.
எனக்குத் தற்போது இருக்கும் ஆத்திரத்தில் போர் களத்தில் பல தலைகளை வெட்டி வீழ்த்த வேண்டும்
என்ற வெறியில் இருக்கிறேன். ஆனால் நம்முடைய மக்களின் நிலையையும் இப்போது பார்த்தாக
வேண்டும்" தோய்ந்துப்போன குரலில் பேசிவிட்டு தலையை மண்ணை நோக்கி செலுத்தினார்
தளபதி சூரியத்தேவர்.
அந்த
அறையில் மன்னர் சிம்மவிஷ்ணு, அமைச்சர் மருதையப்பர், தளபதி சூரியத்தேவர் மட்டுமே இருந்தனர்.
மன்னரின் ஒரு பக்கம் முகம் கோபத்தில் கொதித்தாலும் இன்னொரு பக்கம் கவலையில் வாடியது.
தான் எடுத்துவிடும் எந்தவொரு தவறாக முடிவாலும் மக்களுக்கு எந்தவித தீங்கும் வந்துவிடக்கூடாது
என்பதில் கவனமாக இருந்தார் மன்னர். அமைச்சர் பேச ஆரம்பித்தார்.
"மன்னா!
நாம் முன்னதே முடிவெடுத்ததைப் போல மக்களிடமும் செல்வந்தர்களிடமும் நிதி பெறப்பட்டுவிட்டன.
எல்லாரும் தங்களால் முடிந்த செல்வத்தை அளித்த போதிலும் நமது படைபலத்தை அதிகரிக்க முடியுமா
என்பது சந்தேகமே. இதுபோன்ற இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தங்களில் ஒரு முடிவுக்காகக்
காத்திருக்கிறோம் அரசே"
அமைச்சர்
பேசுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மன்னர். உடனடியாக அது என்னவென்று கேட்டார்.
"அரசே
நமது காஞ்சி நகரின் மக்களிடம் இருந்தும் பெரும் செல்வந்தர்களிடம் இருந்தும் கட்டாயமாக
அவர்களின் தகுதிக்கு ஏற்ப செல்வத்தை நிர்ணயம் செய்து, நமது வீரர்களை அனுப்பி அவற்றைக்
கவர்ந்து வர செய்யலாம் என்று ஒரு யோசனை இருக்கிறது. மன்னர் அனுமதியளித்தால்......."
"அமைச்சரே
என்ன பேசகிறீர்கள்? இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மக்களுக்கு மன்னன் நம்மைக் காப்பாற்றிவிடுவான்
என்ற நம்பிக்கை இருக்கிறது. என்மீது நம்பிக்கை வைத்த அவர்களின் செல்வத்தின்மீது கை
வைக்க எனக்கு விருப்பமில்லை. அது அவர்களின் செல்வம். கழனிகளை வளமாக்கிய விவசாயிகளின்
செல்வம், நெல் மூட்டைகள் சுமந்து செல்லும் வணிகர்களின் செல்வம், நாட்டை நல்வழிப்படுத்தும்
அறிஞர்களின் செல்வம். அதை ஒரு போதும் வற்புறுத்தி பெறுவதற்கு எந்த உரிமையும் நமக்குக்
கிடையாது அமைச்சரே...வேறு யோசனை ஏதும் இருந்தால் கூறுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப்
போகட்டும்"
"மன்னிக்க
வேண்டும் மன்னா! இன்னும் ஒரு வாரத்திற்குள் சாளுக்கிய படைகள் நம்முடைய கோட்டை சுவற்றை
அடைந்துவிடுவார்கள். நமக்கு உதவி செய்வதற்கும் யாரும் இல்லை. இப்படிப் பட்ட சூழலின்
மனநிலையில் தான் நான் அப்படிச் சிந்தித்து விட்டேன்...மன்னிக்கவும் அரசே"
"பரவாயில்லை
அமைச்சரே. சூரியத்தேவரே தாங்கள் ஏதாவது யோசனைகள் சொல்ல விழைகிறீர்களா?"
"என்ன
சொல்லப்போகிறேன் மன்னா. நம்மிடன் இருக்கும் படைபலத்தை வைத்து நாம் தாக்க முயல்வோம்.
நடப்பதை அந்தப் பரமசிவன் கவனித்துக்கொள்வான்"
"உடனே
இருக்கும் படையைத் தயார் செய்து நமது வடக்கு வாயில்களை முழுமையாகப் பாதுகாப்பதற்கு
அனுப்புங்கள்...பரமசிவன் மட்டுமில்லை தேவரே...என் நாராயணனும் நம்மைக் கைவிட மாட்டன்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...ௐ
நமோ நாராயணனாய..." என்று மேல பார்த்துச் சொன்னார் மன்னர்
அப்போது
ஒரு காவலன் அங்கு வந்து இவர்களின் பேச்சை இடைமறித்தான்.
"மன்னிக்கவும்
மன்னா! தலைமை பொற்கொல்லர் தங்ககுமாரர் தங்களைப் பார்ப்பதற்கு வந்துள்ளார்" என்று
அந்தக் காவலன் சிரம் தாழ்ந்து நின்றான்.
"மன்னர்
இப்போது யாரையும் பார்க்க....." என்று அமைச்சர் முடிக்கும் முன்பே, "அவரை
உள்ளே வரச்சொல்லுங்கள்" என்று மன்னர் முடிக்க அந்தக் காவலாளி அங்கிருந்து சென்றான்.
சிறிது நேரத்திற்குத் தங்ககுமாரர் அங்கு வந்தார். மன்னர் சைகைக் காட்ட அமைச்சரின் தளபதியும்
அறையைவிட்டு வெளியே சென்றனர்.
தங்ககுமாரர்
என்ற பெயருக்கு ஏற்றார்போல அவரின் உடல் முழுவதும் தங்கம் மின்னியது. அவர் அணிந்திருந்த
ஒரு பட்டு அஸ்திரத்தின் சரிகைகளில் கூடத் தங்கம் பூசப்பட்டதுபோல இருந்தது. தங்கத்திலேயே
பிறந்து, தங்கத்திலேயே வளர்ந்த ஒருவரால்தான் இப்படி இருக்க முடியும் போல இருந்தது.
"வாருங்கள்
தங்ககுமாரரே! இந்த இக்கட்டான காலத்தில் மன்னன் எப்படிப் பரிதவித்துப் போயிருக்கிறான்
என்று பார்த்துவிட்டு போவதற்காக வந்தீர்களா?"
"இந்த
நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் நான் மிக முக்கியமான ஒரு
விசயத்தைப் பற்றித் தங்களிடம் பேச வந்துள்ளேன்"
"சொல்லுங்கள்
தங்ககுமாரரே அப்படி என்ன முக்கியமான விசயம் அது?"
"என்னுடைய
மகன் பவளகுமாரனை நமது நாட்டின் போர்படையில் சேர்த்துள்ளேன் அரசே. அடுத்தடுத்த போர்களில்
சாளுக்கியர்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் அல்லவா?"
"இருந்தாலும்
தங்ககுமாரரே...வசதியான செல்வ குடும்பத்தைச் சேர்ந்தவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்ககுதிரை
செய்யும் பாரம்பரியம் பெற்ற தாங்கள் இவ்வண்ணம் செய்திருப்பது என்னை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும்
ஆழ்த்தியிருக்கிறது. என் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்"
"ஆனால்
மன்னா நான் சொல்ல வந்த முக்கியமான விசயம் இதுவல்ல..."
"வேறு
என்ன தங்ககுமாரரே?"
"நம்முடைய
நாட்டின் நிலையை நான் நன்கறிந்தவன். ஒருபக்கம் ஆயுதங்கள் செய்யக் கருவூலத்தில் செல்வம்
காலியாகப்போகிறது. இன்னொரு பக்கம் நமது உணவுகளைச் சூரையாடும் சாளுக்கியப்படைகள். மக்களிடத்தில்
வாங்கிய நிதியும் பத்தாமல் இருப்பதை அறிகிறேன். அதனால்......"
"அதனால்
என்ன தங்ககுமாரரே...இருக்கும் செல்வத்தை வைத்து ஆயுதங்கள் தயாரித்து மக்களின் பசியையும்
போக்க வேண்டும். அனைத்து பாரத்தையும் ஈசனிடம் போட்டு நாம் செயல்படுவோம்"
"அதற்காகத்
தான் மன்னா நான் என்னிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் என் குடும்பம் இத்தனை ஆண்டுகளாகச்
சேமித்து வைத்த அனைத்து சொத்துகளையும் இந்த நாட்டிற்குக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்"
என்று கூறியவாறே தான் அணிந்திருந்த அனைத்து தங்க ஆபரணங்களையும் பட்டு துணியையும் கழட்டி
மன்னரின் காலடியில் வைத்தார்.
"
இந்தச் சிறியவனின் இந்தச் செல்வத்தை எடுத்துக்கொள்ளுங்கள் மன்னா"
மன்னரின்
கண்களில் நீர் வழிந்தது. தன் இருக்கையைவிட்டு எழுந்து சென்று தங்ககுமாரரை கட்டியணைத்து
அழுதார். அழுகொண்டே பேசினார்.
"தங்ககுமாரரே
நீங்களா சிறியவன். இல்லை...இல்லை...நீங்கள் பெரியவர். உங்கள் பாட்டணார் பல்லவ சாம்ராஜ்யத்தின்
உயிரை காப்பாற்றினார், நீங்கள் இந்தச் சாம்ராஜ்யத்தின் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.
இந்தப் பல்லவம் வாழும் வரை உங்கள் புகழ் வீழாமல் தழைக்கும் தங்ககுமாரரே..."
"யாரங்கே"
என்று சத்தம் கொடுக்க ஒரு காவலன் வந்தான்.
"எனது
அறையிலிருந்து தங்ககுதிரை சிலையை உடனடியாகக் கொண்டுவாருங்கள்..."
"மன்னா...என்ன
இது? எதற்குத் தற்போது உங்களது தங்ககுதிரை சிலை...நான் யூகிப்பது சரியென்றால் அது நடக்கக்கூடாது
மன்னா..." என்றார் தங்ககுமாரர்.
"நீங்கள்
யூகிப்பது சரிதான் குமாரரே...என்னுடைய தங்ககுதிரையை நான் இந்த நாட்டிற்கு மக்களுக்குத்
தானமாக வழங்கப்போகிறேன்"
"வீர
பல்லவரே! இது சரியல்ல...தங்ககுதிரை ஒரு பல்லவ மன்னரின் பலம். அதிகாரத்தின் வடிவம்.
ஒரு கையில் செங்கோல் விவேகத்தைக் குறித்தால் இன்னொரு கையில் தங்ககுதிரை மன்னரின் வேகத்தைக்
குறிக்கும். அந்த மன்னர் இறந்தால் மட்டுமே அந்தக் குதிரை சிலையை அந்த மன்னரின் உடலோடு
வைத்து புதைப்பார்கள். அதுமட்டும் அது அந்த மன்னரைவிட்டு அகலக்கூடாது மன்னா.."
"நீங்கள்
சொல்வது சரிதான் குமாரரே. ஆனால், தங்களைப்போன்ற சேவை உள்ளம் கொண்ட கடவுள்கள் இந்தச்
செல்வம் எல்லாம் வெறும் மாயை என்று எனக்குக் கற்பித்துவிடுகிறார்கள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்
போதே தங்ககுதிரை சிலை வந்துவிட்டது.
ஒரு
குதிரை ஓடுவதைப்போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த சிலை. பிடரி மயிர்கள் காற்றில்
பறப்பதைப்போல இருந்தது. ஒரு போர் களத்தில் மிக வேகமாக எதிரியின் படையைக் குத்தி கிழிக்கும்
குதிரையைப்போன்று கம்பீரமாகக் கைக்கு அடக்கமாக இருந்தது. மன்னர் கையில் வந்த சிலையை
மன்னர், தங்ககுமாரர் தன் ஆபரணங்களைக் கழற்றி வைத்த அதே தட்டில் வைத்தார்.
தங்ககுமாரரின்
இந்தச் செயல் காஞ்சிநகர் முழுவதும் பரவியது. ஒரு சிலர் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கினார்கள்.
ஒருசிலர் பிழைக்கத் தெரியாதவன் என்றார்கள். தங்ககுமாரர் தன்னுடைய மாட மாளியையும் கொடுத்துவிட்டு
ஒரு எளிமையான குடிசைக்கு மாறினார். அந்தப் போரில் அவர் தந்த செல்வத்தை வைத்து ஆயுதங்கள்
செய்து சாளுக்கியர்களை விரட்டினார்கள். தங்ககுமாரரின் மகன் பவளக்குமாரன் அந்தப் போரில்
இறந்துப்போக அவன் மனைவியும் வருத்தத்தினால் இறக்க, அவர்களுக்குப் பிறந்த குழந்தையைத்
தங்ககுமாரர் வளரக்க ஆரம்பித்தார். இப்போது உடலில் ஒரு தங்கம் கூட இல்லாமல் இருந்தாலும்
தங்ககுமாரர் அந்தப் பெயருக்கு ஏற்றவறாகவே இருக்கிறார்.
சென்னை துறைமுகம் - 2016
வழக்கம்
போலவே அன்று இரவும் துறைமுகத்தின் பணிகள் முழுவீச்சில் நடந்துக்கொண்டிருந்தன. இரண்டு
வணிகக் கப்பல்கள் கரையில் நின்றுக்கொண்டிருந்தன. ஒன்றிலிருந்து இறக்குமதி பொருட்கள்
இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னொரு கப்பலில் பொருட்கள் ஏற்றும் வேலை நடந்துக்கொண்டிருந்தது.
மாலுமிகளும் கேப்டன்களும் கையில் வாக்கி-டாக்கியுடன் கப்பலின் மாடிகளில் நடந்துக்கொண்டிருந்தனர்.
இரண்டில் ஒரு கப்பல் கிளம்பப்போவதாய்த் தெரிந்தது. பொருட்களை ஏற்றும் கப்பலாகத்தான்
இருக்கும், ஏனெனில் இறக்கி வைத்த கப்பலை அவ்வளவு சீக்கிரம் மீண்டும் இயக்க முடியாது.
சூடான இன்ஜின்கள் ஆற வேண்டும், நீராவி கலங்களை மீண்டும் நிரப்ப வேண்டும், தொழில்நுட்ப
தரவுகளைச் சரி பார்க்க வேண்டும். அதற்கான பணிகளைச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. சிமெண்ட்
கரைகள் முடியும் இடங்கள் நேராக மின் விளக்குகள் போடப்பட்டிருந்தன. தண்ணீரின் உள்ளும்
விளக்குகள் கயிறுகளால் கட்டி மிதக்க விடப்பட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தால்
மிக நெருக்கமாக அமைந்த நட்சத்திரக் கூட்டம் போல அந்தத் துறைமுகம் தெரியும். இந்தப்
பக்கம் கப்பலில் பொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. என்னென்ன பொருட்கள் ஏற்றப்படுகிறது
என்று கஸ்டம்ஸ் அதிகாரிகளால் ஒரு பக்கம் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்கேன் செய்து அனுப்பப்பட்டுக்
கொண்டிருந்தது. சில வெளிநாட்டுக்கார முகங்களும் அங்கங்கு தென்பட்டது. சுமை தூக்குபவர்கள்
தலை நிறையச் சுமைகளுடன் அங்குமிங்கும் பறந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் தலையில்
இருந்த குடும்பப் பாரத்தை ஒப்பிடுகையில் இந்தப் பாரம் அவர்களுக்குக் குறைவாகவே தெரியும்.
இங்குத் துறைமுகத்தில் ஏறிந்துக்கொண்டிருந்த ஆயிரம் விளக்குகளால் இன்று அவர்கள் வீட்டில்
ஒரு நாள் அடுப்பெரியும்.
பொருள்களை
ஏற்றிக் கொண்டிருந்த கப்பல் கிளம்பப்போவாதாய் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல
அந்தக் கப்பலில் இருந்து சத்தமாக ஒரு ஹாரன் ஒலித்தது. பொருள்களை ஏற்றும் பணி தீவிரமடைந்தது.
கப்பலின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. ஒரு அதிகாரி இன்னும் யாராவது பொருள்களை ஏற்ற வேண்டுமா
என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் இல்லை என்பது போலத் தெரிந்தது. கப்பலுக்குச்
சிக்னல் கொடுக்கப்படக் கப்பலின் இரண்டாவது மணி ஒலித்தது. அப்போது ஒருவன் அவசர அவசரமாகக்
கையில் ஒரு பெட்டியுடன் கப்பலில் பொருள் அனுப்புவதற்காக வந்திருந்தான். கோட்சூட்டும்
கருப்புக் கூலிங் கிளாஸைப் பார்க்கும்போது நல்ல பணக்கார ஆசாமிப்போல இருந்தான். அதிகாரிகள்
கப்பலுக்குத் தகவல் கொடுக்கக் கப்பல் நின்றது. வந்தவன் ஆங்கிலத்தில் தான் பேசினான்.
ஆனால் வெளிநாட்டுக்காரன் போலத் தெரியவில்லை.
"ஐ
ஹேவ் டூ சென்ட் மை பேக்கேஞ்" என்று கஸ்டம்ஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் முன்
தான் கொண்டு வந்த பெட்டியை வைத்து அவசரத்தில் தவிப்பதுபோலப் பதட்டமாக இருந்தான்.
"வி
வில் செக் இட்...கந்தசாமி இத ஸ்கேன் பண்ணுங்க" என்று கந்தசாமியை அழைத்தார் முரளிதரன்.
கப்பலில் மூன்றாவது ஹாரன் அடிக்கப்பட்டது. கேப்டன் கப்பலின் மாடியில் இருந்து கிளம்ப
வேண்டும் மணியாகிவிட்டது என்று சைகைக் காட்டினார்.
கந்தசாமி
முரளிதரனைப் பார்த்தார்.
"சார்
மணி ஆகிடுச்சு ஸ்கேன் பண்ணிட்டு இருந்தா டையின் ஆகும்...அனுப்பிவிட்டிரலாமா?"
"சரி
அனுப்பிவிட்டிடலாம்...வாட்ஸ் இன் திஸ்?" என்று அந்த ஆளைப் பார்த்துக்கேட்டார்.
"இட்ஸ்
எப் பிரிண்டிங் மிஷின்" என்றான் அவன். அவனுக்கு இன்னும் வியர்த்துக் கொட்டியது.
"சரி
அனுப்பிவிடுங்க கந்தசாமி" என்று முரளிதரன் சைகைக் காட்ட அந்தப் பெட்டி முத்திரை
பதிக்கப்பட்டுக் கப்பலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது.
திடீரென்று
முரளிதரன் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து அந்தப் பெட்டியை நோக்கி 'ஸ்டாப் இட்'
என்று கத்திக்கொண்டே ஓடினார். அப்படியே காவலர்களை அந்த ஆளையும் பிடிக்கச் சொன்னார்.
அவனும் துறைமுகத்திற்குள்ளே வேறு திசையில் ஓட காவலர்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினர்.
பெட்டியை சுமந்துக்கொண்டு சென்ற தொழிலாளி பெட்டியை கீழே வைத்துவிட்டு நகர்ந்து நின்றான்.
இன்னொரு
பக்கம் ஓடிக்கொண்டு சென்ற அந்த ஆள் ஒரு துப்பாக்கியை எடுத்துக் காவலர்களை நோக்கி நீட்ட
அனைவரும் ஒரு நிமிடம் நின்றனர். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் அவனையே தலையில்
சுட்டுக்கொண்டு கீழே விழுந்தான். அவனைச் சுற்றி ரத்த வெள்ளம் படர்ந்தது.
உடனடியாக
வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதித்துப் பார்த்தனர். உள்ளே வெடிகுண்டு எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை. முரளிதரன் மெதுவாக அந்தப் பெட்டியை பிரித்தார். துறைமுகத்தின் மஞ்சள்
விளக்கொளியில் மிளிர்ந்தது ஒரு நடராஜர் சிலை.
கப்பல்
மெதுவாகக் கரையை விட்டு நகர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கப்பல் ஆஸ்திரேலியா
துறைமுகத்தை அடைந்திருக்கும்.
வடவூர் - 2016
அகழ்வாய்வு
பணி ஆரம்பித்து ஆறு மாதங்களைத் தாண்டியிருந்தது. பல மீட்டர் குழிகள் தோண்டப்பட்ட போதிலும்
எந்தத் தடயங்களும் கிடைக்கப் போவதாய்த் தெரியவில்லை. பொதுவாக அகழ்வாய்வு செய்யும்போது
அந்தப் பகுதியின் இலக்கிய மற்றும் வரலாறு அடிப்படையில் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஒரு
குறிப்பிட்ட ஆழம் தோண்டிய பின் ஒவ்வொரு தடயமாகக் கிடைக்க ஆரம்பிக்கும். ஆழம் செல்ல
செல்ல தடயங்களின் காலம் அதிகரிக்கும்.
வடவூர்
அகழ்வாய்வில் இதுவரை எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பது அகழ்வாய்வு செய்பவர்களுக்கும்
மேல் அதிகாரிகளுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பலர் நம்பிக்கையே இல்லாமல்
தோண்டிக்கொண்டிருந்தனர். உச்சி வெயிலில் வியர்வைக்களைத் துடைத்துக்கொண்டு பணி செய்வதற்குப்
பலனில்லாமல் போய்விடுமோ என்று வருத்தமாக இருந்தனர். பணி நடப்பதை ஆய்வு செய்துவிட்டு
ஜெயக்குமாரும் கதிரும் டென்ட்டிற்குள் வந்தனர்.
"இன்னியோட
ஆறு மாசம் சார்" என்றான் கதிர்.
"ஆமா
கதிர் ஆறு மாசம் ஆச்சு...அதுக்கு...இன்னும் நமக்கு ஆறு மாசம் நேரம் இருக்கு இல்லையா"
என்று முறைத்தான் ஜெயக்குமார்.
"இருக்குதான்
சார்...ஆனால் இப்போ வரைக்கும் இங்க ஒரு தடயம் கூடக் கிடைக்கல...ஒரு வேளை நாம தப்பான
ஒரு திசையில போயிட்டு இருக்கோமோன்னு தோணுது சார்..."
"கதிர்...அகழ்வாய்வுல
முக்கியமான விசயமே பொறுமைத்தான்...பொறுமையோட தேடுனா எதாச்சும் கிடைக்கும்...லெட்ஸ்
ஸீ"
"இல்ல
சார்...எனக்கு நம்பிக்கை இல்ல...எனக்கு மட்டும் இல்ல சார் இங்க இருக்க யாருக்குமே இல்ல...இதுல
வேற ஏதோ விசயம் இருக்க மாதிரி எனக்குத் தோணுது சார்"
"என்ன
தோணுது...எனக்கு புரியல?"
"இந்த
அகழ்வாய்வு ஆரம்பத்துல இருந்தே ஏதோ மர்மம் கூடவே வர மாதிரி இருக்கு...உங்க நண்பன் சதீஷ்
இறந்ததுக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு தோணுது சார்...எதையோ நோக்கி எங்களை
நீங்க கூட்டிட்டு போறீங்க...இங்க என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரியும்
அது கிடைக்க இன்னும் பல நாட்கள் ஆகும்னு நீங்க பொறுமையா இருக்கீங்க...ஆனா எங்களால அந்தப்
பொறுமையா இருக்க முடியல...ஏன்னா எங்களுக்கு அது என்னன்னு தெரியல...?"
கதிர்
கடகடவெனப் பேசி முடித்துவிட்டு ஜெயக்குமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். ஜெயக்குமார்
எதுவும் பேசவில்லை. கொஞ்சம் நேரம் மவுனத்தைக் கலைக்க ஜெயக்குமார் பேசினான். ஆனால் கதிரை
முகம் கொடுத்து பார்க்க அவனால் முடியவில்லை.
"நேரம்
வரும் போது உங்களுக்கே தெரியும் இல்லையினா நானே சொல்லுவேன்...பொறுமையா இருங்க...உணவு
இடைவெளி விடுங்க. எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்து வேலை செய்யட்டும். நானும் சாப்பிட்டு
வரேன்" என்று வேகமாகச் சென்று காரில் ஏறிப் பறந்தான்.
பகுதி – 3
மரத்தடி திட்டுக்கள்
மன்னர் சிம்மவிஷ்ணு இறந்து மூன்று நாட்கள் கழித்து.
மருதையப்பரும்
சூரியத்தேவரும் இளவரசரின் முடிசூட்டு விழாவிற்கான வேலைகளில் இருந்தனர். மன்னர் இப்போது
தான் இறந்த காரணத்தினால், பெரிய விழாவாக நடத்த வேண்டாம் என்றும் ஆரவாரமில்லாமல் ஆறு
வயதே ஆகும் இளவரசர் மகேந்திரனை மன்னர் ஆக்கி, ஆட்சி வேலைகளைத் தாம் பார்த்துக் கொள்வதாக
முடிவு எடுத்து இருந்தனர். மகாராணி மந்திராயினி மன்னர் இருந்த துக்கத்தில் இருந்து
இன்னும் மீண்டு வரவே இல்லை. மன்னர் இறந்ததிலிருந்து ஒரு இருட்டு அறையில் தன்னைத் தானே
பூட்டிக்கொண்டார். சரியாக உணவு கூட உட்கொள்வதில்லை. மன்னருடன் தானும் இறந்து போயிருக்கலாம்
என்று பணிப்பெண்களிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். சிற்றரசர்களோடு ஏற்பட்ட சச்சரவுகள்
காரணமாகச் சாளுக்கிய மன்னன் படையைத் திரட்டிக்கொண்டு வர வாய்ப்பில்லாமல் போனது. தங்குமாரரிடன்
இளவரசருக்கு பரிசளிப்பதற்கான தங்ககுதிரையைச் செய்யும்படி சொல்லியாகிவிட்டது. அவர் தங்கம்
செய்யும் கலன்களில் கைவைத்து பல வருடங்கள் ஆகியிருந்தது. தன் வீட்டிற்குப் பின்னாலே
தங்கம் உருக்கும் கலன்களை நிறுவி தங்ககுதிரையை வடிவமைப்பதற்கான வேலையை அவரும் தொடங்கிவிட்டார்.
பல்லவ
அரண்மனையின் கிழக்கு மூலையில் இருக்கிறது வசந்த தோட்டம். பல்லவ அரண்மனைக்கு வந்த யாரும்
இந்தத் தோட்டத்தைப் பார்க்காமல் போவது கிடையாது. பார்த்துவிட்டால் போவதற்கும் மனமிருக்காது.
அவ்வளவு ரம்மியமான ஒரு இடம். உலகத்தில் எத்தனை நிறங்கள் இருக்கிறதோ அத்தனை வண்ணங்களிலும்
பூக்கள் தோட்டம் முழுவதும் படர்ந்திருக்கும். நடப்பதற்கு மணல் கொண்ட தரைகளே இருக்காது.
எல்லாம் புற்களால் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் மரங்களைப் பற்றி நாம் சொல்லியே
ஆக வேண்டும். பொதுவாக மரங்கள் இலைகளால் நிறைந்திருக்கும் ஆனால் வசந்த தோட்டத்தில் மரங்கள்
பூக்களால் நிறைந்திருக்கும். நல்ல காற்று அடிக்கும் ஒரு நாளில், அந்த மரங்களுக்கு அடியில்
நின்றால் பூ மழையில் நாம் நனைவோம். ஒரு பக்கம் பூ பூக்கும் மரங்கள் என்றால் இன்னொரு
பக்கம் பழம் தரும் மரங்கள். மாம்பழம், கொய்யா, மாதுளை என்று அனைத்து பழ மரங்களும் இருக்கும்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் பழங்கள் பழுத்து குலுங்கும். இத்தனைக்கும் சிம்மமாக இருப்பது
அந்தத் தோட்டத்தின் குறுக்கே ஓடும் ஒரு சின்ன வாய்க்கால். எங்கிருந்துதான் வருகிறதோ
தெரியாது. ஆனால் அவ்வளவு இனிப்பாக இருக்கும் அந்தத் தண்ணீர். அதில் துள்ளி குதிக்கும்
மீன்களும் நீந்திச் செல்லும் வாத்துகளும் அந்தத் தோட்டத்திற்கு இன்னும் அழகை சேர்த்துவிடும்.
இளவரசர்
மகேந்திரன் அந்தத் தோட்டத்தில் ஒரு திட்டின் மீது அமர்ந்து ஓடும் நீரில் அவ்வப்போது
மேலே தெரிந்த மீனை பார்த்துக்கொண்டிருந்தான். ஆறு வயதே ஆகும் அவனுக்குத் தந்தை இறந்துவிட்டார்
என்பது ஒரு அளவிற்குத் தான் புரிந்திருந்தது. இனி நாம் தான் நாட்டை ஆள வேண்டும் என்று
நினைக்கும்போது உண்மையில் அவனுக்குச் சிரிப்பாகத் தான் இருந்தது. ஒரு உருவம் அவனைப்
பின்னால் இருந்து வந்து நீரில் தள்ளுவது போலத் தெரிந்தது. அந்த உருவத்தின் நிழலினால்
திடுக்கிட்ட மகேந்திரன் திட்டிலிருந்து கீழே விழுந்தான். உடனே அந்த உருவம் "ஹாஹாஹாஹா"
என்று சத்தமாகச் சிரித்தது.
"நீதானா...நான்
பயந்துவிட்டேன்" என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் மகேந்திரன் மீண்டும் திட்டில்
ஏறி அமர்ந்துக்கொள்ள அந்த உருவமாகிய தங்ககுமாரர் பேரன் முத்துக்குமாரனும் அந்தத் திட்டில்
பக்கத்தில் அமர்ந்தான்.
"எப்படி
இருக்கே மகேந்திரா...? நீ கவலையாய் இருப்ப, உன்னைத் தொந்தரவு பண்ண கூடாது என்று தாத்தா
சொன்னார். அதான் நான் வரவில்லை" என்று கூறிவிட்டு மகேந்திரனைப் பார்த்தான் முத்துக்குமாரன்.
"பரவாயில்லை
முத்து. திடீரென்று அப்பா அசையாம படுத்துவிட்டார். எல்லாரும் அவர் இறந்துவிட்டாத சொன்னார்கள்.
அம்மா அந்த அறையைவிட்டு வரவே மாட்டிக்கிறாள். இப்போ நான் தான் அரசர் என்கிறார்கள்.
எனக்கு என்ன தெரியும் முத்து நீயே சொல்லேன். அரசன் என்றால் வாளை வைத்துச் சண்டை போடனுமே.
எனக்குப் போன மாதம் தான் வாளை தூக்கவே தெரிந்தது. எனக்கே சிரிப்பு வருகிறது முத்து.
பேசாமல் அமைச்சரோ தளபதியோ மன்னர் ஆகிக்கொள்ளலாமே முத்து...என்ன ஏன் கேட்கிறார்கள்?"
"அவர்கள்
எல்லாம் ஆக முடியாது மகேந்திரா. எங்க தாத்தா சொல்லியிருக்கார். மன்னரோட பிள்ளைகள் தான்
மன்னர் ஆகனும். அப்பன்னா நீ தானே ஆகனும். இன்னும் இரண்டு நாளில் விழான்னு தாத்தா சொன்னார்"
"எனக்குப்
பயமாக இருக்கிறது முத்து. நான் மன்னர் ஆனவுடன் போர் வந்து விட்டால் என்ன செய்வது. நான்
வாளை தூக்கிக்கொண்டு போர் களத்திற்குப் போக வேண்டுமா? என்னைப் போர் களத்தில் கொன்றுவிட்டால்?
நான் இப்படியே இந்தத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்துவிடுகிறேனே..."
"மகேந்திரா...நீ
மன்னரின் பிள்ளை. நீ இப்படியெல்லாம் பேசக்கூடாது. இப்போது போர் எல்லாம் வராது. வந்தாலும்
தளபதி பார்த்துக்கொள்வார். நீ வளர்வதற்குள் நன்றாகப் போர் பயிற்சி எடுத்துக்கொண்டு
பெரிய மன்னராகி விடு. நான் உன்னுடைய அமைச்சராகி விடு கிறேன். உன்னுடைய முடிசூட்டு விழாவிற்காகத்
தான் என் தாத்தா தங்க குதிரை செய்து கொண்டிருக்கிறார். "
"அப்படித்
தங்ககுதிரையா? பெரிய தங்ககுதிரையா? அதில் ஏறி போகமுடியுமா?"
முத்துக்குமாரன்
சிரித்தான்.
"இல்லை
மகேந்திரா...இது பொம்மை குதிரை. தங்கத்தில் செய்யப்பட்ட பொம்மை குதிரை. நீயும் நானும்
அதை வைத்து விளையாடலாம் சரியா? நீ மன்னரானவுடன் என்னைப் பார்க்க, என் கூட விளையாட உனக்கு
நேரமிருக்குமோ என்னமோ தெரியவில்லை"
"உன்னுடன்
விளையாடமால் நான் எங்கே போகப்போகிறேன். காலையில் நான் மன்னராக இருக்கிறேன் மாலையில்
நாம் விளையாடலாம் சரியா?"
"ஆனால்
எனக்கு என்னவோ நீ மன்னர் ஆனவுடன் மாறி விடுவாயோ என்றுதான் தோன்றுகிறது"
"ஆம்
முத்து, எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது. நான் மன்னரானவுடன் என்னுடைய பெயரைக்
கூட மாற்றப்போகிறார்களாம்..."
"அப்படியா!
என்னவென்று மாற்றப் போகிறார்களாம். என்ன பெயர் அது?"
"மகேந்திரவர்ம
பல்லவன்"
2010 - சென்னை எழும்பூர் அருங்காட்சியகம்
ஐந்து வருடங்களுக்கு முன் , ஜெயக்குமாரின் நண்பன் சதீஷ் இறந்ததற்கு
மறுநாள்.
சென்னை
எழும்பூர்(எக்மோர்) அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கான டிக்கெட் வினியோகம் அப்போது
தான் தொடங்கியிருந்தது. அந்தச் சிகப்பு நிற பழைய ஆங்கிலக் கட்டடங்களைப் பார்ப்பதே ஒரு
தனி அழகு தான். அந்தக் கட்டடத்தின் வடிவமைப்பும் வாயிலில் இருந்தே தொடங்கிவிடும் பழங்காலப்
பீரங்கிகளின் வரிசையும் சிலைகளும் நம்மைப் பழங்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.
முழுமையாக அந்த அருங்காட்சியத்தைப் பார்த்து முடிப்பதற்குள் ஒரு நாளே முடிந்துவிடும்
பட்சத்திலும் நமக்கும் எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் வரலாறு நம்மை இறுக்கப் பிடித்துக்கொண்டு
இருக்கும்.
ஜெயக்குமார்
வேகமாகத் தன் பைக்கில் அருங்காட்சியத்திற்குள் வந்தான். அவன் சட்டை முழுவதும் சேறு
படிந்து இருந்தது. தலை சரியாக வாரப்படாமல் கலைந்துப்போயிருந்தது. வேகமாக வந்து தன்
பைக்கை கூட நிறுத்தாமல் கீழே போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். அவன் அங்கு அடிக்கடி பணிக்காகவும்
கல்வெட்டு மற்றும் தொல் பொருள்களை ஆய்வு செய்வதற்காக வருவதால் யாரும் அவனைத் தடுக்கவில்லை.
ஆனால் அவன் வந்த வேகம் ஆய்வு செய்வதற்காக வந்த வேகம் கிடையாது. அருங்காட்சியகத்தின்
முன் நுழைவு வாயில் வழியாகச் செல்லாமல், பின்னால் பணியாளர்களுக்கு இருக்கும் வழியாக
உள்ளே நுழைந்தான். அவனுக்கு வணக்கம் வைத்த வாட்ச்மேன்களையும் மற்ற பணியாளர்களையும்
அவன் கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. 'எப்போதும் நல்ல சிரிச்சு பேசிட்டு போற மனுசன்
ஏன் இப்படிப் போவுதுன்னு தெரியலையே' என்று சில தூய்மை செய்யும் பாட்டிகள் பேசிக் கொண்டனர்.
மிக
வேகமாக ஒரு அறையினுள் நுழைந்து ஏற்கனவே உடையும் நிலையில் இருந்த கதவை சாத்தி தாழிட்டான்.
யாருமே இல்லாத அந்த அறை முழுவதும் பழங்காலத் தொல்பொருள்கள் இருந்தன. அருங்காட்சியகத்தில்
மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் முன்பு பாதுகாத்து வைப்பதற்காக அந்த அறையில் முதலில்
வைக்கப்பட்டிருக்கும். அலமாறிகளில் சில பழங்கால ரோம நாணயங்கள், ஒரு பக்கம் மன்னர்களின்
தங்க ஆபரணங்கள், இன்னொரு பக்கம் சின்னச் சின்ன இரும்பு செம்பு மற்றும் கல்லினால் ஆன
சிலைகள் இருந்தன. தரையில் கல்வெட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.
ஜெயக்குமாரின்
கண்கள் அந்த அறையில் எதையோ தேடியது. கல்வெட்டுகளின் ஊடே அவன் கண்கள் அலைப்பாய்ந்தன.
அது கிடைத்துவிட்டது போல, அந்தக் கண்ணில் இன்னும் வெறியேறி மூலையில் கிடந்த ஒரு கடப்பாரையினால்
அந்தக் கல்வெட்டை மடார் என்று அதிரும் சத்தத்துடன் ஓங்கி குத்தினான். இரண்டு துண்டுகளானது.
மேலும் ஓங்கி குத்த கல்வெட்டு அதன் வார்த்தைகளை இழந்த பல துண்டுகளாக உடைய ஆரம்பித்தது.
அறையில் சத்தம் கேட்டுப் பணியாளர்கள் கதவை தட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஜெயக்குமார் ஆத்திரத்தோடு
அந்தக் கல்வெட்டை உடைத்துக் கொண்டிருந்தான். கதவு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த பணியாளர்கள்
அவனைத் தடுத்து அவனை அறைக்கு வெளியே இழுத்துச் சென்றனர். அவன் மிக அதிகமாக மூச்சு வாங்கிக்
கொண்டிருந்தான். ஒரு மரத்தடியில் அவனை உட்கார வைத்துவிட்டுத் தண்ணீர் கொடுத்தனர். மேலதிகாரிகளுக்குத்
தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியசீலன் உடனடியாக வந்தார்.
"உங்க
கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல ஜெயக்குமார்" என்றார் சத்தியசீலன், அந்த மரத்தடி
திட்டில் அவன் அருகில் அமர்ந்துக்கொண்டு.
".........."
"உங்களோட
கவலை எனக்குப் புரியுது ஜெயக்குமார். உங்க நண்பரின் இறப்புக்கு நாங்க வருத்தப்படுறோம்...ஆனா
அது ஒரு விபத்து...அதுக்காகச் சம்பந்தப்பட்ட கல்வெட்ட உடைக்கிறதுங்கிறது எந்த வகையில
நியாயம்"
"அது
விபத்து இல்ல சார்...நான்தான் அவன கொன்னேன்..."
"இங்க
பாருங்க ஜெய்...உங்க குற்றவுணர்வ என்னால புரிஞ்சுக்க முடியுது...ஆனா நீங்க தப்பு பண்ணலன்னு
ஊருக்கே தெரியும்..."
"இல்ல
சார்...நேத்தி ராத்திரி நான் அந்த இடத்துல இறந்து இருக்க வேண்டியது..ஆனா அவன்..."
என்று சத்தியசீலனின் தோலில் சாய்ந்து அழுக ஆரம்பித்தான் ஜெயக்குமார்.
"யூ
ஷுட் கம் அவுட் ஆஃப் இட் ஜெயக்குமார். கஷ்டம் தான்...ஆனா நீங்க வந்தே ஆகனும்...உங்கள
மாதிரி ஒரு ப்ரில்லியண்டான ஆளா நாங்க இழக்க விரும்பல...சஸ்பென்ஷன் இருக்கும்...நான்
டிப்பார்ட்மெண்டல பேசி குறைக்க முயற்சி பண்ணுறேன்...அப்புறம் உங்களுக்குக் கவுன்சிலிங்கு
ஏற்பாடு பண்ணுறேன்..."
"நன்றி
சார்...ஆனாலும்...."
"ஆனாலும்
ஒன்னும் இல்ல ஜெயக்குமார்...உங்களுக்கு அப்பா அம்மா இல்லைன்னு கேள்விப்பட்டேன். என்ன
உன் அப்பா நினைச்சுக்கோ...யு நீட் ரெஸ்ட்...என் கூட வா.."
இருவரும்
சத்தியசீலனின் காரில் ஏறி சென்றனர். ஜெயக்குமார் அழுது வீங்கிய கண்களுடன் சன்னல் வெளியாக
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சத்தியசீலன் கார் ஓட்டிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.
"அப்புறம்
ஜெய்...அந்த கல்வெட்டுல என்னது பத்தி இருக்கு..."
"......"
"ஜெயக்குமார்...."
என்று அவனை லேசாக உலுக்கினார். சுயநினைவுக்குத் திரும்புவதுபோல அதிர்ந்தான்.
"சொல்லுங்க
சார்..."
"இல்ல…
அந்தக் கல்வெட்டுல எத பத்தி இருந்துச்சு...நீங்க எத தேடி அங்க போனீங்க? நான் டிப்பார்ட்மெண்டல
உனக்காகப் பேசும்போது கேப்பாங்க.... அதான் கேட்டேன்..."
"அது
ஒரு தங்ககுதிரை சிலை பத்தினது சார்..."
"தங்ககுதிரையா....
யாரோடது...?"
"மகேந்திரவர்ம
பல்லவன்"
பகுதி – 4
இருள் துரத்தும் நேரம்…
இளவரசர் முடிசூடுவதற்கு முதல் நாள் இரவு...
மன்னர்
இறந்ததிலிருத்து மகாராணி மந்திராயினி தேவி அவர் அறையை விட்டு வரவே இல்லை. யாரிடமும்
பேசவே இல்லை. உணவு உண்ணாத காரணத்தால் அவர் உடல்நிலையும் மோசமாக ஆகியிருந்தது. அரண்மனை
மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவர் உடல்நிலையைச் சரிசெய்ய முடியவில்லை. பலர் அவருக்குப்
பித்துப் பிடித்துவிட்டது என்றனர். சிலர் யாரோ மன்னருக்கும் மகாராணிக்கும் செய்வினை
வைத்துவிட்டதாகக் கூறினார்கள். மந்திராயினி மகாராணியானதே பெரிய அதிர்ஷ்டம். மந்திராயினியின்
தந்தை மகுடாதிபன் காஞ்சிபுரத்தில் அவர் காலத்தில் மிகப்பெரிய வணிகர். ஜாவா தீவுகளில்
இருந்து முத்துக்களும் அரேபியாவில் இருந்து கலைப்பொருள்களும் சீனாவின் பட்டுத்துணிகள்
என்று அனைத்தையும் கப்பல்கள் மூலம் கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் நிறைத்தார் மகுடாதிபன்.
சிம்மவிஷ்ணு மன்னராக இருந்த காலத்தில் ராஜ்யத்திற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து
அரண்மனையை அலங்கரித்தார் மகுடாதிபன். அப்படியொரு நாள் சிம்மவிஷ்ணுவிடம் சீனத்து பட்டுகளை
விற்க வந்தபோது கூடவே மகள் மந்திராயினியை அழைத்து வந்தார். மந்திராயினியின் அழகில்
மயங்கிய சிம்மவிஷ்ணு உடனே திருமணம் முடிக்க விருப்பம் தெரிவித்தார். மகுடாதிபனும் மன்னர்
ஏதோ விளையாட்டாய் கூறுகிறார் என்று நினைத்து சிரிக்க, ஆனால் மன்னர் தன் விருப்பத்தை
உண்மை என்கிறார். பின்னர் அடுத்த மூன்று தினங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
அந்தத் திருமணத்தில் காஞ்சி நகரம் மிளர்ந்ததை எப்படி விவரிப்பது. அரண்மனையின் மிக உயரமான
மதில் சுவற்றின்மீது அடுக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளின் ஒளி கடலில் பிரதிபலித்ததை
யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்தத் திருமணம் முடிந்து மந்திராயினி அரண்மையில்
மகாராணியாக இருக்க மிகுந்த கூச்சப்பட்டாள். ஒரு பட்டு வியாபாரியின் மகளாய் இருந்த அவளுக்கு
அரியணையில் அமர்ந்து கட்டளைகள் சொல்வது வெட்கமாக இருந்தது. நாளடைவில் அந்த வெட்கம்
விவேகமானது. அரசின் ராஜ்ய காரியங்களில் சிம்மவிஷ்ணு மந்திராயினியின் கருத்தை கேட்க
ஆரம்பித்தார். அவரின் புத்தி கூர்மையைக் கண்டு காஞ்சி நகரே வியந்தது. அத்தோடு நிற்காத
மந்திராயினி போர் பயிற்சிகளிலும் குதிரை வில்வித்தை வாள் பயிற்சி என்று அனைத்திலும்
தன்னைப் பலப்படுத்திக்கொண்டார்.
"அம்மா"...."அம்மா"..."அம்மா..."
இளவரசர்
மகேந்திரன் சுவற்றின் பக்கம் திரும்பி அமர்ந்திருந்த தன் தாய் மந்திராயினியை கூப்பிட்டு
அவள் திரும்பாததால் சத்தமாகக் கத்த அவள் திரும்பினாள். அழுது அவள் முகம் வீங்கியிருந்தது.
தோடுகள் பிரதிபலிக்கும் ஒளியை தாங்கும் கன்னங்கள் வற்றிப்போயிருந்தது. மகேந்திரனை பார்த்ததும்
அவனைக் கட்டிக்கொண்டு விசும்பினாள். மகேந்திரன் தன் தாயின் மடியில் அமர்ந்துக்கொண்டு
அவள் கண்களில் புரண்டோடும் கண்ணீரை துடைத்தான்.
"ஏன்
அம்மா அழுகிறீர்கள்...நான் தான் மன்னர் ஆகப்போகிறேனே...எனக்காகச் சிரிக்க மாட்டீர்களா
அம்மா?"
"நீ
அரசன் ஆவது தான் எனக்குப் பயமாக இருக்கிறது மகேந்திரா. நமக்கு இந்த ராஜ்ஜியம் எதுவும்
தேவை இல்லை என்று சொல்லும் நிலை எப்போது வரும் என்று நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
எங்கே உன் தந்தையை அழித்தது போல உன்னையும் இந்தச் சூழ்ச்சிகள் அழித்து விடுமோ என்று
எனக்குப் பயமாக இருக்கிறது"
"என்ன
அம்மா சொல்கிறீர்கள்? தந்தையை யார் அழித்தார்கள்? எனக்கு ஒன்னும் புரியவில்லையே அம்மா"
"உனக்கு
இந்தச் சூழ்ச்சிகள் புரியாது மகேந்திரா...எங்கே இது எல்லாம் தெரிந்துக்கொண்டால் அந்தச்
சண்டாளன் உன்னையும் கொன்று விடுவானோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. இது அனைத்தும் என்னுடனே
இருக்கட்டும். என் உயிரை கொடுத்தாவது உன் உயிரை நான் காப்பாற்றுவேன் மகேந்திரா..."
"அம்மா...நான்
நாளை விடிந்தால் அரசானாகப்போகிறவன். என்னை யாராலும் எதும் செய்ய முடியாது அம்மா. பயப்படாதீர்கள்"
என்று இளவரசர் சொல்லி முடிக்க, அந்த அறையின் சன்னல் வழியாக ஒரு உருவம் உள்ளே நுழைந்தது.
கருப்பான ஒரு துணியை உடல் முழுக்கச் சுற்றிய அந்த உருவம் மெதுவாக மந்திராயினியையும்
மகேந்திரன் பக்கமும் வந்தது. அந்த உருவம் கையில் வைத்திருந்த நீண்ட வாள் பிரதிபலித்த
ஒளி மந்திராயினியின் கண்களைக் கூச அவள் திடுக்கிட்டாள்.
அதே
நேரம்…
"தாத்தா
இது போலவே எனக்கும் ஒரு குதிரை செய்து தர மாட்டார்களா?" என்றான் முத்துக்குமரன்.
"முத்துக்குமாரா
நான் இன்று சொல்வதை நீ வாழ்க்கை முழுவதும் மறக்க கூடாது. இதோ இங்கு இருக்கும் இந்தத்
தங்க குதிரையை நான் நம் இளவரசருக்கு நாளை முடிசூட்டுதளில் அளிப்பேன். அதேபோல நீயும்
இந்தத் தங்க கலையைக் கற்றுக்கொண்டு அடுத்து வரும் மன்னருக்கு இதே போல ஒரு தங்க குதிரையைச்
செய்து கொடுக்க வேண்டும்" என்று தங்ககுமாரர் நீரில் இருந்து கழுவி எடுத்த அந்தத்
தங்க குதிரை சிலையைக் கையில் வைத்து காட்டினார். நன்றாக ஒளிர்ந்தது. அதை மெதுவாக ஒரு
பட்டுத் துணியில் சுற்றினார். ஒரு மண் பானைக்குள் அதை வைத்து, அந்தச் சிலை முழுவதும்
மறையும்படி அரிசியை நிரப்பினார். அந்தப் பானையின் வாயை ஒரு பட்டுத் துணியால் மூடி இறுக்கி
கட்டி அதை ஒரு அலமாரியில் வைத்தார். அனைத்தையும் முத்துக்குமாரன் உன்னிப்பாகப் பார்த்துக்
கொண்டிருந்தான்.
"தாத்தா...அப்போ
நான் மன்னராக முடியாதா?" என்றான் முத்துக்குமாரன்
தங்ககுமாரர்
பலமாகச் சிரித்தார். பிறகு, "முத்துக்குமாரா, இந்த ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கவும்
நம்மை வாழ வைக்கவும் இங்கு இருக்கும் பல்லவ அரசைத் தவிற யாராலும் அதைச் செய்ய முடியாது…உனக்கு
ஏன் இந்தத் திடீர் ஆசை ?...வேண்டுமானால் உன்
நண்பன் இளவரசர் மகேந்திரரிடம் கேட்டு ராஜ்யத்தின் ஒரு பகுதிக்கு நீ சிற்றசர் ஆகிவிடு..."
என்று மீண்டும் பலமாகச் சிரித்தார்.
அந்தச்
சமயம் யாரோ கதவை தட்டுவது கேட்டது. கதவு மிக வேகமாகத் தட்டப்பட்டது. உடைந்து விழுவதுபோல
இருந்த அந்தக் கதவு உடைந்தே விழுந்தது. இருட்டில் இரண்டு உருவங்கள் வீட்டிற்குள் நுழைந்தன.
2016 – சென்னை
"சார்...என்ன
ஆச்சுச் சார்...ரிப்போர்ட்ஸ் வந்துடுச்சா..." உடற்கூறு ஆய்வு அறையினுள் இருக்க
முடியாமல் கந்தசாமி வெளியே வந்துவிட, ஆய்வு முடிந்து வெளியே வந்தார் முரளிதரன்.
"இல்லை
கந்தசாமி, ரிப்போர்ட்ஸ் வர கொஞ்சம் நாள் ஆகும். ஆனா இப்போதைக்கு ஒரு சில விசயத்தைப்
பத்தி டாக்டர்ஸ் சொல்லுறாங்க..."
"என்ன
சொல்லுறாங்க சார்...?"
"அவன்
நம்ம ஊர் காரன் கிடையாது. வெளிநாட்டுக்காரன். ஐரோப்பால ஏதாவது நாட்டைச் சேர்ந்தவனா
இருப்பான்..."
இருவரும்
அந்த மருத்துவமனையில இருந்து வெளியே வந்தனர்.
"சார்,
உங்களுக்கு என்கொயரி இருக்கும்ல..."
"கண்டிப்பா
இருக்கும் கந்தசாமி, இவன் யாரு எப்படிச் செத்தானு கேட்பாங்க...ஏன் நான் தான் கொன்னேன்னு
கூட எழுதுவாங்க...ஐ வில் வேஸ் இட்...இவன் தனி ஆளு இல்லை கந்தசாமி. ஒரு பெரிய கூட்டமா
இருக்கனும். அப்புறம் நமக்குக் கிடைச்ச அந்த நடராஜர் சிலை...அதை பத்தி நோட்டிபிக்கேஷன்
போடுங்க...எங்கையாவது காணாம போயிருக்கான்னு தெரிந்த நம்ம லோக்கல் போலீஸுக்கு இந்தக்
கேஸ்ல உதவி பண்ணலாம்"
இருவரும்
ஜீப்பில் ஏற, ஜீப் துறைமுகத்தை நோக்கி நகர்ந்தது. மருத்துவமனைக்கு வெளியில் இருளில்
மறைந்திருந்த ஒரு கார் முரளிதரனும் கந்தசாமியும் சென்றுக் கொண்டிருந்த காரை பின் தொடர
ஆரம்பித்தது.
அந்தக்
கருப்பு நிற கார் அவர்களைப் பின் தொடர்வதை முரளிதரனோ கந்தசாமியோ கண்டுக்கொள்ளவில்லை.
நெரிசல் நிறைந்த நகரின் சாலைகளுக்கு நடுவே கூட அந்தக் கருப்புக் கார் வந்துக்கொண்டே
இருந்தது. முரளிதரனின் ஜீப் நகர்புற சாலையில் இருந்து பிரிந்து ஆள் நடமாட்டமே இல்லாத
ஒரு மணல் சாலைக்குள் நுழைய அந்தக் காரும் பின்னாலேயே வந்தது. அந்தச் சாலையில் இந்த
இரண்டு காரை தவிற வேறு எந்தக் கார்களும் இல்லை. கரடுமுரடான அந்தச் சாலையில் இரண்டு
கார்களும் குலுங்கி குலுங்கி சென்றுக்கொண்டிருந்தது.
முரளிதரனுக்கு
அப்போதுதான் அந்தக் கார் ஒரு வேளை தங்களைப் பின் தொடர்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.
"கந்தசாமி
நமக்குப் பின்னாடி ஒரு கார் வருது பாத்தீங்களா?"
"ஆமா
சார் அதுக்கு என்ன...?"
"இந்தக்
குறுக்குபாதை பெரிசா யாருக்கும் தெரியாது. சொல்லப்போனா யாரும் வரவே மாட்டாங்க.."
"ஆமா
சார்...அப்படின்னா...?"
"எனக்கு
என்னவோ இந்தக் கார் நம்மை ஃபாலோ பண்ணி வருதோன்னு ஒரு சந்தேகம்...வாங்க செக் பண்ணலாம்"
இருவரும்
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்தக் காரை நோக்கி சென்றனர். அந்தக் காரின் விளக்கொளிகளும்
அணைந்தது. யாரும் காரை விட்டு இறங்கவில்லை. இருள் நிறைந்த அந்தக் காட்டுப்பாதை சுத்தமாக
ஒளிகளற்று இருந்தது. முரளிதரனும் கந்தசாமியும் அந்தக் காரை நெருங்கினர். கந்தசாமி ஒரு
டார்ச் லைட்டை அந்தக் காரை நோக்கி அடித்தார். திடீரென்று கார் ஸ்டார்ட் ஆகி பயங்கர
வேகத்தில் வந்து கந்தசாமியை இடித்தது. இடித்த வேகத்தில் கந்தசாமி கீழே விழ, கார் அவர்
மீது ஏறி வேகமாகச் சென்றது. இந்த அதிவேகமான சம்பவங்கள் எல்லாம் என்ன என்று முரளிதரனுக்குப்
புரிவதற்குள் கந்தசாமி கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரின் ஒரு கை வலிப்பு வந்தது
போல இழுத்துக்கொண்டிருந்தது. முரளிதரன் ஓடிச்சென்று அவரைத் தூக்கி காரில் போட்டுக்கொண்டு
வேகமாக மருத்துவமனையை நோக்கி விரைந்தார். ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் அவரின் உயிர்
பிரிந்திருந்தது.
பகுதி – 5
துரோகமும் தியாகமும்
கிபி 7ஆம் நூற்றாண்டு
தங்ககுமாரர்
வீட்டின் கதவு உடைந்து உள்ளே வந்த இரண்டு உருவங்களை அவர் பார்த்ததுமே அவரால் அடையாளம்
சொல்ல முடிந்தது. அது மகாராணி மந்திராயினியும் இளவரசர் மகேந்திரனும் தான். இருவரும்
பதற்றத்துடன் உள்ளே நுழைந்தனர். யாரோ அவர்களைப் பின் தொடர்வதுபோலப் பின்னால் பயத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தனர். தங்ககுமாரர் உடைந்த அந்தக் கதவை எடுத்து நிமிர்த்தி வைத்து
விட்டு மகாராணி பக்கம் வந்தார்.
"வாருங்கள்
மகாராணி... இந்த நேரத்தில் என்னுடைய இல்லத்திற்கு நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று எனக்குத்
தெரியவில்லை அம்மா... ஏதோ பிரச்சனைபோலத் தோன்றுகிறதே..."
"ஆம்
தங்ககுமாரரே பிரச்சனைதான்...பெரிய பிரச்சினை...பல்லவ சாம்ராஜ்யத்தையே அச்சுறுத்தும்
மிகப்பெரிய பிரச்சினை..."
"அது
எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் நான் என் உயிரை கொடுத்தாவது இந்தப் பல்லவத்தைக்
காப்பாற்றுவேன் அம்மா...ஆனால் அது என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் மகாராணி..."
"சொல்கிறேன்
குமாரரே..." மகாராணி இளவரசரை வீட்டின் ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு மீண்டும்
தங்ககுமாரர் அருகில் வந்து பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில் முத்துக்குமாரனுக்கும்
நடப்பவை யாதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
"குமாரரே
நம் மன்னர் சிம்மவிஷ்ணு இயற்கையாக இறந்தார் என்றே எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மக்களும் அண்டை நாட்டு மன்னர்களும் அதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் எனக்கு அதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. மன்னர் எந்தவிதமான நோயும் பெறவில்லை.
அவருக்கு எந்தவிதமான உடல் பாதிப்பும் ஏற்படவில்லை. இதில் சாளுக்கியர்களின் சதி இருக்குமோ
என்று நான் கருதுகிறேன். நம்முடைய பல்லவ அரண்மனைக்குள்ளேயே சாளுக்கியர்களுக்குத் துணைப்போகக்
கூடிய பெரிய சக்திகள் இயங்குகின்றது. இன்று நானும் மகேந்திரனும் என்னுடைய அறையில் பேசிக்கொண்டிருக்கும்
போது சன்னல் வழியாக யாரோ ஒரு உருவம் எங்களை நோக்கி ஒரு வாளை எடுத்துக்கொண்டு வந்தது.
அந்த ஆள் யாரென்று தெரியவில்லை. அவனுடன் போராடிதான் இப்போது தப்பித்து வந்துள்ளோம்.
எங்களை அந்த உருவம் பின் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. எங்களுக்கு யாரை நம்புவது
நம்பக் கூடாது என்று தெரியவில்லை. விடிந்தால் நடக்கவிருக்கும் முடிசூட்டுதல் நடக்கவிடாமல்
இன்று இரவே என்னையும் இளவரசரையும் கொன்று விடுவதற்காகத்தான் இதுவெல்லாம் நடக்கிறது
போல...."
"பயப்படாதீர்கள்
மகாராணி...இது பாதுகாப்பான இடம் தான். நான் உடனடியாகச் சென்று மருதையப்பருக்கும் சூரியத்தேவருக்கும்
இந்தத் தகவல்களைச் சொல்லிவிட்டு வருகிறேன்..."
"வேண்டாம்
தங்ககுமாரரே...அவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் இந்தச் சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களோ
என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் அவர்களிடம் செல்வது நாமே நம்மைக்
காட்டி கொடுப்பதுபோல ஆகிவிடும்...எனக்கு ஒரு உதவி செய்யங்கள்..."
"சொல்லுங்கள்
மகாராணி"
"எனக்கு
ஒரு குதிரை கொடுங்கள். நான் இளவரசரை அழைத்துக்கொண்டு வடவூர் சிற்றரசர் என் சகோதரர்
ஆதிவல்லவனிடம் சென்றுவிடுகிறேன். சிறிதுகாலம் அங்குப் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு
இந்த உதவி மட்டும் செய்யுங்கள் குமாரரே"
"மகாராணி
இது உதவி இல்லை. என் பாக்கியம். என்னிடம் இரண்டு குதிரைகள் இருக்கிறது. உங்களை வடவூர்
வரை பாதுகாப்பாக வந்து விட்டுவிட்டு வருகிறேன். எனக்குத் தங்கள் கூடவே வர அனுமதி தாருங்கள்
மகாராணி..."
"இல்லை
குமாரரே. நீங்கள் இங்கு இருக்க வேண்டும். ராஜ்ஜியத்தில் மறைந்துள்ள அந்தச் சூழ்ச்சிக்காரன்
யார் என்று நீங்கள் கண்டுப்பிடிக்க வேண்டும். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யம் அமைவதற்காக
நீங்கள் காஞ்சி நகரிலேயே இருக்க வேண்டும்..."
"உத்தரவு
மகாராணி. ஆனால் தங்களின் இந்தப் பயணம் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்..."
"ஆபத்துகளைப்
பார்த்தவள் நான். என்னால் சமாளிக்க முடியும். ஒருவேளை என்னுடைய உயிர் போனாலும் நீங்கள்
இளவரசரை யாருக்கும் தெரியாத இடத்தில் வளர்த்து அவரை மீண்டும் இந்தப் பல்லவத்தின் மன்னராக்க
வேண்டும்"
"கண்டிப்பாக
மகாராணி. நாம் விரைந்து செயல்பட வேண்டும். வாருங்கள்..." என்று மகாராணியையும்
இளவரசரையும் தன் வீட்டிற்குப் பின் பக்கம் இருக்கும் குதிரை லாடத்திற்கு அழைத்துக்கொண்டு
போன தங்ககுமாரர் அதில் ஒரு குதிரையைத் தயார் செய்தார். கருப்பு கம்பளி ஒன்றை மகாராணியிடம்
கொடுத்து அவரைப் போர்த்திய படி போகச்சொன்னார். இளவரசருக்காகத் தான் செய்த தங்ககுதிரை
கொண்ட பானையைக் குதிரையின் முதுகில் கட்டினார்.
இளவரசர்
முன்னும் மகாராணி பின்னும் அமர அந்தக் குதிரை வேகமாகத் தங்ககுமாரர் இல்லத்திலிருந்து
கிளம்ப இருட்டில் மறைந்தது.
1996 - காஞ்சிபுரம்
ஜெயக்குமாரும்
சதீஷும் அப்போது காஞ்சிப்புரத்தில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனர். இருவர்
வீடும் ஒரே தெருவில் இருந்தது. சிறு வயது முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.
விடுமுறை நாட்களில் ஏதாவது காட்டுப்பகுதிகளுக்குள் சுற்றித் திரிவார்கள். ஜெயக்குமாரின்
அப்பா அவன் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராக இருந்த காரணத்தால் அவரிடம் கேட்டு படிப்பதற்காக
சதீஷ் மாலை நேரங்களில் ஜெயக்குமாரின் வீட்டிலேயே இருப்பான். ஒரு விடுமுறை நாளில் மதிய
வெயிலில் இருவரும் ஒரு கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதிகளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் அவர்களுக்கு அந்தக் கோயில் தென்பட்டது. பெரிய மரக்கிளைகளும் புதர்களும்
மண்டிக்கிடக்கச் சிதலமடைந்த அந்தக் கோவில் அவர்களுக்குத் தெரிந்தது. பார்ப்பதற்கு ஏதோ
பேய் வீடு மாதிரி இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். அந்தக் கோவிலை பற்றி ஊருக்குள் பல
பேச்சுகள் இருக்கின்றன. யாரோ பழைய ராணி ஒருத்தி இந்த இடத்தில் இறந்துப்போனதாகவும் அவளின்
ஆவி அந்தக் கோயிலை சுற்றுவதாகவும் பல பேச்சுக்கள் இருந்தன.
ஜெயக்குமாரும்
சதீஷும் அந்தக் கோயிலில் உடைந்துப்போன படிகளில் கால் வைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள்
உள்ளே செல்வதற்குத் தாறுமாறாக வளர்ந்திருந்த மரக்கிளைகள் தடையாக இருந்தது. பல இடங்களில்
மேற்கூரை இடிந்து விழுந்து வானம் தெரிந்தது. சுவறுகளில் ஏதோ எழுதியது போல இருந்தது.
ஜெயக்குமாரும் சதீஷும் அதைப் படிக்க முயன்றுக்கொண்டிருந்தனர். அப்போது உள்ளே கருவறைப்போன்ற
அறையில் யாரோ நடப்பதுபோல ஒரு சத்தம் கேட்டது. இருவரும் பயந்துப்போயினர். சதீஷ் ஜெயக்குமாரின்
கையைப் பிடித்துக்கொண்டு போய்விடலாம் என்றான். ஆனால் ஜெயக்குமாருக்குப் போவதற்குத்
தோணவில்லை. உள்ளே யாரும் இல்லை என்று சதீஷை அமைதிப்படுத்திவிட்டு, இருவரும் அந்ந கருவறைக்குள்
நுழைந்தனர். உள்ளே சிதைந்துப்போன ஒரு பெண்ணின் சிலையிருந்தது. ஒரு ஆளின் உயரத்திற்கு
இருந்த அந்தச் சிலை வேறு எங்கோ இருந்து பெயர்த்து எடுத்து வந்து சுவறில் சாய்த்து வைத்ததுபோல
இருந்தது. அந்தப் பெண் கையில் ஒரு வாளுடன் முதுகில் ஒரு சிறுவனைச் சுமந்துக்கொண்டு
இருந்தாள். அவளின் கண்களில் இருக்கும் கோவம் பார்ப்பதற்கே இருவருக்கும் பயமாக இருந்தது.
நேரம்
ஆக ஆக அந்தச் சிலைக்கு ஏதோ உயிர் வந்துவிட்டது போலத் தோன்றியது இருவருக்கும். அந்தக்
கோவமான பார்வை இவர்களைப் பார்த்து இருப்பதுபோலத் தோன்றியது. மேலும் யாரோ அங்குமிங்கும்
நடப்பது போலத் தோன்றியது இருவருக்கும். இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு ஓரே ஓட்டமாக
அந்தக் கோயிலை விட்டு ஓடினர். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று பேசி வைத்துக்கொண்டனர்.
அடுத்த
நாள் இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டபோது அந்தப் பெண் கனவில் வந்ததாக இருவரும் கூறினர்.
மீண்டும் அந்தக் கோவிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துவிடலாமா என்று எல்லாம்
முடிவு செய்தனர். ஆனால் போகவில்லை. நாட்கள் கடந்தது. இருவரும் ஒன்றாகப் பள்ளிப்படிப்பை
முடித்துவிட்டு அகழ்வாராய்ச்சி படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்ந்தார்கள். இருவருக்கும்
இதுபோல ஊர் சுற்றுவது எந்த இடத்தையாவது ஆராய்வதில் உள்ள ஆர்வம் அவர்களை அகழ்வாய்வில்
கொண்டு போய் விட்டது. அகழ்வாராய்ச்சி கல்லூரி முடித்துவிட்டு இருவரும் வேறு வேறு இடங்களில்
பணியில் சேர்ந்தார்கள். ஆனாலும் அவ்வப்போது ஒன்றாகச் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும்
ஆராய்ச்சி செய்துக்கொண்டும் இருந்தனர். அகழ்வாராய்ச்சி அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியானது.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது அந்த ஒருநாள் வரும் வரை...
கண்ணீர் இரண்டு வகையானது…
அடர்ந்த
காடு அதன் இடைவெளிகளில் நிலவின் ஒளியை அங்கங்கு அனுமதித்துக்கொண்டிருந்தது. அந்த இடைவெளிகளில்
நிலவு தன்னுடைய அனைத்து சக்தியையும் கொண்டு தனது கதிர்களைப் பாய்வித்துக்கொண்டிருந்தது.
சில உயிர்களின் புணர்வுகள் அடுத்தப் பகலுக்கான காத்திருப்பில் இல்லாமல் நீண்ட இரவுகளுக்கான
வேண்டுதல்களில் இருந்தன. காடு குளிர்ந்த காற்றுக்கு ஒட்டுமொத்தமாகத் தலையசைத்துக் கொண்டிருந்தது.
அந்த இடத்தில் யாராக இருந்தாலும் தலைக்கே மேல் ஆட்டம் ஆடும் அந்த நெடிய மரங்களையும்
நிலவின் குளிர்ச்சியை ஒளிர்விடும் அதன் இலைகளின் வெளிச்சமும் பயம் ஏற்பட்டுவிடும்.
ஆனால் அந்தக் காட்டின் புதர்களை உரசிக்கொண்டு ஒரு குதிரையின் கால்கள் சீறிக்கொண்டிருந்தது.
அந்தக் குதிரை போகும் வேகத்தில் சில மரக்கிளைகள் உடையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
மகாராணி
மந்திராயினி நகர் பாதை வழியாக வடவூர் போக வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். நகர்
பாதை வழியாகச் செல்லும் போது மக்களுக்குத் தெரிந்தால் பெரிய கூட்டம் கூடவும் ஆபத்துகள்
அதிகமாக வரவும் வாய்ப்பு உள்ளதாக அவர் கருதினார். அதனால் காட்டு விலங்குகள் அதிகமாக
இருக்கும் இந்தக் காட்டுப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் குதிரை செல்லும் வேகத்தில்
அவர் பல்லவ சாம்ராஜ்யத்தின் அடுத்த மன்னரை காப்பாற்ற எவ்வளவு முனைப்பாக உள்ளார் என்பதைக்
காட்டியது.
முன்னால்
இளவரசர் மந்திராயினி மீது சாய்ந்து தங்ககுதிரை பானையைப் பிடித்துக் கொண்டே நன்றாகத்
தூங்கிப்போயிருந்தார். இளவரசர் மகேந்திரனுக்கு நடப்பது பாதிப் புரிந்தும் புரியாதது
போல இருந்தது. வரும் வழியெல்லாம் நான் தானே அரசன் நான் ஏன் ஓடி மறைய வேண்டும் என்று
கேட்டுக்கொண்டு வந்தான். அசதியும் களைப்பும் அடுத்த நாள் தான் அரசன் ஆகப் போகிறோம்
என்ற கலைந்த கனவையும் சுமந்துக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சு இதயம் பறக்கும் குதிரையின்
எதிர்க்காற்றில் உறங்கிப்போனது.
குதிரை
ஒரு இடத்தில் களைப்பில் மெதுவாக நின்றது. ஒளியே இல்லாமல் மரங்கள் அந்த இடத்திற்குக்
கூரை அமைத்திருந்தன. இன்னும் கொஞ்சம் தூரத்தில் வடவூர் வந்துவிடும். ஆனால் என்ன செய்வது
இந்தக் குதிரை களைப்பில் நின்று விட்டதே. சரி என்று மகாராணி குதிரையை ஒரு மரத்தில்
கட்டிவிட்டு ஒரு பாறையின் மீது அமர்ந்து இளவரசரை தன் மடியில் போட்டுக்கொண்டார். அந்த
இருளில் யாருக்கும் இவர் இங்கே இருக்கிறார் என்று கூட அடையாளம் தெரியப்போவது இல்லை.
மகாராணியின் கண்கள் தூக்கில் சுழன்றது.
திடீரென்று
யாரோ வருவதுபோல இலைகளின் சலசலப்பு கேட்டது. அது ஒரு பக்கமிருந்து வரவில்லை. மந்திராயினியை
சுற்றி அனைத்துத் திசைகளில் இருந்தும் வந்தது. யாரோ அவரை நெருங்கி வருவதுப்போலக் கேட்டது.
மந்திராயினி உடனடியாகத் தூங்கிக் கொண்டிருந்த இளவரசரை குதிரையின் மேல் உட்கார வைத்து,
குதிரையோடு சேர்த்துக் கட்டினார். மரத்தில் கட்டிய குதிரையை அவிழ்த்துவிட்டார். அவர்
ஒரு சத்தம் எழுப்பினால் போதும் குதிரை வடவூரை நோக்கி விரைய ஆரம்பித்துவிடும்.
அந்தச்
சலசலப்புச் சத்தம் அதிகமானது. நெருங்கி வந்துவிட்டதுப்போலத் தோன்றியது. மந்திராயினி
தன் வாளை எடுத்துக்கொண்டு தயாராக நின்றுக்கொண்டிருந்தார். இருளுக்குள் இருந்து ஒரு
குதிரை வந்து நின்றது. நிலவொளியின் ஒற்றைக்கீற்றில் அந்த முகம் மந்திராயினிக்குத் தெரிந்தது.
அது படைத்தளபதி சூரியத்தேவர்.
மந்திராயினி
கடும்கோபத்தோடு தன் வாளை சுழற்றுக்கொண்டு சூரியத்தேவர் பக்கம் சென்றாள்.
"ராஜ
துரோகியே சண்டாளா...உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்று ஓங்கிய தனது வாளை சூரியத்தேவனின்
கழுத்தை நோக்கி வீச, சூரியத்தேவர் தன்னுடைய வாளை எடுத்து அந்த வீச்சை தடுத்தான்.
"மகாராணி
நான் சொல்வதைக் கேளுங்கள்...என்னை தாக்காதீர்கள்" என்று மந்திராயினியை தட்டிவிட
அவள் சற்று பின்வாங்கினாள். மீண்டும் தன் வாளை சூரியத்தேவன் நோக்கி வீச, சூரியத்தேவன்
அதைத் தடுத்து தடுத்துத் தள்ளிக்கொண்டே இருந்தான்.
இருவருக்கும்
இடையே வாள் சண்டை நடந்துக்கொண்டிருந்தது. மந்திராயினி வாள்வீச்சை சமாளிக்க முடியாமல்
சூரியத்தேவனின் வாள் கீழே விழுந்தது. அவன் மண்டியிட்டு அமர்ந்தான். மந்திராயினியின்
வாள் அவன் தலையைக் கொய்யத் தயாராக இருந்தது.
"மகாராணி
நான் தங்களைக் கொல்வதற்தாக வரவில்லை...நான் ராஜ துரோகியும் இல்லை...தங்களைக் காப்பாற்றவே
நான் இங்கு வந்தேன்"
"என்ன
நாடகம் ஆடுகிறாய் சூரியத்தேவா? ஒழுங்காக உண்மையை ஒப்புக்கொள். இல்லையேல் உன்னைக் கொன்று
விடுவேன்"
"என்னை
நீங்கள் கொல்லுங்கள் மகாராணி. இத்தனை பாதுகாப்பு நான் போட்டிருந்தாலும் இந்தச் சாளுக்கியர்களை
நம் தேசத்திற்குள் ஊடுருவியதை அறியாமல் இருந்ததற்கு நீங்கள் என்னைக் கொல்லுங்கள் மகாராணி.
அந்த நயவஞ்சகன் இத்தனை நாள் நம்முடன் இருந்தும் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவனாக இருந்ததற்கு
என்னைக் கொல்லுங்கள் மகாராணி....." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே ஏங்கிருந்தோ
வந்த ஏட்டியொன்று மண்டியிட்டுருந்த சூரியத்தேவரின் முதுகில் குத்தி நெஞ்சில் வெளியே
வர அவன் தரையில் சாய்ந்தார்.
அந்த
ஈட்டி வந்த திசையின் பக்கமிருந்து பல குதிரைகளின் சத்தம் கேட்டது. ஒரு பெரும் படை வருவதாகத்
தோன்றியது. மந்திராயினி இளவரசர் தூங்கிக்கொண்டிருந்த குதிரைக்குச் சைகை கொடுக்கத் தயாரானார்.
2016 – வடவூர்
அடர்ந்த
வனப்பகுதிக்குள் ஜெயக்குமார் ஓடிக்கொண்டிருந்தான். யாரோ ஒருவர் அவனைப் பின் தொடர்வதுபோல
இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துப்போய் ஒடிக்கொண்டிருந்தபோது ஒரு கல் தடுக்கு கீழே
விழ அதற்கு மேல் ஓட முடியாதபடி அடிப்பட்டது. அடிப்பட்ட இடத்தில் வடியும் ரத்தத்தைத்
துடைத்துக்கொண்டு எழ முடியாமல் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான். பின்னால் துரத்தி வந்த
உருவம் அவனை நெருங்கிவிட்டது. அந்த உருவம் இப்போது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஒரு பெண். ஆம் பல வருடங்களுக்கு முன் அவன் சதீஷுடன் பாழடைந்த கோயிலுக்குச் செல்லும்போது
அங்குப் பார்த்த சிலையை ஒத்த பெண்தான் அது. அவள் முகம் கலையில் ஒளிர்ந்தாலும் இன்னொரு
பக்கம் கோபத்தில் கொதித்தது. எழுந்து நடக்கமுடியாத ஜெயக்குமார் அப்படியே ஊர்ந்து சென்றான்.
பெரிய வாளை ஜெயக்குமாரின் கழுத்தில் அந்தப் பெண் வைத்தாள்.
"சதீஷை
நீ தானே கொன்றாய்?" என்றாள் அந்தப் பெண் மிரட்டும் தொணியில்.
"இல்ல...நான்
கொல்லல...சதீஷ நான் கொல்ல...என்ன விட்டுரு..." என்று கெஞ்சினான் ஜெயக்குமார்.
அந்தப்
பெண் தன் வாளை ஜெயக்குமாரின் கழுத்தில் வைத்து அழுத்தினாள். அழுத்தியவாறே, இன்னொரு
கையை ஜெயக்குமாரின் தோள்பட்டையில் வைத்து தட்டி "சார்...சார்...சார்..."
என்றாள். ஜெயக்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.
தான்
உட்கார்ந்திருந்த மேசையில் அப்படியே தூங்கிப்போன ஜெயக்குமாரை, கதிர் எழுப்பிக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது இது அனைத்துமே கனவு என்று. ஆனால் அந்தப் பெண் அவன்
கனவில் பலமுறை வந்திருக்கிறாள். டென்ட்குள் அப்படியே தூங்கிப்போன ஜெயக்குமார் விழித்து
ஒரு கொட்டாவியுடன் எழுந்தான். அகழ்வாராய்ச்சி பணியில் பெரிதாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
அகழ்வாராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கால வரையறை நாளையுடன் முடியப்போவதால் இன்று
இரவு மட்டும் முழுவீச்சில் பணி நடந்துக்கொண்டிருந்தது. மணி இரவு பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது.
ஆராய்ச்சியாளர்கள் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தனர். ஹீலியம் விளக்குள் மின்னியது.
"என்ன
கதிர் முடிச்சிட்டிங்களா?" என்றான் ஜெயக்குமார்.
"சார்
ஒரு முக்கியமான விசயம் நீங்க வந்து பார்க்கனும்"
"என்ன
ஆச்சு கதிர்..."
"நீங்க
வந்தே ஆகனும் சார்...சம்திங் இம்பார்டண்ட்"
இருவரும்
வெளியே விளக்குகள் எரிந்துக்கொண்டிருந்த பகுதிக்கு செல்ல அங்கே குழிக்குள் இருந்து
ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு மண்பானையை எடுத்து வெளியே வைத்தார். ஜெயக்குமாரின் கண்கள் விரிந்தது.
கண்ணீர் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. அது கண்டிப்பாக ஒரு பழங்காலத்து
பொருள் தான் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஜெயக்குமாருக்கு அதில் உள்ளே
என்ன இருக்கிறது என்றும் தெரிந்திருந்தது.
அதை
மெதுவாக வாங்கி ஒரு மேசைமீது வைத்தான் ஜெயக்குமார். அனைவரும் அதைச் சுற்றி நின்றனர்.
அந்தப் பானையின் வாய் ஒரு துணியால் மூடப்பட்டிருந்தது. நைந்துப்போன அந்தத் துணியைக்
கிழியாமல் கழற்றினான் ஜெயக்குமார். உள்ளே கருப்பு நிறத்தில் அரிசி இருந்தது. பல நாட்களாக
இருந்த காரணத்தால் அப்படி ஆகியிருக்கும் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர். கண்டுபிடித்த
மகிழ்ச்சியில் எல்லாரும் கைத்தட்டினர். ஆனால் ஜெயக்குமார் மட்டும் அந்தப் பானையையே
பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு ஃபோர்செப்ஸ் எடுத்து அந்தப் பானை உள்ளே நுழைத்தான்.
அரிசிக்கு நடுவே எதுவோ தட்டுப்பட்டதுபோல இருந்தது. அப்படியே அதை இறுக்கிப்பிடித்து
மேலே தூக்கினான். கருப்பாய் இருந்த அரிசிக்கு நடுவே இருந்து ஒன்று மிலிரிந்துக்கொண்டே
மேலே வந்தது. அங்கு இருந்த மஞ்சள் வண்ண ஹீலியம் லைட்டுகளில் பிரகாசமாக ஒளிர்ந்தது அது.
ஜெயக்குமார் தேம்பித் தேம்பி அழ அந்தத் தங்ககுதிரை சிலையை முத்தமிட்டான். எல்லாருக்கும்
பயங்கரச் சந்தோசம் அவர்கள் ஏதோ முக்கியமான ஒன்றை கண்டுபிடித்துவிட்டார்கள் என்று. ஜெயக்குமாருக்கு
மட்டுமே தெரியும் அந்தத் தங்ககுதிரைக்காகத் தான் இழந்த ஒரு உயிரை.
பகுதி – 7
இரவின் விழித்திருப்பில்...
வேகமாக
வந்த குதிரைகள் மந்திராயினி அருகே வந்துவிட்டது. பத்துக் குதிரைகளுக்கு மேல் இருந்தது.
அனைத்திலும் முகமூடி அணிந்தவர்கள் கருப்பு உடையுடன் அமர்ந்திருந்தனர். அனைவரின் ஒரு
கையில் ஈட்டியும் இன்னொரு கையில் ஒரு வாளும் இருந்தது. அனைவரும் குதிரையை விட்டு கீழே
இறங்கினார்கள், ஒருவன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அவன் தான் அவர்களுக்குத் தலைவனாக
இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள் மந்திராயினி. அனைவரின் தோல் பட்டையிலும் சாளுக்கிய
முத்திரை இருந்தது.
மந்திராயினி
உடனே சத்தம் எழுப்பி இளவரசர் தூங்கிக் கொண்டிருந்த குதிரைக்குச் சத்தம் கொடுக்க அந்தக்
குதிரை வேகமாக ஓட ஆரம்பித்தது. அந்தக் குதிரையைப் பிடிக்கும்படி அந்தத் தலைவன் கூற
இரண்டு பேர் குதிரையில் ஏறி, இளவரசர் இருக்கும் குதிரையைத் துரத்திப் போக, மந்திராயினி
தன் கையில் இருந்த ஒரு வாளையும் வீழ்ந்துக்கிடந்த சூரியத்தேவரின் ஒரு வாளையும் எடுத்து
அவர்களை நோக்கி வீச, புரப்பட்ட இருவரும் உடல் சரிந்து கீழே விழுந்தனர்.
மற்ற
அனைவரும் மந்திராயினியை சுற்றிக் கொண்டு அவளை வாளால் தாக்க ஆரம்பித்தனர். அனைத்தையும்
லாவகமாகத் தடுத்த மந்திராயினி ஒரு கண்ணால் இளவரசர் குதிரை சென்ற திசையையும் பார்த்துக்கொண்டாள்.
அது வேகமாக இருளில் மறைந்தது. அது இந்நேரம் காட்டைவிட்டு நகர்புறத்திற்குள் சென்றிருக்கும்.
எப்படியாவது இளவரசர் வடவூர் கோட்டைக்குள் சென்று விடுவான் என்று நம்பினாள் மந்திராயினி.
இந்தக் கயவர்கள் ஒரு கை பார்த்துவிடுவது என்று தன் வாளில் அவர்களைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அத்தனை பேரின் வாள்களுக்கும் தன் ஒற்றை வாளால் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆனால்
போகப் போகச் சோர்ந்துப்போக ஆரம்பித்த மந்திராயினியின் தோள், வயிறு என்று எதிரிகளின்
கத்தி கிழிக்க ரத்தம் வழிந்தது. முற்றிலுமாகச் சோர்ந்துப்போய் வாளை தரையில் ஊன்றியிருந்தாள்
மந்திராயினி. சண்டைப் போட்டவர்களில் இரண்டு பேர் மட்டுமே மிச்சமிருந்தார்கள். மற்ற
அனைவரையும் மந்திராயினி சாய்த்திருந்தாள். சோர்ந்திருந்த மந்திராயினியின் முதுகில்
ஒரு வாள் கிழித்து வயிற்றின் வழியாக வெளியே வந்தது. குதிரை மேலே உட்கார்ந்திருந்த தலைவன்
கீழே இறங்கிவந்தான். முழுவதும் முகமூடி அணிந்திருந்த அவன் முகத்தில் கண்கள் மட்டும்
தெரிந்தது.
மந்திராயினியின்
உடலில் இருந்து உயிர் பிரிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அவள் மனது மகிழ்ச்சியில் இருந்தது.
எப்படியும் இளவரசர் இந்நேரம் கோட்டைக்குள் சென்றிருப்பான் என்ற மகிழ்ச்சி. தன் மகனின்
உயிரை காப்பாற்றி விட்டதான மகிழ்ச்சி. பல்லவ சாம்ராஜ்ஜியத்தை அழியாமல் பாதுகாத்த மகிழ்ச்சி.
மந்திராயினியை சுற்றி ரத்தம் படர்ந்திருந்தது.
அந்தத்
தலைவனை மந்திராயினி அருகில் வந்தான். ஆனால் அந்தக் கண்கள் அவளுக்கு எங்கோ பார்த்தது
போல இருந்தது. நன்றாகப் பார்த்த கண்கள் அது. அந்தத் தலைவன் தன் முகமூடியை கழற்றினான்.
2010 – காஞ்சிபுரம்
ஐந்து வருடங்களுக்கு முன் சதீஷ் இறந்த நாள்
சதீஷ்
அப்போது சென்னையில் ஒரு அகழ்வாராய்ச்சி பணியில் இருந்தான். அங்குச் சில கற்காலத்துப்
பொருட்கள் கிடைத்துக்கொண்டிருந்தது. அப்படியொரு நாள் வேலையில் இருக்கும்போது அவனுக்கு
அந்த ஃபோன் வந்தது.
"ஹலோ
சதீஷ் ஸ்பீக்கிப்...."
"நான்
ஜெயக்குமார் டா..."
"சொல்லுடா
எப்படி இருக்கே..ரொம்பப் பிஸியா..."
"ஆமா
சதீஷ். கொஞ்சம் வேலைதான். ஒரு முக்கியமான விஷயம். உடனே காஞ்சிபுரம் வர முடியுமா?"
"டேய்...இங்க
நானும் பயங்கர வேலையில இருக்கேன்...என்னன்னு சொல்லு..."
"இது
எல்லாத்த விடவும் முக்கியம் டா...ஒரு முக்கியமான கல்வெட்டு. நீ வந்து படிச்சு சொன்னா
நல்லா இருக்கும்"
"சரி
வரேன்..."
ஜெயக்குமார்
அறையில் அந்தக் கல்வெட்டு ஒரு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் சிதலமடைந்திருந்த
அந்தக் கல்வெட்டு முழுச் சதுரமாக இல்லாமல் முனைகளில் வெடிப்பு விழுந்திருந்தது. நடுவில்
நான்கு வரிகளில் ஏதோ எழுதியிருந்தது. பழைய தமிழ் எழுத்துக்களாக இருக்கலாம்.
சதீஷ்
வந்து சேர்ந்தான். ஜெயக்குமார் அவனுக்கு அந்தக் கல்வெட்டை காட்டினான். கொஞ்சம் நேரம்
அதையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு ஒரு பேப்பரை கையில் எடுத்து, அந்தக்
கல்வெட்டைப் பார்த்து எழுத ஆரம்பித்தான். எழுதி முடித்துவிட்டு பெரிய பெருமூச்சுடன்
ஜெயக்குமாரை பார்த்தான்.
"பல்லவ
அரசுல ஒரு வழக்கம் இருந்திருக்கு...அதாவது முடிசூடுதல் நடக்கறப்போ அவுங்களுக்கு ஒரு
பெரிய குடும்பத்த சேர்ந்தவங்க ஒரு தங்ககுதிரைய பரிசா கொடுப்பாங்க...ஆனா இந்தக் கல்வெட்டுல
குறிப்பிடப்பட்டிருக்க மகேந்திரவர்ம பல்லவனுக்கு அப்படிக் கொடுக்கபடல...என்ன காரணம்னு
தெரியல...இந்த கல்வெட்ட நீ எடுத்த இடத்துல இன்னும் ஆழமா ஒரு பட்டுத்துணியால மூடிய அரிசி
நிரப்பட்ட பானைக்குள்ள அந்தத் தங்ககுதிரை சிலை இருக்குன்னு இதுல போட்டிருக்கு...
பட்டுத்துணிப்போர்
த்தியஅரிசி குவியல்
கட்டுநிறைத்தமின்
தங்ககுதிரை குடுவை - தொன்று
தொட்டுவரும்
இக்குதிரையின் பல்லவ சூட்டல்
விட்டுப்போனதிந்த
மண்ணுக்குள் மகேந்திரவர்ம பவ்லவனுடன்"
என்று
அந்த வரிகளைப் படித்தும் காண்பித்தான்.
ஜெயக்குமாருக்கு
அப்போதுதான் எல்லாம் புரிந்தது. தான் கண்டுபிடித்த கல்வெட்டு ஒரு தடயம் இல்லை. அது
ஒரு பெரிய தடயத்திற்கான சாவி.
"இத
யார் எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிற..."
"யாராவது
புலவர்கள், அமைச்சர்கள், வீரர்கள் யாரா வேணா இருக்கலாம். நீ உடனே இன்னும் டீப்பா வேலைய
ஸ்டார்ட் பண்ணு என்னோட கணிப்பு படி இது இருக்க அந்தப் பானை அங்க தான் இருக்கனும். அதும்
இந்தக் கல்வெட்டு எடுத்த இடத்திற்குக் கீழேயே"
"நான்
ஒன்னு சொன்னா கேட்பியா...?"
"நீ
சொல்லி நான் என்னது கேட்காம போயிருக்கேன். சொல்லு..."
"நாம்
இப்போவே அங்க போவோம்...அங்க போய் அந்த இடத்த தோண்டி நம்ம எடுக்கலாம்...எனக்கு இந்த
ஆர்வம் தாங்கல..."
"டேய்...ஆர்வக்
கோளாறு...இப்போ மணி ராத்திரி பதினொன்னு...மழை வேற வரப்போகிற மாதிரி காத்து அடிக்கும்...சும்மா
இரு காலையில பாத்துக்கலாம்..."
"ப்ளீஸ்
சதீஷ்...அது தங்கம் வேற...பாதுகாப்பா இருக்குமான்னு சொல்ல முடியாது...உடனே போகலாம்
வா" என்று ஜெயக்குமார் சதீஷின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றான். அறையைப் பூட்டிவிட்டுக்
காரில் ஏறி இருவரும் செல்ல மணி பனிரெண்டு ஆகிவிட்டது.
வானம்
சிவந்துப்போயிருந்தது. எந்த நொடியில் வேண்டுமானாலும் மழை வந்துவிடுவதைப்போலக் காற்று
வீசிக்கொண்டிருந்தது. அந்த அகழாய்வு இடத்தில் யாருமே இல்லை. அங்கங்கு குழிகள் மட்டுமே
இருந்தது. ஜெயக்குமார் எந்தக் குழியில் இந்தக் கல்வெட்டை எடுத்தான் என்று கேட்டுச்
சதீஷ் அந்தக் குழியினுள் மண்வெட்டியுடன் இறங்கினான். ஆள் உயர குழி சதீஷை முழுமையாகத்
தனக்குள் வைத்துக்கொண்டது. ஜெயக்குமார் மேலே இருந்து டார்ச் லைட்டை பிடித்து சதீஷ்
தோண்டும் இடத்திற்கு ஒளி கொடுத்துக்கொண்டிருந்தான். மழை பிடிக்க ஆரம்பித்தது. எப்படியும்
தோண்டி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர் இருவரும்.
ஒரு
கட்டத்தில் மழை அதிகமானது. குடை ஏதும் இல்லாமல் இருவரும் நனைந்துப்போயினர். குழியிலும்
நீர் தெங்க ஆரம்பித்துவிட்டது. இனி தோண்ட முடியாது என்று சதீஷ் மேலே வர முற்பட்டான்.
ஒரு பக்கம் மண்ணிலேயே அமைக்கப்பட்ட படிகட்டுகள் சரிந்திருந்ததால் குதித்து ஏறிவிடலாம்
என்று முடிசெய்தான். பக்கவாட்டுச் சுவரில் கால் வைத்து மேலே நீட்டிக்கொண்டிருந்த ஜெயக்குமாரின்
கையைப் பிடிக்க முடியாமல் குழிக்குள்ளேயே சறுக்கி விழுந்தான் சதீஷ்.
அப்போதுதான்
எதிர்பாராமல் அது நடந்தது. குழியின் பக்கவாட்டு சுவர் மழைநீரில் சரிந்து விழுந்தது.
சடசடவெனச் சரிந்த மணல் சதீஷை முழுவதுமாக மூடிக்கொண்டது. ஜெயக்குமார் என்ன செய்வது என்று
தெரியாமல் கதறினான். தன் கையால் முடிந்த அளவிற்கு மண்ணை நகர்த்தியும் சதீஷ் தட்டுப்படவில்லை.
நீண்ட நேரம் கையாலேயே தோண்ட சிறிது ஆழத்திற்குக் கீழ் சதீஷ் தட்டுப்பட்டான். அவன் உடல்
முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. ஜெயக்குமார் அவனை அப்படியே தூக்கி வந்து கட்டிப்பிடித்து
அழுதான். அப்போதுதான் தெரிந்தது அவன் உடலில் உயிர் இல்லை என்று. மூச்சுமுட்ட இறந்துப்போன
சதீஷின் உடலை பிடித்துக்கொண்டு அன்று இரவு முழுவதும் அங்கேயே மழையில் உட்கார்ந்திருந்தான்
ஜெயக்குமார். தன் நண்பன் மரணத்திற்குக் காரணமானது அந்தக் கல்வெட்டுதான் என்று அதை அடித்து
நொறுக்கினான். பிறகு கொஞ்ச நாட்களுக்குப் பித்துப் பிடித்ததுபோல அலைந்தான். கடைசிவரை
அந்தக் கல்வெட்டில் என்ன இருந்தது என்பது ஜெயக்குமார் மற்றும் சதீஷைத் தவிற யாருக்கும்
தெரியாமலே போனது.
பகுதி – 8
இதுவல்ல உன் இடம்
மந்திராயினி
தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சையமான அந்தக்
கண்கள் தன் முகத்தை விலக்கிக் காட்டியது. அந்த முகத்தைப் பார்த்ததும் அவள் உடம்பில்
பாய்ந்த அத்தனை வாள்களின் வலியை விட அதிகமாக இருந்தது. அவளால் அந்த வலியை கூட வார்த்தைகளால்
பேச முடியவில்லை. அந்த முகம் அவள் பக்கத்தில் வந்து வில்லத்தனமான அந்தச் சிரிப்பை உதிர்த்தது.
அந்த முகம் தான். அவள் நிறைய முறை பார்த்த முகம். ஏன், இப்போது கூடப் பார்த்துவிட்டு
வந்த முகம். அந்த முகம் தங்ககுமாரருடையது. இத்தனை சதிகளுக்கும் காரணமான ராஜ துரோகி
தங்ககுமாரர் என்று நினைக்கும்போது மந்திராயினியிக்கு வருத்தமாக இருந்தது. பல்லவ அரசின்
விசுவாசம் மிக்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தங்ககுமாரரா இதைச் செய்தார் என்ற கேள்விகள்
அந்த இறுதி நேரத்தில் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தங்ககுமாரர்
தன் முகமூடியை கழற்றிவிட்டு தன் வாளை உறையில் நுழைத்தார். இதற்கு மேல் மந்திராயினியால்
தனக்கு ஆபத்து இல்லை என்பது போல இருந்தது அவரின் முகபாவனை. வீழ்ந்துக்கிடந்த மந்திராயினி
அருகில் மண்டியிட்டு அவள் காதுகளில் அருகில் சென்று பேசினார்.
"பரவாயில்லை.
நல்ல வீரமானவள் தான் நீ. ஆனால் உன்னுடைய வீரத்திற்கு இந்தப் பல்லவ தேசம் சரியான இடம்
கிடையாது. அதனால்தான் உன்னைச் சொர்க்க தேசத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தேன்
....ஹாஹாஹா..." அவரின் சிரிப்புச் சத்தத்தில் அந்தக் காடு அதிர்ந்தது.
மந்திராயினியின்
கண்கள் இவர் ஏன் இப்படிச் செய்தார் என்று கேட்பதுபோல இருந்தது. தங்ககுமாரர் தொடர்ந்தார்,
"என்னை
மன்னித்துவிடு மந்திராயினி எனக்கு வேறு வழியில்லை. காலம் காலமாக இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு
உயிரை கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் வம்சத்தின் விதியை மாற்ற நினைத்தேன். நான்
நல்லவனாகத்தான் இருந்தேன். இந்தத் தேசத்திற்கு என் செல்வத்தை முழுவதும் கொடுத்தேன்.
ஆனால் எங்களுக்கென்ற ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துக்கொண்டே
இருந்தது. மாபெரும் குமார சாம்ராஜ்யம் அமைய நான் எதுவும் செய்யாமல் போக எனக்குத் தோணவில்லை.
இதோ இந்தச் சாளுக்கியர் படையின் துணையுடன் இந்தப் பல்லவ தேசத்தைப் பிடிக்கப்போகிறேன்.
ஆம்! சூழ்ச்சி தான். இது மதிநுட்பம் வாய்ந்த சூழ்ச்சி. பெருந்தவம். உன் கணவர் சிம்மவிஷ்ணுவையும்
நான் தான் விஷம் வைத்துக் கொன்றேன். இதோ இப்போது உன்னைக் கொன்றுவிட்டேன். சிறிது நேரத்திற்கு
முன் விரைந்து சென்றதே, உன் மகனை கட்டிய குதிரை அது இந்தக் காட்டைத் தாண்டி வடவூருக்குச்
செல்லும் அடுத்த நொடி வடவூர் படைகள் அவனையும் கொன்றுவிடுவார்கள். அவர்களும் எனக்குத்
துணையாக இருக்கிறார்கள். நாளை விடியும்போது என் பேரன் முத்துக்குமாரன் இந்தத் தேசத்தின்
குமார சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடிசூட்டியிருப்பான். இனி வம்சம் வம்சமாக உங்களுக்குத்
தங்ககுதிரை செய்யும் வேலை எங்களுக்கு மிச்சம்...ஹாஹாஹா..." என்று மீண்டும் சிரித்தார்
தங்ககுமாரர்.
மந்திராயினி
தேவி இளவரசர் சென்ற குதிரை போன திசையில் தன் தலையைத் திருப்பிப் பார்த்தார். பாதுகாப்பு
என்று நினைத்து தன் மகனை ஆபத்தை நோக்கி அனுப்பி விட்டோமே என்று வருந்திக்கொண்டிருக்கும்
போதே, தங்ககுமாரர் ஒரு குறுவாளை எடுத்து அவள் கழுத்தில் குத்த, மிச்சமிருந்த உயிரும்
பிரிந்தது.
தங்ககுமாரர்
சொன்னது போல மந்திராயினியின் வீரத்திற்கு இந்த உலகம் இடம் கிடையாது. இது சூழ்ச்சியும்
வஞ்சகமும் நிறைந்தது. தங்ககுமாரர் மற்ற இரண்டு வீரர்களுடன் இளவரசர் குதிரை சென்ற திசையில்
விரைந்தார்.
நடந்த
அனைத்து சம்பவத்தையும் அந்தக் காட்டில் இருந்த ஒரு பழங்குடி தலைவனைப் பார்த்தான். அவனால்
உதவி செய்ய வரமுடியவில்லை. ஆனால் மந்திராயினி யாரோ மிக வீரமான பெண் எனவும் அவளை எல்லாரும்
சேர்ந்து கொன்றுவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. மந்திராயினி அவன் கண்களுக்கு தெய்வம்
போல தெரிந்தாள். அந்தப் பழங்குடியின் வீரத்திற்கான தெய்வமாகவே ஆகினாள் மந்திராயினி.
அவள் இறந்த அந்த இடத்திலேயே ஒரு சிறிய கோவில்கட்டி அந்தப் பழங்குடியினர் வணங்க ஆரம்பித்தனர்.
நாளடைவில் அந்த இடத்தில் அவளுக்கு ஒரு சிலையும் வந்தது. ஒரு வீரப்பெண் தன் குழந்தையை
முதுகில் சுமந்துக்கொண்டு கையில் வாளுடன் இருப்பதுபோன்ற சிலை. பின்னர் அந்தப் பகுதியின்
தெய்வமாக மாறினாள் மந்திராயினி. யாருக்கும் அவள் பல்லவ தேசத்தின் மகாராணி என்று தெரிந்திருக்கவில்லை.
ஆனால் அவள் வீரத்தின் வடிவம் என்று தெரிந்திருந்தது.
*
ஜெயக்குமாரும்
சதீஷும் ஐந்து வருடத்திற்கு முன் அந்தக் கல்வெட்டை படித்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த
தங்ககுதிரை சிலை அந்தக் கல்வெட்டிற்கு அடியிலேயே இருக்கும் என்று தப்பாக ஊகித்து விட்டனர்.
எப்போதும் இதுப்போன்ற கல்வெட்டுகளில் ஒன்று அந்தப் பொருள் இருக்கும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும்
அல்லது அந்தப் பொருள் அந்தக் கல்வெட்டுப் பக்கத்திலேயே எங்கேயாவது கிடைக்கும். ஆனால்
அங்கெல்லாம் கிடைக்காமல் காஞ்சிபுரத்தின் ஆய்விலிருந்து இவ்வளவு தூரம் தள்ளியிருக்கும்
வடவூரில் எப்படி வந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
தங்ககுதிரையை
எடுத்தபின் அதனைப் பத்திரமாக ஒரு பெட்டியினுள் வைத்து அதைச் சீல் செய்தான் ஜெயக்குமார்.
அந்தத் துணியையும் மண் பானையையும் அரிசியையும் தனித்தனியாகப் பெட்டிகளில் போட்டு அதைப்
பத்திரப்படுத்தினான். அனைவரையும் வீட்டிற்குப் பத்திரமாகப் போகச் சொல்லிவிட்டு அந்தச்
சிலையை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு தானும் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வண்டியை
எடுக்கக் காரில் ஏறினான் ஜெயக்குமார். கதிர் அப்போது வந்தான்.
"அப்போ
இது தானே சார் அந்த ரகசியம்...?"
ஜெயக்குமாரின்
முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
"ரகசியம்ன்னு
சொல்ல முடியாது கதிர்...இது ஒரு கனவு... இதுக்காகத் தான் நான் என்னோட நண்பன இழந்து
இருக்கேன்"
"இந்தச்
சிலையோட வரலாற்ற பத்தி சொல்லவே இல்லையே சார்...உங்களுக்கு அது தெரியும் தானே சார்..."
"அது
ஒரு பெரிய கதை கதிர். பல்லவ மன்னர்கள் முடிசூட்டுற விழாவில இந்த மாதிரி ஒரு தங்ககுதிரை
சிலையை ஒரு குடும்பத்த சேர்ந்தவங்க பரிசா கொடுக்குறது ஒரு வழக்கமா இருந்துட்டு வந்துச்சு...சிம்மவிஷ்ணுனு
ஒரு மன்னர் வரைக்கும்...அதுக்கு அப்புறம் வந்த மகேந்தரவர்மன் சின்ன வயசிலையே நாட்ட
விட்டு துரத்தப்பட்டு மறுபடியும் சோழர்களோட உதவியோட அவன் திரும்ப அரசன் ஆனான். இது
அவனுக்காகச் செய்யப்பட்ட தங்ககுதிரை. ஆனா சின்ன வயசுல அவனுக்கு இது போய்ச் சேரவே இல்லை.
இத புதைச்சு வச்சுட்டாங்க...அதுதான் அந்தக் கல்வெட்டுலையும் இருந்துச்சு. நானும் சதீஷும்
அதைத் தப்பான இடத்துல தேடிட்டு இருந்து இருக்கோம்..."
"அப்போ
இந்தச் சிலைக்காகத் தான் உங்க நண்பர் சதீஷ் உயிர விட்டாரா சார்...ஆனா யாரோ ஒருத்தர்
அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லைன்னு சொல்லுறாங்களே..."
"என்ன
கதிர் பேசுறீங்க...எதுவா இருந்தாலும் நாளைக்குக் காலையில ஆபீஸ் வாங்க பேசிக்கலாம்"
ஜெயக்குமாரின்
கார் வேகமாக அந்த இடத்தில் இருந்து இருளுக்குள் மறைந்தது. கதிரும் மற்ற ஆராய்ச்சியாளர்களும்
அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினார்கள். ஒரு வருடம் அவர்கள் வேலை செய்த அந்த இடத்தை நாளை
அவர்கள் காலி செய்துவிடுவார்கள்.
ஜெயக்குமாரின்
கார் வடவூர் சாலைகளை விடுத்து முக்கியச் சாலைகளுக்கு வந்தது. தெரு விளக்குகள் ஏதும்
இல்லாத சாலையில் எந்த வண்டிகளும் போய் வராமல் காலியாக இருந்தது. மணி ஒன்று ஆகிக்கொண்டிருந்தது.
*
கந்தசாமியின்
இறப்பினால் முரளிதரன் கொஞ்சம் ஆடிப்போயிருந்தார். செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்தப்பின்
அவரின் உடல் அன்று இரவே வீட்டிற்குக் கொடுக்கப்பட்டது. முரளிதரனுக்கும் இரண்டு வாரங்கள்
ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி உயர் அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இந்த விசயங்களை எல்லாம்
செய்யும் கூட்டத்தை உடனே பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர் மனதில் இருத்தது.
அந்த இரவே சென்னைத் துறைமுக அலுவலகத்திற்கு வந்து இதுபோன்ற சிலை கடத்தலில் தொடர்புடைய
பழைய ஃபைல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தப் போன் அவருக்கு வந்தது.
அவர் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இது இந்த வழக்கில் மிகப்பெரிய ஒரு தடயமாகக் கூட
இருக்கலாம்
பகுதி – 9
எங்கிருந்தோ வந்த கை
இளவரசர்
சென்றுக்கொண்டிருந்த குதிரை காட்டைத் தாண்ட இன்னும் சிறிது தூரம் இருந்தது. தூக்கத்தில்
இருந்த இளவரசர் மகேந்திரனுக்குக் குதிரையின் ஓட்டம் தாலாட்டுப்போல இருந்தது. அவர் உடல்
குதிரையோடு சேர்த்து கட்டியிருந்ததால் கீழே விழுவதற்கு வாய்ப்பில்லை. தூக்கத்தில் இருந்து
எழுந்தபோதுதான் தெரிந்தது தன்னுடன் அம்மா இல்லை என்று. அம்மா இல்லாமல் தான் மட்டும்
இவ்வளவு வேகத்தில் குதிரை மீது செல்வது பயமாக இருந்தது. சில பள்ளங்களில் குதிரை இறங்கி
ஏறும்போது பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார். ஒருவேளை அம்மா நான் பயப்படாமல் இருப்பதற்காகச்
சோதனை செய்கிறாளா? என்று நினைத்துக்கொண்டான் மகேந்திரன்.
அதே
சமயம் தங்ககுமாரரால் இருள் நிறைந்த காட்டில் இளவரசரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதனால்
வேறு பாதை வழியாகக் காட்டைவிட்டு வெளியே சென்று, அந்தப்பக்கம் காத்திருந்த வடவூர் படையுடன்
சேர்ந்துக்கொண்டார். எப்படியும் இளவரசர் வரும் குதிரை காட்டைவிட்டு வெளிச்சத்திற்கு
வர வேண்டுமானால் இப்படித்தான் வரவேண்டும் என்று தயாராக அங்குக் காத்திருந்தனர்.
தங்ககுமாரரின்
இந்தச் சூழ்ச்சியைச் சூரியத்தேவர் கண்டுப்பிடித்திருந்தார். அதற்காக மகாராணியைக் காப்பாற்ற
வேண்டும் என்பதற்காக விரைந்தார். ஆனால் அவரையும் கொன்று விட்டார் தங்ககுமாரர்.
ஒரு
குதிரையைத் தடதடவென வரும் சத்தம் கேட்டது. தங்ககுமாரர் எல்லாரையும் தயாராக இருக்கச்
சொன்னார். அந்தச் சத்தம் வரவர அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதோ வரப்போகிறது, வரப்போகிறது
என்று அனைவரும் குதிரையில் வரும் அந்தப் பச்சிளம் குழந்தையின் தலையை எடுக்க ஆவலாக இருந்தனர்.
என்னதான் மன்னரும் மகாராணியும் இறந்துவிட்டாலும், அரியணைக்கு உரிமையுள்ள ஒரு உயிரை
முடிப்பதில்தான் இந்த மொத்த சூழ்ச்சியின் வெற்றி இருக்கிறது.
காட்டின்
இருட்டிலிருந்து அந்தக் குதிரை வெளிப்பட்டது. தங்ககுமாரர் கொடுத்து அனுப்பிய அதே குதிரை.
மிக வேகமாக வந்த குதிரை தங்ககுமாரர் முன்னால் வந்து அமைதியாக நின்றது. ஆனால் அதில்
இளவரசர் இல்லை. தங்ககுமாரர் ஏமாற்றமாக இருந்தது. உடனே அந்தப் படைகளைக் காட்டிற்குள்
அனுப்பி, மொத்த காட்டையும் அலச சொன்னார். அந்தச் சிறுவன் எங்கு இருந்தாலும் அவனைக்
கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்.
ஆம்
உண்மையில் அந்தக் குதிரையில் இளவரசர் மகேந்திரன் இல்லை. இளவரசர் அங்கு இல்லாமல் இருப்பதற்கு
அந்தக் குதிரை காட்டை விட்டு வெளியேறும் சில நொடிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சி அரங்கேறியது.
குதிரை காட்டின் வெளிப்பக்கத்தை நோக்கி சீறிக்கொண்டிருக்கும் போது, ஒரு கை இளவரசரை
அந்தக் குதிரையின் கட்டில் இருந்து விடுவித்து லாவகமாக அவரை நிலத்தில் கொண்டு நிறுத்தியது.
ஒரு நிமிடம் நடப்பது அறியாமல் திடுக்கிட்ட மகேந்திரன் அந்தக் கைக்குச் சொந்தக்காரரை
பார்த்தவுடன் நிம்மதியடைந்தான். அவர் அமைச்சர் மருதையப்பர்.
மருதையப்பர்
இளவரசரை குதிரையை விட்டு இறக்கியவுடன் வெறும் குதிரையே காட்டைவிட்டு வெளியே வந்தது.
உடனே இளவரசரை தூக்கிக்கொண்டு ஓடினார் மருதையப்பர். புதர் மண்டிய ஒரு இடத்தில் புதர்களை
எல்லாம் நீக்கினார். தரையில் ஒரு இரும்பு கதவு இருந்தது. அதைத் திறந்து இளவரசரை உள்ளே
அனுப்பிவிட்டு அவரும் உள்ளே நுழைந்து கதவை மூடினார். அது ஒரு சுரங்கப்பாதை. அங்கிருந்து
அடுத்தச் சில மணி நேரத்திற்குள் அவர்களை வடவூரின் அந்தப்பக்கம் கொண்டு செல்லக்கூடிய
பாதை. மன்னர் சிம்மவிஷ்ணு, மருதையப்பர், சூரியத்தேவர் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த
ஒரு பாதை. அந்தச் சுரங்கத்தின் அந்தப் பக்கம் மருதையப்பருக்கு இன்னும் நெடுதூரம் பயணிக்க
ஒரு குதிரை தயாராக இருந்தது.
2016 – சென்னை
"சார்...நான்
போஸ்ட் மார்டம் பண்ண டாக்டர் சுரேஷ் பேசுறேன் சார். போஸ்ட் மார்டம் பண்ண ரிப்போர்ட்ஸ்ல
சில புதுத் தடயங்கள் கிடைச்சு இருக்கு...அது உங்களுக்குக் கேஸ்ல யூஸ்ஃபுல்லா இருக்கும்னு
தான் சொல்லலாம்னு கால் பண்ணேன் சார்" என்று ஆரம்பித்தது அந்த ஃபோன் கால். முரளிதரனுக்கு
அது ஆச்சரியமாக இருந்தது என்று சொல்வதைவிட அந்தக் கட்டத்தில் அவனுக்கு அது அவசியமாக
இருந்தது. கந்தசாமியின் மரணத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
"சொல்லுங்க
சார்..." என்று தேங்கிப்போயிருந்த தொண்டையைக் கனைத்துச் சரிசெய்துக்கொண்டான் முரளிதரன்.
"அந்த
ஆள் நாங்க முன்னாடி சொன்ன மாதிரி ஒரு ஐரோப்பா காரரோ இல்ல வெளிநாட்டுக்காரரோ இல்லை சார்...அவர்
கண்டிப்பா ஒரு இந்தியர். அதும் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா தான் இருக்க முடியும்"
"எப்படிச்
சுரேஷ் சொல்லுறீங்க?"
"அவனோட
டி.என்.ஏ ரிப்போர்ட்ஸ் தயார் பண்ணி இருக்கோம். அதுல இருக்கது முழுசா தென்னிந்திய, குறிப்பா
தமிழ்நாட்டி டி.என்.ஏ தான்"
"ஆனா
அவன் பார்க்க வெளிநாட்டுக்காரன் மாதிரிதானே இருந்தான்."
"அதுக்கும்
எங்ககிட்ட பதில் இருக்கு. இறந்துப்போன இந்த ஆள் சில வருசத்துக்கு முன்னாடி முகமாற்று
அறுவை சிகிச்சை பண்ணியிருக்கனும், கூடவே உடம்புல இருக்கத் தோல் எல்லாத்தையும் மாத்தியிருக்கனும்.
ஒன்னு இவன் ஏதும் விபத்துல சிக்கி முகம் சிதைஞ்சு அதுனால் இப்படி ஆகியிருக்கனும். இல்ல
தன்னோட அடையாளத்த மறைச்சு ஏதும் வேலை செய்ய இந்த மாதிரி மாறி இருக்கனும்...தட்ஸ் ஆல்
சார்..."
"ஓகே
சுரேஷ். எனக்கு இந்த ரிப்போர்ட்ஸ மெயில் பண்ணிங்க...ஐ வில் ப்ரொசீட் வித் இட்..."
முரளிதரன்
குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அப்படி அடையாளத்தை மறைத்துக்கொண்டு அவன் இருக்க வேண்டும்
என்றால் யார் அவன். அவனின் உண்மையான அடையாளம் என்ன? அவனைப் பின்னால் இருந்து யார் இயக்குவது
யார்? போன்ற கேள்விகள் அவன் மனதை துளைத்தது.
ஜெயக்குமாரின்
கார் ஆளில்லாத சாலையில் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தது. எதிர் திசையில் வேகமாக வந்த
ஒரு கார் ஜெயக்குமார் காரை இடிப்பதுபோல வந்து மறித்து ப்ரேக் போட்டு நின்றது. ஜெயக்குமாரும்
நிலைத்தடுமாறி ப்ரேக் போட்டு நிறுத்தினான். அந்த எதிர் காரில் இருந்து இறங்கிய நான்கு
பேர் கருப்பு உடையில் முகமூடி அணிந்திருந்தனர். யார் முகமும் தெரியவில்லை. ஜெயக்குமார்
காரை நோக்கி வந்தனர். ஜெயக்குமாரின் காரை திறந்து அவனை இழுத்து வெளியில் போட்டு இரண்டு
பேர் அடித்தனர். இருவர் காருக்குள் சென்று தங்ககுதிரை இருக்கும் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு
அவர்கள் காரில் போய் வைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தனர். இந்த இரண்டு பேரும் ஜெயக்குமாரை
அடிப்பதை விட்டுக் காரில் ஏறிக்கொண்டனர். அவர்கள் கார் வந்த திசையிலேயே புறப்பட்டது.
ஜெயக்குமார் தன்னுடைய காரில் ஏறிக்கொண்டு அந்தக் காரை வேகமாகப் பின் தொடர்ந்தான். அவர்கள்
அடித்ததில் ஜெயக்குமாரின் உதடு கிழிந்து இரத்தம் வந்துக்கொண்டிருந்தது.
அந்தக்
காரை பின் தொடர்ந்தே செல்ல அது சென்னைத் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் போய் நின்றது.
ஜெயக்குமார் தனது காரை கொஞ்சம் தூரத்தில் நிறுத்திக்கொண்டே அவர்களைக் கண்காணித்தான்.
அந்தக் காரில் இருந்த நால்வரும் இறங்கினர். இப்போது அவர்கள் முகத்தில் முகமூடி இல்லை.
அனைவர் முகமும் நன்றாகவே தெரிந்தது. அந்த நான்கு முகங்களில் ஒரு முகம் நன்றாகவே தெரிந்தது.
அது வேறு யாருமில்லை. கதிர் தான்.
பகுதி – 10
புதிய அத்தியாயம்
"அம்மா
எங்கே அமைச்சரே...எனக்காகக் காத்திருக்கிறார்களா?"
மகேந்திரனின்
அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தார் மருதையப்பர். மந்திராயினியின்
மரணத்தை இவனிடம் இருந்து மறைப்பதா அல்லது இந்தப் புரியாத வயதில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதா
என்று அவருக்குப் புரியவில்லை. இப்போது எதும் சொல்ல வேண்டாம் முதலில் இளவரசரை பாதுக்காப்பது
மட்டுமே நமது கடமை என்று அவர் பின்னால் வருவார் என்று மட்டும் கூறிவிட்டு இருவரும்
அந்தச் சுரங்கத்தில் நடந்துக்கொண்டிருந்தனர். சுவற்றில் குழாய் போற்ற ஓட்டையில் வரிசையாக
எரிந்துக்கொண்டிருந்த விளக்குகள் அவர்களுக்குப் போதுமான வெளிச்சத்தைக் கொடுத்தது. ஒரு
மணிநேரத்திற்கு மேல் இருவரும் நடந்திருப்பார்கள். சில இடங்களில் மகேந்திரனால் நடக்க
முடியவில்லை. மருதையப்பர் அவனைத் தூக்கிக் கொண்டார்.
சுரங்கத்தின்
இன்னொரு பக்கம் வாயில் வருவதுப்போல இருந்தது. பாதை கொஞ்சம் கொஞ்சமாக மேடு ஏறுவதுப்போல
இருந்தது. அது வாயில் வந்துவிட்டதற்கான அறிகுறி. இந்தப் பயணத்தில் அவர்கள் வடவூரை கடந்து
அதன் தெற்கு எல்லையை அடைந்து இருப்பார்கள். வடவூர் நகரத்தின் வழியோ அல்லது காட்டின்
வழியோ வருவது அபாயமாக இருக்கும். தங்ககுமாரன் எப்படியும் இளவரசனை உயிரோடு விட்டிருக்கமாட்டார்.
வாயில் வந்துவிட்டது. மருதையப்பர் இளவரசரை கிழே இறக்கி வைத்துவிட்டு இரும்பு கதவை மெல்லமாகத்
திறந்து இடைவெளி வழியாகப் பார்த்தார். மருதையப்பர் வரசொல்லியிருந்த சில வீரர்கள் ஒரு
குதிரையுடன் நின்றுக்கொண்டிருந்தனர். மருதையப்பர் கதவை திறந்துக்கொண்டு இளவரசரை வெளியே
தூக்கி வைத்தார். அந்த வீரர்கள் இளவரசர் முன் வணக்கம் செலுத்தினர்.
மருதையப்பர்
மகேந்திரனை குதிரை மீது ஏற்றினார்.
"நாம்
போகலாமா இளவரசே..." என்றார்.
"நாம்
எங்கே போகிறோம் அமைச்சரே..."
"தங்களைக்
கேட்காமல் இந்த முடிவுகள் எடுப்பதற்கு மன்னிக்கவும். இப்போது பல்லவ தேசத்தில் தங்களுக்குப்
பாதுகாப்புக் கிடையாது. பல்லவ சாம்ராஜ்யம் குள்ளநரிகளின் பிடியில் இருக்கிறது. அதனால்
நாம் சோழ தேசத்தில் குடந்தைக்குப் போகப்போகிறோம். அங்குச் சென்று சோழ மன்னர்களின் துணையுடன்
நாம் இந்தச் சாளுக்கிய வஞ்சகத்தை விரட்டியடிப்போம். என்னை நம்பி என் கூட வாருங்கள்
இளவரசே..."
"நீங்கள்
சொல்வது எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது அமைச்சரே. உங்கள் மீது எனக்கு
நம்பிக்கை இருக்கிறது. நான் மீண்டும் இந்தத் தேசத்தின் மன்னனாக, மகேந்திரவர்ம பல்லவனாக
அமர்வேன்"
மகேந்திரனும்
மருதையப்பரும் குடந்தையை நோக்கி பயணிக்கத் தயாராகினர். அவன் கையில் வைத்திருந்த அந்தத்
தங்ககுதிரை கொண்ட மண்பானையை மருதையப்பர் பார்த்தார். அது தான் தங்ககுமாரர் செய்த அந்தத்
தங்ககுதிரை என்பதை அறிந்துக்கொண்டார். வஞ்சகனின் தங்கம் இனி நமக்கு வேண்டாம் என்று
அதை மகேந்திரனிடம் இருந்து வாங்கி அந்த வடவூர் எல்லையிலேயே புதைக்கச் சொன்னார். அந்த
வீரர்களில் ஒருவன் குழித்தோண்டி அந்த மண்பானையைப் புதைத்து மூடினான். மருதையப்பர் ஆத்திரத்தில்
அது புதைத்த இடத்தில் காறித்துப்பினார்.
மருதையப்பரும்
குதிரையில் ஏறி அமர குதிரை சோழ தேசத்து குடந்தையை நோக்கி விரைந்தது. மகேந்திரனின் வாழ்வில்
ஒரு புதிய அத்தியாயத்தை இனி சோழ தேசம் எழுதும். இன்னும் பத்து வருடங்கள் கழித்து அவன்
சோழர்களின் துணையுடன் காஞ்சியைக் கைப்பற்றி மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை மீட்டுவதற்கான
ஒரு அத்தியாயம்.
காஞ்சி
மக்களுக்குத் தங்ககுமாரரின் சூழ்ச்சிகளும் சாளுக்கிய ஆட்சியில் அவர்கள் இருக்கப்போவது
பெரும் அதிருப்தியை உருவாக்கியது. ஏன், தன் தாத்தா இவ்வண்ணம் செய்வது முத்துக்குமாரனுக்கே
பிடிக்கவில்லை. அதிகாரிகள் வேலை செய்ய மறுத்தனர். போர் வீரர்கள் போர் செய்ய மறுத்தனர்.
புலவர்கள் புகழ்ந்துப்பாட மறுத்தனர். சில புலவர்கள் மகேந்திரனுக்கு நடந்த கொடுமைகளைக்
கல்வெட்டாக எழுதி வைத்தனர். அதில் பெரும்பாலும் உடைத்து நொறுக்கப்பட்டன. ஆனால் பெயர்
அறியாத ஒரு புலவரின் ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் மண்ணுக்குள் தப்பிப் பிழைத்தது. அது...
“பட்டுத்து ணிப்போர் த்தியஅரிசி
குவியல்
கட்டுநிறைத்தமின்
தங்ககுதிரை குடுவை - தொன்று
தொட்டுவரும்
இக்குதிரையின் பல்லவ சூட்டல்
விட்டுப்போனதிந்த
மண்ணுக்குள் மகேந்திரவர்ம பவ்லவனுடன்”
2016 – சென்னைத் துறைமுகம்
கதிர்
கையில் தங்ககுதிரை கொண்ட அந்தப் பெட்டி இருந்தது. கதிரும் மற்ற மூவரும் துறைமுகத்தின்
புக்கிங் ஆபிஸ் முன் நின்றுக்கொண்டிருந்தனர். மணி அதிகாலை மூன்று ஆகிக்கொண்டிருந்தது.
ஜெயக்குமார் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். கதிர் பக்கத்தில் சென்றதும் அவன் எதிர்ப்பார்க்காத
வண்ணம் கதிர் மீது பாய்ந்து அவனைக் கீழே சாய்த்தான் ஜெயக்குமார். அவன் கையிலிருந்த
பெட்டி உருண்டது. இருவருக்கும் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள்
அவர்களை வந்து தடுத்தார்கள். உடனே அங்கு முரளிதரன் வந்துவிட்டார். ஜெயக்குமார் கதிரை
தாக்காத மாதிரி அவனின் கையை இரண்டு வீரர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர்.
"சார்...ஐ
அம் ஆர்கியாலாஜிஸ்ட்... அந்தப் பெட்டிக்குள்ள ஒரு தங்ககுதிரை சிலை இருக்கு...அத நான்
எடுத்துகிட்டு போறப்ப இந்த நாலு பேரும் என்னை அடிச்சுப்போட்டுட்டு இந்தச் சிலையைக்
கடத்திட்டு வந்துட்டாங்க...இவனும் ஒரு ஆர்கியாலாஜிஸ்ட் தான்...நம்பிக்கை துரோகி"
என்று திமிறினான் ஜெயக்குமார்.
"உன்
பேரு ஜெயக்குமார் தானே" என்று முறைக்கும் தோணியில் கேட்டார் முரளிதரன்.
"ஆமா
சார் நான் ஜெயக்குமார் தான். ஆனா நீங்க என்ன ஏன் கேள்வி கேட்குறீங்க...நீங்க இவன உடனே
அரஸ்ட் பண்ணியாகனும்"
"இவரு
உங்கிட்ட இருந்து இந்தச் சிலையைக் கடத்திட்டு வந்தாருன்னு என்ன சாட்சி ஜெயக்குமார்"
"சார்...நான்
சிலை என்னைவிட்ட போன உடனே என்னோட சீனியர் ஆபிஸர் சத்தியசீலனுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருக்கேன்...திஸ்
இஸ் க்ரூயல் சார்...குற்றவாளிய விட்டுட்டு என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க...???"
"சரியத்தான்
கேள்வி கேட்கிறோம் ஜெயக்குமார். இவருதானே உங்க சீனியர் ஆபிஸர்...!" என்று முரளிதரன்
கைக்காட்ட ஒரு அறையில் இருந்து சத்தியசீலன் வெளியே வந்தார்.
"சார்...நீங்க
இங்கேயா....சார்...நான் சொன்னேன்ல அந்தக் கடத்தல்...நம்ம டிப்பார்ட்மெண்ட் கதிர்தான்
சார் அது...நம்பிக்கை துரோகி...."
"யார்
நம்பிக்கை துரோகின்னு எனக்குத் தெரியும் ஜெயக்குமார்" என்று கத்தினார் சத்தியசீலன்.
ஜெயக்குமார் அமைதியானான்.
"நீ
சிலையைக் கடத்திட்டாங்கன்னு எனக்கு ஃபோன் பண்ணி சொன்னது பன்னிரண்டு மணிக்கு. ஆனா கதிர்
உன்ட இருந்து சிலையை எடுத்தது ஒரு மணிக்கு. இடையில ஒரு மணிநேரம் சிலைய நீ தானே வச்சு
இருந்த. சிலைய யாரோ கடத்திட்டாங்கன்னு நீ ஒரே நாடகம் போட பார்த்த. நானும் அந்த நாடகத்த
போட்டேன். நான் தான் கதிர அனுப்பிச்சேன். எந்தச் சிலையை நீ பொய்யாக் கடத்திட்டாங்கன்னு
என்னிட்ட சொல்லி விற்க முயற்சி பண்ணினியோ அதே சிலைய ஒரு நாடகம் போட்டு இங்க கொண்டு
வந்தோம். இது இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும்...என்ன மிஸ்டர் முரளிதரன்..."
"அப்ஃகோர்ஸ்
சார்...இவனும் அந்தச் சதீஷும் சேர்ந்து இதுவரைக்கும் எத்தனை சிலைகளைக் கடத்தி இருக்காங்க...உங்களுக்கு
இந்தச் சிலை கடத்தல் பண்ண ஒரு புது அடையாளம் தேவைப்பட்டு இருக்கு, அதுக்காகச் சதீஷ்
இறந்துவிட்டதா ஒரு கதைய உருவாக்கியிருக்க...எல்லாரையும் நம்ப வச்சு இருக்க...இன்னொரு
பக்கம் சதீஷ் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வெளிநாட்டுக்காரனா மாறி இங்க இருந்து சிலைய
ஆஸ்திரேலியா வரைக்கும் போய் விற்கிறான். நீ கொடுக்க, அவன் விற்க...."
சத்தியசீலன்
தொடரந்தார், "உன்மேல எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இருந்துச்சு...சில மாதங்களுக்கு
முன்னாடி நடராஜர் சிலைய சதீஷ் கொண்டு வந்து மாட்டிக்கிட்டான். அப்போதான் முரளிதரன்
கான்டாக்ட் கிடைச்சது. நாங்க நிறையப் பேசுனப்ப தான் எல்லாச் சந்தேகமும் உன் மேல திரும்புச்சு.
நீயும் சதீஷும் பேசுன கால் ரெக்கார்டிங் எல்லாம் ஆதாரமா எங்ககிட்ட இருக்கு...அதுக்காகத்தான்
இந்த நாடகத்தைப் போட்டு உன்ன இங்க கொண்டு வந்தோம்...அப்புறம் கதிர் உன் கூடவே இருந்து
உன்னை பிடிக்கப் பெரிய உதவி பண்ணிருக்கான்..."
ஜெயக்குமார்
எதுவும் பேசாமல் கீழே குனிந்து சிரித்தான். "ப்ரில்லியண்ட்" என்று சொன்னான்.
"உன்னைவிட
ப்ரில்லியண்ட் இல்லை ஜெயக்குமார்" என்று அவன் கையில் விலங்கை மாட்டினார் முரளிதரன்.
காவலர்கள் அவனைத் துறைமுகத்தை விட்டு வெளியே கூட்டிச்சென்று ஜீப்பில் ஏற்றினார்கள்.
சத்தியசீலன்
அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டார். கதிரும் சத்தியசீலனும் துறைமுகத்தை விட்டு வெளியே
வந்தனர்.
"நன்றி
கதிர்..."
"பராவாயில்லை
சார்...இது என்னோட கடமையா நினைக்கிறேன்..."
"இந்தச்
சிலையெல்லாம் ஏன் இவ்வளவு மதிப்பா இருக்கு...ஏன் அதை கடத்துறாங்க தெரியுதா..."
"அதுதான்
தங்கமாச்சே சார்..."
"ஏன்
பழைய கற்சிலைய கூடத்தான் கடத்தி விற்கிறாங்க...மதிப்பு பொருள்ல இல்லை கதிர்...அதோட
வயசு...அதோட வரலாறு...ஹிஸ்டிரி இஸ் எவ்வரி திங்...இந்த உலகத்தோட விலைமதிப்பில்லாத விசயம்
நாம நம்மோட வருங்காலத்த நினைச்சு இருப்போம்...ஆனா அதைவிட விலைமதிப்பானது நம்ம வரலாறு"
"சரியா
சொன்னீங்க சார்..."
"கடந்துவந்த
பாதைக்கு அவ்வளோ மதிப்பு...ஆயிரத்தி நானூறு வருசம்னா சும்மாவா?"
இருவரும்
சிரித்துக்கொண்டு துறைமுகத்தை விட்டு கிளம்பினர். அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் பல்லவ
தங்ககுதிரை சென்னை அருங்காட்சியகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்.
***