"அம்மா எங்கே அமைச்சரே...எனக்காகக் காத்திருக்கிறார்களா?"
மகேந்திரனின் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தார் மருதையப்பர். மந்திராயினியின் மரணத்தை இவனிடம் இருந்து மறைப்பதா அல்லது இந்தப் புரியாத வயதில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதா என்று அவருக்குப் புரியவில்லை. இப்போது எதும் சொல்ல வேண்டாம் முதலில் இளவரசரை பாதுக்காப்பது மட்டுமே நமது கடமை என்று அவர் பின்னால் வருவார் என்று மட்டும் கூறிவிட்டு இருவரும் அந்தச் சுரங்கத்தில் நடந்துக்கொண்டிருந்தனர். சுவற்றில் குழாய் போற்ற ஓட்டையில் வரிசையாக எரிந்துக்கொண்டிருந்த விளக்குகள் அவர்களுக்குப் போதுமான வெளிச்சத்தைக் கொடுத்தது. ஒரு மணிநேரத்திற்கு மேல் இருவரும் நடந்திருப்பார்கள். சில இடங்களில் மகேந்திரனால் நடக்க முடியவில்லை. மருதையப்பர் அவனைத் தூக்கிக் கொண்டார்.
சுரங்கத்தின் இன்னொரு பக்கம் வாயில் வருவதுப்போல இருந்தது. பாதை கொஞ்சம் கொஞ்சமாக மேடு ஏறுவதுப்போல இருந்தது. அது வாயில் வந்துவிட்டதற்கான அறிகுறி. இந்தப் பயணத்தில் அவர்கள் வடவூரை கடந்து அதன் தெற்கு எல்லையை அடைந்து இருப்பார்கள். வடவூர் நகரத்தின் வழியோ அல்லது காட்டின் வழியோ வருவது அபாயமாக இருக்கும். தங்ககுமாரன் எப்படியும் இளவரசனை உயிரோடு விட்டிருக்கமாட்டார். வாயில் வந்துவிட்டது. மருதையப்பர் இளவரசரை கிழே இறக்கி வைத்துவிட்டு இரும்பு கதவை மெல்லமாகத் திறந்து இடைவெளி வழியாகப் பார்த்தார். மருதையப்பர் வரசொல்லியிருந்த சில வீரர்கள் ஒரு குதிரையுடன் நின்றுக்கொண்டிருந்தனர். மருதையப்பர் கதவை திறந்துக்கொண்டு இளவரசரை வெளியே தூக்கி வைத்தார். அந்த வீரர்கள் இளவரசர் முன் வணக்கம் செலுத்தினர்.
மருதையப்பர் மகேந்திரனை குதிரை மீது ஏற்றினார்.
"நாம் போகலாமா இளவரசே..." என்றார்.
"நாம் எங்கே போகிறோம் அமைச்சரே..."
"தங்களைக் கேட்காமல் இந்த முடிவுகள் எடுப்பதற்கு மன்னிக்கவும். இப்போது பல்லவ தேசத்தில் தங்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. பல்லவ சாம்ராஜ்யம் குள்ளநரிகளின் பிடியில் இருக்கிறது. அதனால் நாம் சோழ தேசத்தில் குடந்தைக்குப் போகப்போகிறோம். அங்குச் சென்று சோழ மன்னர்களின் துணையுடன் நாம் இந்தச் சாளுக்கிய வஞ்சகத்தை விரட்டியடிப்போம். என்னை நம்பி என் கூட வாருங்கள் இளவரசே..."
"நீங்கள் சொல்வது எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது அமைச்சரே. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் மீண்டும் இந்தத் தேசத்தின் மன்னனாக, மகேந்திரவர்ம பல்லவனாக அமர்வேன்"
மகேந்திரனும் மருதையப்பரும் குடந்தையை நோக்கி பயணிக்கத் தயாராகினர். அவன் கையில் வைத்திருந்த அந்தத் தங்ககுதிரை கொண்ட மண்பானையை மருதையப்பர் பார்த்தார். அது தான் தங்ககுமாரர் செய்த அந்தத் தங்ககுதிரை என்பதை அறிந்துக்கொண்டார். வஞ்சகனின் தங்கம் இனி நமக்கு வேண்டாம் என்று அதை மகேந்திரனிடம் இருந்து வாங்கி அந்த வடவூர் எல்லையிலேயே புதைக்கச் சொன்னார். அந்த வீரர்களில் ஒருவன் குழித்தோண்டி அந்த மண்பானையைப் புதைத்து மூடினான். மருதையப்பர் ஆத்திரத்தில் அது புதைத்த இடத்தில் காறித்துப்பினார்.
மருதையப்பரும் குதிரையில் ஏறி அமர குதிரை சோழ தேசத்து குடந்தையை நோக்கி விரைந்தது. மகேந்திரனின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை இனி சோழ தேசம் எழுதும். இன்னும் பத்து வருடங்கள் கழித்து அவன் சோழர்களின் துணையுடன் காஞ்சியைக் கைப்பற்றி மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை மீட்டுவதற்கான ஒரு அத்தியாயம்.

காஞ்சி மக்களுக்குத் தங்ககுமாரரின் சூழ்ச்சிகளும் சாளுக்கிய ஆட்சியில் அவர்கள் இருக்கப்போவது பெரும் அதிருப்தியை உருவாக்கியது. ஏன், தன் தாத்தா இவ்வண்ணம் செய்வது முத்துக்குமாரனுக்கே பிடிக்கவில்லை. அதிகாரிகள் வேலை செய்ய மறுத்தனர். போர் வீரர்கள் போர் செய்ய மறுத்தனர். புலவர்கள் புகழ்ந்துப்பாட மறுத்தனர். சில புலவர்கள் மகேந்திரனுக்கு நடந்த கொடுமைகளைக் கல்வெட்டாக எழுதி வைத்தனர். அதில் பெரும்பாலும் உடைத்து நொறுக்கப்பட்டன. ஆனால் பெயர் அறியாத ஒரு புலவரின் ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் மண்ணுக்குள் தப்பிப் பிழைத்தது. அது...
“பட்டுத்து ணிப்போர் த்தியஅரிசி குவியல்
கட்டுநிறைத்தமின் தங்ககுதிரை குடுவை - தொன்று
தொட்டுவரும் இக்குதிரையின் பல்லவ சூட்டல்
விட்டுப்போனதிந்த மண்ணுக்குள் மகேந்திரவர்ம பவ்லவனுடன்”
2016 – சென்னைத் துறைமுகம்
கதிர் கையில் தங்ககுதிரை கொண்ட அந்தப் பெட்டி இருந்தது. கதிரும் மற்ற மூவரும் துறைமுகத்தின் புக்கிங் ஆபிஸ் முன் நின்றுக்கொண்டிருந்தனர். மணி அதிகாலை மூன்று ஆகிக்கொண்டிருந்தது. ஜெயக்குமார் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். கதிர் பக்கத்தில் சென்றதும் அவன் எதிர்ப்பார்க்காத வண்ணம் கதிர் மீது பாய்ந்து அவனைக் கீழே சாய்த்தான் ஜெயக்குமார். அவன் கையிலிருந்த பெட்டி உருண்டது. இருவருக்கும் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் அவர்களை வந்து தடுத்தார்கள். உடனே அங்கு முரளிதரன் வந்துவிட்டார். ஜெயக்குமார் கதிரை தாக்காத மாதிரி அவனின் கையை இரண்டு வீரர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர்.
"சார்...ஐ அம் ஆர்கியாலாஜிஸ்ட்... அந்தப் பெட்டிக்குள்ள ஒரு தங்ககுதிரை சிலை இருக்கு...அத நான் எடுத்துகிட்டு போறப்ப இந்த நாலு பேரும் என்னை அடிச்சுப்போட்டுட்டு இந்தச் சிலையைக் கடத்திட்டு வந்துட்டாங்க...இவனும் ஒரு ஆர்கியாலாஜிஸ்ட் தான்...நம்பிக்கை துரோகி" என்று திமிறினான் ஜெயக்குமார்.
"உன் பேரு ஜெயக்குமார் தானே" என்று முறைக்கும் தோணியில் கேட்டார் முரளிதரன்.
"ஆமா சார் நான் ஜெயக்குமார் தான். ஆனா நீங்க என்ன ஏன் கேள்வி கேட்குறீங்க...நீங்க இவன உடனே அரஸ்ட் பண்ணியாகனும்"
"இவரு உங்கிட்ட இருந்து இந்தச் சிலையைக் கடத்திட்டு வந்தாருன்னு என்ன சாட்சி ஜெயக்குமார்"
"சார்...நான் சிலை என்னைவிட்ட போன உடனே என்னோட சீனியர் ஆபிஸர் சத்தியசீலனுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருக்கேன்...திஸ் இஸ் க்ரூயல் சார்...குற்றவாளிய விட்டுட்டு என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க...???"
"சரியத்தான் கேள்வி கேட்கிறோம் ஜெயக்குமார். இவருதானே உங்க சீனியர் ஆபிஸர்...!" என்று முரளிதரன் கைக்காட்ட ஒரு அறையில் இருந்து சத்தியசீலன் வெளியே வந்தார்.
"சார்...நீங்க இங்கேயா....சார்...நான் சொன்னேன்ல அந்தக் கடத்தல்...நம்ம டிப்பார்ட்மெண்ட் கதிர்தான் சார் அது...நம்பிக்கை துரோகி...."
"யார் நம்பிக்கை துரோகின்னு எனக்குத் தெரியும் ஜெயக்குமார்" என்று கத்தினார் சத்தியசீலன். ஜெயக்குமார் அமைதியானான்.
"நீ சிலையைக் கடத்திட்டாங்கன்னு எனக்கு ஃபோன் பண்ணி சொன்னது பன்னிரண்டு மணிக்கு. ஆனா கதிர் உன்ட இருந்து சிலையை எடுத்தது ஒரு மணிக்கு. இடையில ஒரு மணிநேரம் சிலைய நீ தானே வச்சு இருந்த. சிலைய யாரோ கடத்திட்டாங்கன்னு நீ ஒரே நாடகம் போட பார்த்த. நானும் அந்த நாடகத்த போட்டேன். நான் தான் கதிர அனுப்பிச்சேன். எந்தச் சிலையை நீ பொய்யாக் கடத்திட்டாங்கன்னு என்னிட்ட சொல்லி விற்க முயற்சி பண்ணினியோ அதே சிலைய ஒரு நாடகம் போட்டு இங்க கொண்டு வந்தோம். இது இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும்...என்ன மிஸ்டர் முரளிதரன்..."
"அப்ஃகோர்ஸ் சார்...இவனும் அந்தச் சதீஷும் சேர்ந்து இதுவரைக்கும் எத்தனை சிலைகளைக் கடத்தி இருக்காங்க...உங்களுக்கு இந்தச் சிலை கடத்தல் பண்ண ஒரு புது அடையாளம் தேவைப்பட்டு இருக்கு, அதுக்காகச் சதீஷ் இறந்துவிட்டதா ஒரு கதைய உருவாக்கியிருக்க...எல்லாரையும் நம்ப வச்சு இருக்க...இன்னொரு பக்கம் சதீஷ் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வெளிநாட்டுக்காரனா மாறி இங்க இருந்து சிலைய ஆஸ்திரேலியா வரைக்கும் போய் விற்கிறான். நீ கொடுக்க, அவன் விற்க...."
சத்தியசீலன் தொடரந்தார், "உன்மேல எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இருந்துச்சு...சில மாதங்களுக்கு முன்னாடி நடராஜர் சிலைய சதீஷ் கொண்டு வந்து மாட்டிக்கிட்டான். அப்போதான் முரளிதரன் கான்டாக்ட் கிடைச்சது. நாங்க நிறையப் பேசுனப்ப தான் எல்லாச் சந்தேகமும் உன் மேல திரும்புச்சு. நீயும் சதீஷும் பேசுன கால் ரெக்கார்டிங் எல்லாம் ஆதாரமா எங்ககிட்ட இருக்கு...அதுக்காகத்தான் இந்த நாடகத்தைப் போட்டு உன்ன இங்க கொண்டு வந்தோம்...அப்புறம் கதிர் உன் கூடவே இருந்து உன்னை பிடிக்கப் பெரிய உதவி பண்ணிருக்கான்..."
ஜெயக்குமார் எதுவும் பேசாமல் கீழே குனிந்து சிரித்தான். "ப்ரில்லியண்ட்" என்று சொன்னான்.
"உன்னைவிட ப்ரில்லியண்ட் இல்லை ஜெயக்குமார்" என்று அவன் கையில் விலங்கை மாட்டினார் முரளிதரன். காவலர்கள் அவனைத் துறைமுகத்தை விட்டு வெளியே கூட்டிச்சென்று ஜீப்பில் ஏற்றினார்கள்.
சத்தியசீலன் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டார். கதிரும் சத்தியசீலனும் துறைமுகத்தை விட்டு வெளியே வந்தனர்.
"நன்றி கதிர்..."
"பராவாயில்லை சார்...இது என்னோட கடமையா நினைக்கிறேன்..."
"இந்தச் சிலையெல்லாம் ஏன் இவ்வளவு மதிப்பா இருக்கு...ஏன் அதை கடத்துறாங்க தெரியுதா..."
"அதுதான் தங்கமாச்சே சார்..."
"ஏன் பழைய கற்சிலைய கூடத்தான் கடத்தி விற்கிறாங்க...மதிப்பு பொருள்ல இல்லை கதிர்...அதோட வயசு...அதோட வரலாறு...ஹிஸ்டிரி இஸ் எவ்வரி திங்...இந்த உலகத்தோட விலைமதிப்பில்லாத விசயம் நாம நம்மோட வருங்காலத்த நினைச்சு இருப்போம்...ஆனா அதைவிட விலைமதிப்பானது நம்ம வரலாறு"
"சரியா சொன்னீங்க சார்..."
"கடந்துவந்த பாதைக்கு அவ்வளோ மதிப்பு...ஆயிரத்தி நானூறு வருசம்னா சும்மாவா?"
இருவரும் சிரித்துக்கொண்டு துறைமுகத்தை விட்டு கிளம்பினர். அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் பல்லவ தங்ககுதிரை சென்னை அருங்காட்சியகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்.

- முற்றும்
Leave your comments on the story below.











