Monday, August 3, 2020

பகுதி 3 - மரத்தடி திட்டுக்கள்

மன்னர் சிம்மவிஷ்ணு இறந்து மூன்று நாட்கள் கழித்து.


மருதையப்பரும் சூரியத்தேவரும் இளவரசரின் முடிசூட்டு விழாவிற்கான வேலைகளில் இருந்தனர். மன்னர் இப்போது தான் இறந்த காரணத்தினால், பெரிய விழாவாக நடத்த வேண்டாம் என்றும் ஆரவாரமில்லாமல் ஆறு வயதே ஆகும் இளவரசர் மகேந்திரனை மன்னர் ஆக்கி, ஆட்சி வேலைகளைத் தாம் பார்த்துக் கொள்வதாக முடிவு எடுத்து இருந்தனர். மகாராணி மந்திராயினி மன்னர் இருந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவே இல்லை. மன்னர் இறந்ததிலிருந்து ஒரு இருட்டு அறையில் தன்னைத் தானே பூட்டிக்கொண்டார். சரியாக உணவு கூட உட்கொள்வதில்லை. மன்னருடன் தானும் இறந்து போயிருக்கலாம் என்று பணிப்பெண்களிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். சிற்றரசர்களோடு ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாகச் சாளுக்கிய மன்னன் படையைத் திரட்டிக்கொண்டு வர வாய்ப்பில்லாமல் போனது. தங்குமாரரிடன் இளவரசருக்கு பரிசளிப்பதற்கான தங்ககுதிரையைச் செய்யும்படி சொல்லியாகிவிட்டது. அவர் தங்கம் செய்யும் கலன்களில் கைவைத்து பல வருடங்கள் ஆகியிருந்தது. தன் வீட்டிற்குப் பின்னாலே தங்கம் உருக்கும் கலன்களை நிறுவி தங்ககுதிரையை வடிவமைப்பதற்கான வேலையை அவரும் தொடங்கிவிட்டார்.


பல்லவ அரண்மனையின் கிழக்கு மூலையில் இருக்கிறது வசந்த தோட்டம். பல்லவ அரண்மனைக்கு வந்த யாரும் இந்தத் தோட்டத்தைப் பார்க்காமல் போவது கிடையாது. பார்த்துவிட்டால் போவதற்கும் மனமிருக்காது. அவ்வளவு ரம்மியமான ஒரு இடம். உலகத்தில் எத்தனை நிறங்கள் இருக்கிறதோ அத்தனை வண்ணங்களிலும் பூக்கள் தோட்டம் முழுவதும் படர்ந்திருக்கும். நடப்பதற்கு மணல் கொண்ட தரைகளே இருக்காது. எல்லாம் புற்களால் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் மரங்களைப் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக மரங்கள் இலைகளால் நிறைந்திருக்கும் ஆனால் வசந்த தோட்டத்தில் மரங்கள் பூக்களால் நிறைந்திருக்கும். நல்ல காற்று அடிக்கும் ஒரு நாளில், அந்த மரங்களுக்கு அடியில் நின்றால் பூ மழையில் நாம் நனைவோம். ஒரு பக்கம் பூ பூக்கும் மரங்கள் என்றால் இன்னொரு பக்கம் பழம் தரும் மரங்கள். மாம்பழம், கொய்யா, மாதுளை என்று அனைத்து பழ மரங்களும் இருக்கும். வருடத்தின் எல்லா நாட்களிலும் பழங்கள் பழுத்து குலுங்கும். இத்தனைக்கும் சிம்மமாக இருப்பது அந்தத் தோட்டத்தின் குறுக்கே ஓடும் ஒரு சின்ன வாய்க்கால். எங்கிருந்துதான் வருகிறதோ தெரியாது. ஆனால் அவ்வளவு இனிப்பாக இருக்கும் அந்தத் தண்ணீர். அதில் துள்ளி குதிக்கும் மீன்களும் நீந்திச் செல்லும் வாத்துகளும் அந்தத் தோட்டத்திற்கு இன்னும் அழகை சேர்த்துவிடும்.


இளவரசர் மகேந்திரன் அந்தத் தோட்டத்தில் ஒரு திட்டின் மீது அமர்ந்து ஓடும் நீரில் அவ்வப்போது மேலே தெரிந்த மீனை பார்த்துக்கொண்டிருந்தான். ஆறு வயதே ஆகும் அவனுக்குத் தந்தை இறந்துவிட்டார் என்பது ஒரு அளவிற்குத் தான் புரிந்திருந்தது. இனி நாம் தான் நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும்போது உண்மையில் அவனுக்குச் சிரிப்பாகத் தான் இருந்தது. ஒரு உருவம் அவனைப் பின்னால் இருந்து வந்து நீரில் தள்ளுவது போலத் தெரிந்தது. அந்த உருவத்தின் நிழலினால் திடுக்கிட்ட மகேந்திரன் திட்டிலிருந்து கீழே விழுந்தான். உடனே அந்த உருவம் "ஹாஹாஹாஹா" என்று சத்தமாகச் சிரித்தது.





"நீதானா...நான் பயந்துவிட்டேன்" என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் மகேந்திரன் மீண்டும் திட்டில் ஏறி அமர்ந்துக்கொள்ள அந்த உருவமாகிய தங்ககுமாரர் பேரன் முத்துக்குமாரனும் அந்தத் திட்டில் பக்கத்தில் அமர்ந்தான்.


"எப்படி இருக்கே மகேந்திரா...? நீ கவலையாய் இருப்ப, உன்னைத் தொந்தரவு பண்ண கூடாது என்று தாத்தா சொன்னார். அதான் நான் வரவில்லை" என்று கூறிவிட்டு மகேந்திரனைப் பார்த்தான் முத்துக்குமாரன்.


"பரவாயில்லை முத்து. திடீரென்று அப்பா அசையாம படுத்துவிட்டார். எல்லாரும் அவர் இறந்துவிட்டாத சொன்னார்கள். அம்மா அந்த அறையைவிட்டு வரவே மாட்டிக்கிறாள். இப்போ நான் தான் அரசர் என்கிறார்கள். எனக்கு என்ன தெரியும் முத்து நீயே சொல்லேன். அரசன் என்றால் வாளை வைத்துச் சண்டை போடனுமே. எனக்குப் போன மாதம் தான் வாளை தூக்கவே தெரிந்தது. எனக்கே சிரிப்பு வருகிறது முத்து. பேசாமல் அமைச்சரோ தளபதியோ மன்னர் ஆகிக்கொள்ளலாமே முத்து...என்ன ஏன் கேட்கிறார்கள்?"


"அவர்கள் எல்லாம் ஆக முடியாது மகேந்திரா. எங்க தாத்தா சொல்லியிருக்கார். மன்னரோட பிள்ளைகள் தான் மன்னர் ஆகனும். அப்பன்னா நீ தானே ஆகனும். இன்னும் இரண்டு நாளில் விழான்னு தாத்தா சொன்னார்"


"எனக்குப் பயமாக இருக்கிறது முத்து. நான் மன்னர் ஆனவுடன் போர் வந்து விட்டால் என்ன செய்வது. நான் வாளை தூக்கிக்கொண்டு போர் களத்திற்குப் போக வேண்டுமா? என்னைப் போர் களத்தில் கொன்றுவிட்டால்? நான் இப்படியே இந்தத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்துவிடுகிறேனே..."


"மகேந்திரா...நீ மன்னரின் பிள்ளை. நீ இப்படியெல்லாம் பேசக்கூடாது. இப்போது போர் எல்லாம் வராது. வந்தாலும் தளபதி பார்த்துக்கொள்வார். நீ வளர்வதற்குள் நன்றாகப் போர் பயிற்சி எடுத்துக்கொண்டு பெரிய மன்னராகி விடு. நான் உன்னுடைய அமைச்சராகி விடு கிறேன். உன்னுடைய முடிசூட்டு விழாவிற்காகத் தான் என் தாத்தா தங்க குதிரை செய்து கொண்டிருக்கிறார். "


"அப்படித் தங்ககுதிரையா? பெரிய தங்ககுதிரையா? அதில் ஏறி போகமுடியுமா?"


முத்துக்குமாரன் சிரித்தான்.


"இல்லை மகேந்திரா...இது பொம்மை குதிரை. தங்கத்தில் செய்யப்பட்ட பொம்மை குதிரை. நீயும் நானும் அதை வைத்து விளையாடலாம் சரியா? நீ மன்னரானவுடன் என்னைப் பார்க்க, என் கூட விளையாட உனக்கு நேரமிருக்குமோ என்னமோ தெரியவில்லை"


"உன்னுடன் விளையாடமால் நான் எங்கே போகப்போகிறேன். காலையில் நான் மன்னராக இருக்கிறேன் மாலையில் நாம் விளையாடலாம் சரியா?"


"ஆனால் எனக்கு என்னவோ நீ மன்னர் ஆனவுடன் மாறி விடுவாயோ என்றுதான் தோன்றுகிறது"


"ஆம் முத்து, எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது. நான் மன்னரானவுடன் என்னுடைய பெயரைக் கூட மாற்றப்போகிறார்களாம்..."


"அப்படியா! என்னவென்று மாற்றப் போகிறார்களாம். என்ன பெயர் அது?"


"மகேந்திரவர்ம பல்லவன்"


2010 - சென்னை எழும்பூர் அருங்காட்சியகம்


ஐந்து வருடங்களுக்கு ஜெயக்குமாரின் நண்பன் சதீஷ் இறந்ததற்கு மறுநாள்.


சென்னை எழும்பூர்(எக்மோர்) அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கான டிக்கெட் வினியோகம் அப்போது தான் தொடங்கியிருந்தது. அந்தச் சிகப்பு நிற பழைய ஆங்கிலக் கட்டடங்களைப் பார்ப்பதே ஒரு தனி அழகு தான். அந்தக் கட்டடத்தின் வடிவமைப்பும் வாயிலில் இருந்தே தொடங்கிவிடும் பழங்காலப் பீரங்கிகளின் வரிசையும் சிலைகளும் நம்மைப் பழங்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். முழுமையாக அந்த அருங்காட்சியத்தைப் பார்த்து முடிப்பதற்குள் ஒரு நாளே முடிந்துவிடும் பட்சத்திலும் நமக்கும் எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் வரலாறு நம்மை இறுக்கப் பிடித்துக்கொண்டு இருக்கும்.


ஜெயக்குமார் வேகமாகத் தன் பைக்கில் அருங்காட்சியத்திற்குள் வந்தான். அவன் சட்டை முழுவதும் சேறு படிந்து இருந்தது. தலை சரியாக வாரப்படாமல் கலைந்துப்போயிருந்தது. வேகமாக வந்து தன் பைக்கை கூட நிறுத்தாமல் கீழே போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். அவன் அங்கு அடிக்கடி பணிக்காகவும் கல்வெட்டு மற்றும் தொல் பொருள்களை ஆய்வு செய்வதற்காக வருவதால் யாரும் அவனைத் தடுக்கவில்லை. ஆனால் அவன் வந்த வேகம் ஆய்வு செய்வதற்காக வந்த வேகம் கிடையாது. அருங்காட்சியகத்தின் முன் நுழைவு வாயில் வழியாகச் செல்லாமல், பின்னால் பணியாளர்களுக்கு இருக்கும் வழியாக உள்ளே நுழைந்தான். அவனுக்கு வணக்கம் வைத்த வாட்ச்மேன்களையும் மற்ற பணியாளர்களையும் அவன் கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. 'எப்போதும் நல்ல சிரிச்சு பேசிட்டு போற மனுசன் ஏன் இப்படிப் போவுதுன்னு தெரியலையே' என்று சில தூய்மை செய்யும் பாட்டிகள் பேசிக் கொண்டனர்.


மிக வேகமாக ஒரு அறையினுள் நுழைந்து ஏற்கனவே உடையும் நிலையில் இருந்த கதவை சாத்தி தாழிட்டான். யாருமே இல்லாத அந்த அறை முழுவதும் பழங்காலத் தொல்பொருள்கள் இருந்தன. அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் முன்பு பாதுகாத்து வைப்பதற்காக அந்த அறையில் முதலில் வைக்கப்பட்டிருக்கும். அலமாறிகளில் சில பழங்கால ரோம நாணயங்கள், ஒரு பக்கம் மன்னர்களின் தங்க ஆபரணங்கள், இன்னொரு பக்கம் சின்னச் சின்ன இரும்பு செம்பு மற்றும் கல்லினால் ஆன சிலைகள் இருந்தன. தரையில் கல்வெட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.





ஜெயக்குமாரின் கண்கள் அந்த அறையில் எதையோ தேடியது. கல்வெட்டுகளின் ஊடே அவன் கண்கள் அலைப்பாய்ந்தன. அது கிடைத்துவிட்டது போல, அந்தக் கண்ணில் இன்னும் வெறியேறி மூலையில் கிடந்த ஒரு கடப்பாரையினால் அந்தக் கல்வெட்டை மடார் என்று அதிரும் சத்தத்துடன் ஓங்கி குத்தினான். இரண்டு துண்டுகளானது. மேலும் ஓங்கி குத்த கல்வெட்டு அதன் வார்த்தைகளை இழந்த பல துண்டுகளாக உடைய ஆரம்பித்தது. அறையில் சத்தம் கேட்டுப் பணியாளர்கள் கதவை தட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஜெயக்குமார் ஆத்திரத்தோடு அந்தக் கல்வெட்டை உடைத்துக் கொண்டிருந்தான். கதவு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த பணியாளர்கள் அவனைத் தடுத்து அவனை அறைக்கு வெளியே இழுத்துச் சென்றனர். அவன் மிக அதிகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு மரத்தடியில் அவனை உட்கார வைத்துவிட்டுத் தண்ணீர் கொடுத்தனர். மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியசீலன் உடனடியாக வந்தார்.


"உங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல ஜெயக்குமார்" என்றார் சத்தியசீலன், அந்த மரத்தடி திட்டில் அவன் அருகில் அமர்ந்துக்கொண்டு.



".........."


"உங்களோட கவலை எனக்குப் புரியுது ஜெயக்குமார். உங்க நண்பரின் இறப்புக்கு நாங்க வருத்தப்படுறோம்...ஆனா அது ஒரு விபத்து...அதுக்காகச் சம்பந்தப்பட்ட கல்வெட்ட உடைக்கிறதுங்கிறது எந்த வகையில நியாயம்"



"அது விபத்து இல்ல சார்...நான்தான் அவன கொன்னேன்..."



"இங்க பாருங்க ஜெய்...உங்க குற்றவுணர்வ என்னால புரிஞ்சுக்க முடியுது...ஆனா நீங்க தப்பு பண்ணலன்னு ஊருக்கே தெரியும்..."



"இல்ல சார்...நேத்தி ராத்திரி நான் அந்த இடத்துல இறந்து இருக்க வேண்டியது..ஆனா அவன்..." என்று சத்தியசீலனின் தோலில் சாய்ந்து அழுக ஆரம்பித்தான் ஜெயக்குமார்.


"யூ ஷுட் கம் அவுட் ஆஃப் இட் ஜெயக்குமார். கஷ்டம் தான்...ஆனா நீங்க வந்தே ஆகனும்...உங்கள மாதிரி ஒரு ப்ரில்லியண்டான ஆளா நாங்க இழக்க விரும்பல...சஸ்பென்ஷன் இருக்கும்...நான் டிப்பார்ட்மெண்டல பேசி குறைக்க முயற்சி பண்ணுறேன்...அப்புறம் உங்களுக்குக் கவுன்சிலிங்கு ஏற்பாடு பண்ணுறேன்..."


"நன்றி சார்...ஆனாலும்...."


"ஆனாலும் ஒன்னும் இல்ல ஜெயக்குமார்...உங்களுக்கு அப்பா அம்மா இல்லைன்னு கேள்விப்பட்டேன். என்ன உன் அப்பா நினைச்சுக்கோ...யு நீட் ரெஸ்ட்...என் கூட வா.."


இருவரும் சத்தியசீலனின் காரில் ஏறி சென்றனர். ஜெயக்குமார் அழுது வீங்கிய கண்களுடன் சன்னல் வெளியாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சத்தியசீலன் கார் ஓட்டிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.


"அப்புறம் ஜெய்...அந்த கல்வெட்டுல என்னது பத்தி இருக்கு..."



"......"


"ஜெயக்குமார்...." என்று அவனை லேசாக உலுக்கினார். சுயநினைவுக்குத் திரும்புவதுபோல அதிர்ந்தான்.



"சொல்லுங்க சார்..."


"இல்ல… அந்தக் கல்வெட்டுல எத பத்தி இருந்துச்சு...நீங்க எத தேடி அங்க போனீங்க? நான் டிப்பார்ட்மெண்டல உனக்காகப் பேசும்போது கேப்பாங்க.... அதான் கேட்டேன்..."


"அது ஒரு தங்ககுதிரை சிலை பத்தினது சார்..."


"தங்ககுதிரையா.... யாரோடது...?"


"மகேந்திரவர்ம பல்லவன்"


- தொடரும்...


Leave your comments on the story below.




Sunday, August 2, 2020

பகுதி 2 - ஒரு தியாகமும் ஒரு நம்பிக்கையும்

மன்னன் சிம்மவிஷ்ணு இறந்ததற்குச் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னால் நடந்தது...


"மன்னா! சாளுக்கிய படைகள் நமது நெல் வயல்களை அழித்தது மட்டுமில்லாமல் தற்போது நமது உணவு சேமிப்பு கிடங்குகளையும் தாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நமது படைபலமும் முக்கால்வாசி குறைந்துவிட்டது. ஆயுதங்கள் உற்பத்தியை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஆனால் நம்மிடம் கருவூலத்தில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஆயுதங்களை உற்பத்தி செய்வதா? அல்லது மக்களின் பசியைப் போக்குவதா? என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக நம்முடன் நட்பு பாராட்டுவதுபோல இருந்த பல சிற்றரசர்கள் தற்போது சாளுக்கியர்களுடன் கைக்கோர்த்து உள்ளனர். நமக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டனர். தங்கள் தந்தையை ஏற்படுத்தி வைத்த அண்டை நாட்டு நட்புகளுக்குப் பெரும் கலங்கம் விளைவித்துவிட்டனர். எனக்குத் தற்போது இருக்கும் ஆத்திரத்தில் போர் களத்தில் பல தலைகளை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் இருக்கிறேன். ஆனால் நம்முடைய மக்களின் நிலையையும் இப்போது பார்த்தாக வேண்டும்" தோய்ந்துப்போன குரலில் பேசிவிட்டு தலையை மண்ணை நோக்கி செலுத்தினார் தளபதி சூரியத்தேவர்.


அந்த அறையில் மன்னர் சிம்மவிஷ்ணு, அமைச்சர் மருதையப்பர், தளபதி சூரியத்தேவர் மட்டுமே இருந்தனர். மன்னரின் ஒரு பக்கம் முகம் கோபத்தில் கொதித்தாலும் இன்னொரு பக்கம் கவலையில் வாடியது. தான் எடுத்துவிடும் எந்தவொரு தவறாக முடிவாலும் மக்களுக்கு எந்தவித தீங்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் மன்னர். அமைச்சர் பேச ஆரம்பித்தார்.


"மன்னா! நாம் முன்னதே முடிவெடுத்ததைப் போல மக்களிடமும் செல்வந்தர்களிடமும் நிதி பெறப்பட்டுவிட்டன. எல்லாரும் தங்களால் முடிந்த செல்வத்தை அளித்த போதிலும் நமது படைபலத்தை அதிகரிக்க முடியுமா என்பது சந்தேகமே. இதுபோன்ற இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தங்களில் ஒரு முடிவுக்காகக் காத்திருக்கிறோம் அரசே"


அமைச்சர் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மன்னர். உடனடியாக அது என்னவென்று கேட்டார்.


"அரசே நமது காஞ்சி நகரின் மக்களிடம் இருந்தும் பெரும் செல்வந்தர்களிடம் இருந்தும் கட்டாயமாக அவர்களின் தகுதிக்கு ஏற்ப செல்வத்தை நிர்ணயம் செய்து, நமது வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வர செய்யலாம் என்று ஒரு யோசனை இருக்கிறது. மன்னர் அனுமதியளித்தால்......."


"அமைச்சரே என்ன பேசகிறீர்கள்? இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மக்களுக்கு மன்னன் நம்மைக் காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்மீது நம்பிக்கை வைத்த அவர்களின் செல்வத்தின்மீது கை வைக்க எனக்கு விருப்பமில்லை. அது அவர்களின் செல்வம். கழனிகளை வளமாக்கிய விவசாயிகளின் செல்வம், நெல் மூட்டைகள் சுமந்து செல்லும் வணிகர்களின் செல்வம், நாட்டை நல்வழிப்படுத்தும் அறிஞர்களின் செல்வம். அதை ஒரு போதும் வற்புறுத்தி பெறுவதற்கு எந்த உரிமையும் நமக்குக் கிடையாது அமைச்சரே...வேறு யோசனை ஏதும் இருந்தால் கூறுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்"


"மன்னிக்க வேண்டும் மன்னா! இன்னும் ஒரு வாரத்திற்குள் சாளுக்கிய படைகள் நம்முடைய கோட்டை சுவற்றை அடைந்துவிடுவார்கள். நமக்கு உதவி செய்வதற்கும் யாரும் இல்லை. இப்படிப் பட்ட சூழலின் மனநிலையில் தான் நான் அப்படிச் சிந்தித்து விட்டேன்...மன்னிக்கவும் அரசே"


"பரவாயில்லை அமைச்சரே. சூரியத்தேவரே தாங்கள் ஏதாவது யோசனைகள் சொல்ல விழைகிறீர்களா?"


"என்ன சொல்லப்போகிறேன் மன்னா. நம்மிடன் இருக்கும் படைபலத்தை வைத்து நாம் தாக்க முயல்வோம். நடப்பதை அந்தப் பரமசிவன் கவனித்துக்கொள்வான்"


"உடனே இருக்கும் படையைத் தயார் செய்து நமது வடக்கு வாயில்களை முழுமையாகப் பாதுகாப்பதற்கு அனுப்புங்கள்...பரமசிவன் மட்டுமில்லை தேவரே...என் நாராயணனும் நம்மைக் கைவிட மாட்டன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...ௐ நமோ நாராயணனாய..." என்று மேல பார்த்துச் சொன்னார் மன்னர்


அப்போது ஒரு காவலன் அங்கு வந்து இவர்களின் பேச்சை இடைமறித்தான்.


"மன்னிக்கவும் மன்னா! தலைமை பொற்கொல்லர் தங்ககுமாரர் தங்களைப் பார்ப்பதற்கு வந்துள்ளார்" என்று அந்தக் காவலன் சிரம் தாழ்ந்து நின்றான்.


"மன்னர் இப்போது யாரையும் பார்க்க....." என்று அமைச்சர் முடிக்கும் முன்பே, "அவரை உள்ளே வரச்சொல்லுங்கள்" என்று மன்னர் முடிக்க அந்தக் காவலாளி அங்கிருந்து சென்றான். சிறிது நேரத்திற்குத் தங்ககுமாரர் அங்கு வந்தார். மன்னர் சைகைக் காட்ட அமைச்சரின் தளபதியும் அறையைவிட்டு வெளியே சென்றனர்.


தங்ககுமாரர் என்ற பெயருக்கு ஏற்றார்போல அவரின் உடல் முழுவதும் தங்கம் மின்னியது. அவர் அணிந்திருந்த ஒரு பட்டு அஸ்திரத்தின் சரிகைகளில் கூடத் தங்கம் பூசப்பட்டதுபோல இருந்தது. தங்கத்திலேயே பிறந்து, தங்கத்திலேயே வளர்ந்த ஒருவரால்தான் இப்படி இருக்க முடியும் போல இருந்தது.


"வாருங்கள் தங்ககுமாரரே! இந்த இக்கட்டான காலத்தில் மன்னன் எப்படிப் பரிதவித்துப் போயிருக்கிறான் என்று பார்த்துவிட்டு போவதற்காக வந்தீர்களா?"


"இந்த நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் நான் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பற்றித் தங்களிடம் பேச வந்துள்ளேன்"


"சொல்லுங்கள் தங்ககுமாரரே அப்படி என்ன முக்கியமான விசயம் அது?"


"என்னுடைய மகன் பவளகுமாரனை நமது நாட்டின் போர்படையில் சேர்த்துள்ளேன் அரசே. அடுத்தடுத்த போர்களில் சாளுக்கியர்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் அல்லவா?"


"இருந்தாலும் தங்ககுமாரரே...வசதியான செல்வ குடும்பத்தைச் சேர்ந்தவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்ககுதிரை செய்யும் பாரம்பரியம் பெற்ற தாங்கள் இவ்வண்ணம் செய்திருப்பது என்னை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. என் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்"


"ஆனால் மன்னா நான் சொல்ல வந்த முக்கியமான விசயம் இதுவல்ல..."


"வேறு என்ன தங்ககுமாரரே?"


"நம்முடைய நாட்டின் நிலையை நான் நன்கறிந்தவன். ஒருபக்கம் ஆயுதங்கள் செய்யக் கருவூலத்தில் செல்வம் காலியாகப்போகிறது. இன்னொரு பக்கம் நமது உணவுகளைச் சூரையாடும் சாளுக்கியப்படைகள். மக்களிடத்தில் வாங்கிய நிதியும் பத்தாமல் இருப்பதை அறிகிறேன். அதனால்......"


"அதனால் என்ன தங்ககுமாரரே...இருக்கும் செல்வத்தை வைத்து ஆயுதங்கள் தயாரித்து மக்களின் பசியையும் போக்க வேண்டும். அனைத்து பாரத்தையும் ஈசனிடம் போட்டு நாம் செயல்படுவோம்"


"அதற்காகத் தான் மன்னா நான் என்னிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் என் குடும்பம் இத்தனை ஆண்டுகளாகச் சேமித்து வைத்த அனைத்து சொத்துகளையும் இந்த நாட்டிற்குக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்" என்று கூறியவாறே தான் அணிந்திருந்த அனைத்து தங்க ஆபரணங்களையும் பட்டு துணியையும் கழட்டி மன்னரின் காலடியில் வைத்தார்.


" இந்தச் சிறியவனின் இந்தச் செல்வத்தை எடுத்துக்கொள்ளுங்கள் மன்னா"


மன்னரின் கண்களில் நீர் வழிந்தது. தன் இருக்கையைவிட்டு எழுந்து சென்று தங்ககுமாரரை கட்டியணைத்து அழுதார். அழுகொண்டே பேசினார்.


"தங்ககுமாரரே நீங்களா சிறியவன். இல்லை...இல்லை...நீங்கள் பெரியவர். உங்கள் பாட்டணார் பல்லவ சாம்ராஜ்யத்தின் உயிரை காப்பாற்றினார், நீங்கள் இந்தச் சாம்ராஜ்யத்தின் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். இந்தப் பல்லவம் வாழும் வரை உங்கள் புகழ் வீழாமல் தழைக்கும் தங்ககுமாரரே..."


"யாரங்கே" என்று சத்தம் கொடுக்க ஒரு காவலன் வந்தான்.


"எனது அறையிலிருந்து தங்ககுதிரை சிலையை உடனடியாகக் கொண்டுவாருங்கள்..."



"மன்னா...என்ன இது? எதற்குத் தற்போது உங்களது தங்ககுதிரை சிலை...நான் யூகிப்பது சரியென்றால் அது நடக்கக்கூடாது மன்னா..." என்றார் தங்ககுமாரர்.


"நீங்கள் யூகிப்பது சரிதான் குமாரரே...என்னுடைய தங்ககுதிரையை நான் இந்த நாட்டிற்கு மக்களுக்குத் தானமாக வழங்கப்போகிறேன்"


"வீர பல்லவரே! இது சரியல்ல...தங்ககுதிரை ஒரு பல்லவ மன்னரின் பலம். அதிகாரத்தின் வடிவம். ஒரு கையில் செங்கோல் விவேகத்தைக் குறித்தால் இன்னொரு கையில் தங்ககுதிரை மன்னரின் வேகத்தைக் குறிக்கும். அந்த மன்னர் இறந்தால் மட்டுமே அந்தக் குதிரை சிலையை அந்த மன்னரின் உடலோடு வைத்து புதைப்பார்கள். அதுமட்டும் அது அந்த மன்னரைவிட்டு அகலக்கூடாது மன்னா.."







"நீங்கள் சொல்வது சரிதான் குமாரரே. ஆனால், தங்களைப்போன்ற சேவை உள்ளம் கொண்ட கடவுள்கள் இந்தச் செல்வம் எல்லாம் வெறும் மாயை என்று எனக்குக் கற்பித்துவிடுகிறார்கள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தங்ககுதிரை சிலை வந்துவிட்டது.


ஒரு குதிரை ஓடுவதைப்போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த சிலை. பிடரி மயிர்கள் காற்றில் பறப்பதைப்போல இருந்தது. ஒரு போர் களத்தில் மிக வேகமாக எதிரியின் படையைக் குத்தி கிழிக்கும் குதிரையைப்போன்று கம்பீரமாகக் கைக்கு அடக்கமாக இருந்தது. மன்னர் கையில் வந்த சிலையை மன்னர், தங்ககுமாரர் தன் ஆபரணங்களைக் கழற்றி வைத்த அதே தட்டில் வைத்தார்.


தங்ககுமாரரின் இந்தச் செயல் காஞ்சிநகர் முழுவதும் பரவியது. ஒரு சிலர் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கினார்கள். ஒருசிலர் பிழைக்கத் தெரியாதவன் என்றார்கள். தங்ககுமாரர் தன்னுடைய மாட மாளியையும் கொடுத்துவிட்டு ஒரு எளிமையான குடிசைக்கு மாறினார். அந்தப் போரில் அவர் தந்த செல்வத்தை வைத்து ஆயுதங்கள் செய்து சாளுக்கியர்களை விரட்டினார்கள். தங்ககுமாரரின் மகன் பவளக்குமாரன் அந்தப் போரில் இறந்துப்போக அவன் மனைவியும் வருத்தத்தினால் இறக்க, அவர்களுக்குப் பிறந்த குழந்தையைத் தங்ககுமாரர் வளரக்க ஆரம்பித்தார். இப்போது உடலில் ஒரு தங்கம் கூட இல்லாமல் இருந்தாலும் தங்ககுமாரர் அந்தப் பெயருக்கு ஏற்றவறாகவே இருக்கிறார்.



சென்னை துறைமுகம் - 2016

வழக்கம் போலவே அன்று இரவும் துறைமுகத்தின் பணிகள் முழுவீச்சில் நடந்துக்கொண்டிருந்தன. இரண்டு வணிகக் கப்பல்கள் கரையில் நின்றுக்கொண்டிருந்தன. ஒன்றிலிருந்து இறக்குமதி பொருட்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னொரு கப்பலில் பொருட்கள் ஏற்றும் வேலை நடந்துக்கொண்டிருந்தது. மாலுமிகளும் கேப்டன்களும் கையில் வாக்கி-டாக்கியுடன் கப்பலின் மாடிகளில் நடந்துக்கொண்டிருந்தனர். இரண்டில் ஒரு கப்பல் கிளம்பப்போவதாய்த் தெரிந்தது. பொருட்களை ஏற்றும் கப்பலாகத்தான் இருக்கும், ஏனெனில் இறக்கி வைத்த கப்பலை அவ்வளவு சீக்கிரம் மீண்டும் இயக்க முடியாது. சூடான இன்ஜின்கள் ஆற வேண்டும், நீராவி கலங்களை மீண்டும் நிரப்ப வேண்டும், தொழில்நுட்ப தரவுகளைச் சரி பார்க்க வேண்டும். அதற்கான பணிகளைச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. சிமெண்ட் கரைகள் முடியும் இடங்கள் நேராக மின் விளக்குகள் போடப்பட்டிருந்தன. தண்ணீரின் உள்ளும் விளக்குகள் கயிறுகளால் கட்டி மிதக்க விடப்பட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தால் மிக நெருக்கமாக அமைந்த நட்சத்திரக் கூட்டம் போல அந்தத் துறைமுகம் தெரியும். இந்தப் பக்கம் கப்பலில் பொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. என்னென்ன பொருட்கள் ஏற்றப்படுகிறது என்று கஸ்டம்ஸ் அதிகாரிகளால் ஒரு பக்கம் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்கேன் செய்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. சில வெளிநாட்டுக்கார முகங்களும் அங்கங்கு தென்பட்டது. சுமை தூக்குபவர்கள் தலை நிறையச் சுமைகளுடன் அங்குமிங்கும் பறந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் தலையில் இருந்த குடும்பப் பாரத்தை ஒப்பிடுகையில் இந்தப் பாரம் அவர்களுக்குக் குறைவாகவே தெரியும். இங்குத் துறைமுகத்தில் ஏறிந்துக்கொண்டிருந்த ஆயிரம் விளக்குகளால் இன்று அவர்கள் வீட்டில் ஒரு நாள் அடுப்பெரியும்.






பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்த கப்பல் கிளம்பப்போவாதாய் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல அந்தக் கப்பலில் இருந்து சத்தமாக ஒரு ஹாரன் ஒலித்தது. பொருள்களை ஏற்றும் பணி தீவிரமடைந்தது. கப்பலின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. ஒரு அதிகாரி இன்னும் யாராவது பொருள்களை ஏற்ற வேண்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் இல்லை என்பது போலத் தெரிந்தது. கப்பலுக்குச் சிக்னல் கொடுக்கப்படக் கப்பலின் இரண்டாவது மணி ஒலித்தது. அப்போது ஒருவன் அவசர அவசரமாகக் கையில் ஒரு பெட்டியுடன் கப்பலில் பொருள் அனுப்புவதற்காக வந்திருந்தான். கோட்சூட்டும் கருப்புக் கூலிங் கிளாஸைப் பார்க்கும்போது நல்ல பணக்கார ஆசாமிப்போல இருந்தான். அதிகாரிகள் கப்பலுக்குத் தகவல் கொடுக்கக் கப்பல் நின்றது. வந்தவன் ஆங்கிலத்தில் தான் பேசினான். ஆனால் வெளிநாட்டுக்காரன் போலத் தெரியவில்லை.


"ஐ ஹேவ் டூ சென்ட் மை பேக்கேஞ்" என்று கஸ்டம்ஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் முன் தான் கொண்டு வந்த பெட்டியை வைத்து அவசரத்தில் தவிப்பதுபோலப் பதட்டமாக இருந்தான்.


"வி வில் செக் இட்...கந்தசாமி இத ஸ்கேன் பண்ணுங்க" என்று கந்தசாமியை அழைத்தார் முரளிதரன். கப்பலில் மூன்றாவது ஹாரன் அடிக்கப்பட்டது. கேப்டன் கப்பலின் மாடியில் இருந்து கிளம்ப வேண்டும் மணியாகிவிட்டது என்று சைகைக் காட்டினார்.


கந்தசாமி முரளிதரனைப் பார்த்தார்.


"சார் மணி ஆகிடுச்சு ஸ்கேன் பண்ணிட்டு இருந்தா டையின் ஆகும்...அனுப்பிவிட்டிரலாமா?"



"சரி அனுப்பிவிட்டிடலாம்...வாட்ஸ் இன் திஸ்?" என்று அந்த ஆளைப் பார்த்துக்கேட்டார்.


"இட்ஸ் எப் பிரிண்டிங் மிஷின்" என்றான் அவன். அவனுக்கு இன்னும் வியர்த்துக் கொட்டியது.


"சரி அனுப்பிவிடுங்க கந்தசாமி" என்று முரளிதரன் சைகைக் காட்ட அந்தப் பெட்டி முத்திரை பதிக்கப்பட்டுக் கப்பலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது.


திடீரென்று முரளிதரன் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து அந்தப் பெட்டியை நோக்கி 'ஸ்டாப் இட்' என்று கத்திக்கொண்டே ஓடினார். அப்படியே காவலர்களை அந்த ஆளையும் பிடிக்கச் சொன்னார். அவனும் துறைமுகத்திற்குள்ளே வேறு திசையில் ஓட காவலர்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினர். பெட்டியை சுமந்துக்கொண்டு சென்ற தொழிலாளி பெட்டியை கீழே வைத்துவிட்டு நகர்ந்து நின்றான்.


இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டு சென்ற அந்த ஆள் ஒரு துப்பாக்கியை எடுத்துக் காவலர்களை நோக்கி நீட்ட அனைவரும் ஒரு நிமிடம் நின்றனர். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் அவனையே தலையில் சுட்டுக்கொண்டு கீழே விழுந்தான். அவனைச் சுற்றி ரத்த வெள்ளம் படர்ந்தது.


உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதித்துப் பார்த்தனர். உள்ளே வெடிகுண்டு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முரளிதரன் மெதுவாக அந்தப் பெட்டியை பிரித்தார். துறைமுகத்தின் மஞ்சள் விளக்கொளியில் மிளிர்ந்தது ஒரு நடராஜர் சிலை.

கப்பல் மெதுவாகக் கரையை விட்டு நகர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கப்பல் ஆஸ்திரேலியா துறைமுகத்தை அடைந்திருக்கும்.



வடவூர் - 2016


அகழ்வாய்வு பணி ஆரம்பித்து ஆறு மாதங்களைத் தாண்டியிருந்தது. பல மீட்டர் குழிகள் தோண்டப்பட்ட போதிலும் எந்தத் தடயங்களும் கிடைக்கப் போவதாய்த் தெரியவில்லை. பொதுவாக அகழ்வாய்வு செய்யும்போது அந்தப் பகுதியின் இலக்கிய மற்றும் வரலாறு அடிப்படையில் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட ஆழம் தோண்டிய பின் ஒவ்வொரு தடயமாகக் கிடைக்க ஆரம்பிக்கும். ஆழம் செல்ல செல்ல தடயங்களின் காலம் அதிகரிக்கும்.


வடவூர் அகழ்வாய்வில் இதுவரை எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பது அகழ்வாய்வு செய்பவர்களுக்கும் மேல் அதிகாரிகளுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பலர் நம்பிக்கையே இல்லாமல் தோண்டிக்கொண்டிருந்தனர். உச்சி வெயிலில் வியர்வைக்களைத் துடைத்துக்கொண்டு பணி செய்வதற்குப் பலனில்லாமல் போய்விடுமோ என்று வருத்தமாக இருந்தனர். பணி நடப்பதை ஆய்வு செய்துவிட்டு ஜெயக்குமாரும் கதிரும் டென்ட்டிற்குள் வந்தனர்.


"இன்னியோட ஆறு மாசம் சார்" என்றான் கதிர்.


"ஆமா கதிர் ஆறு மாசம் ஆச்சு...அதுக்கு...இன்னும் நமக்கு ஆறு மாசம் நேரம் இருக்கு இல்லையா" என்று முறைத்தான் ஜெயக்குமார்.


"இருக்குதான் சார்...ஆனால் இப்போ வரைக்கும் இங்க ஒரு தடயம் கூடக் கிடைக்கல...ஒரு வேளை நாம தப்பான ஒரு திசையில போயிட்டு இருக்கோமோன்னு தோணுது சார்..."


"கதிர்...அகழ்வாய்வுல முக்கியமான விசயமே பொறுமைத்தான்...பொறுமையோட தேடுனா எதாச்சும் கிடைக்கும்...லெட்ஸ் ஸீ"


"இல்ல சார்...எனக்கு நம்பிக்கை இல்ல...எனக்கு மட்டும் இல்ல சார் இங்க இருக்க யாருக்குமே இல்ல...இதுல வேற ஏதோ விசயம் இருக்க மாதிரி எனக்குத் தோணுது சார்"


"என்ன தோணுது...எனக்கு புரியல?"


"இந்த அகழ்வாய்வு ஆரம்பத்துல இருந்தே ஏதோ மர்மம் கூடவே வர மாதிரி இருக்கு...உங்க நண்பன் சதீஷ் இறந்ததுக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு தோணுது சார்...எதையோ நோக்கி எங்களை நீங்க கூட்டிட்டு போறீங்க...இங்க என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரியும் அது கிடைக்க இன்னும் பல நாட்கள் ஆகும்னு நீங்க பொறுமையா இருக்கீங்க...ஆனா எங்களால அந்தப் பொறுமையா இருக்க முடியல...ஏன்னா எங்களுக்கு அது என்னன்னு தெரியல...?"


கதிர் கடகடவெனப் பேசி முடித்துவிட்டு ஜெயக்குமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். ஜெயக்குமார் எதுவும் பேசவில்லை. கொஞ்சம் நேரம் மவுனத்தைக் கலைக்க ஜெயக்குமார் பேசினான். ஆனால் கதிரை முகம் கொடுத்து பார்க்க அவனால் முடியவில்லை.


"நேரம் வரும் போது உங்களுக்கே தெரியும் இல்லையினா நானே சொல்லுவேன்...பொறுமையா இருங்க...உணவு இடைவெளி விடுங்க. எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்து வேலை செய்யட்டும். நானும் சாப்பிட்டு வரேன்" என்று வேகமாகச் சென்று காரில் ஏறிப் பறந்தான்.


- தொடரும்…

Leave your comments on the story below.


Saturday, August 1, 2020

பகுதி 1 - இரு மரணங்கள்


கிபி 7ஆம் நூற்றாண்டு - காஞ்சிபுரம்
அரண்மனையின் மாட விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இருள் பரப்பிய இருள் அதன் இருட்டை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. தூண்களை அலங்கரித்துக் கொண்டிருந்த தங்க தகடுகள் அதன் பிரதிபலிப்பை இழக்கத் தொடங்கியிருந்தன. அந்த அமாவாசை நாளில் வானமும் காலியாகி இருந்தது. நட்சத்திரங்களையும் காணவில்லை. காஞ்சிபுரத்தின் இரவு நேரத்தில் தூரத்தில் மென்மையாகக் கேட்கக்கூடிய அந்தக் கடலின் சப்தம்கூடக் கேட்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் செய்தி வெளியே கசிய மக்களும் அவர்கள் வீட்டிகளில் விளக்கை அணைத்தனர். சிலர் அழும் சத்தமும் தெருக்களில் கேட்டது.

முக்கிய அமைச்சர்களும் படைத்தளபதிகளும் அரண்மனையை நோக்கி விரைந்ததில் தெருக்களில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் துக்கத்தைத் தாண்டி நாளை சூரியன் உதிக்குமா? என்ற கேள்வியோடு மக்கள் கண்களை மூடாமல் மூடிக்கொண்டிருந்தனர்.

மிகப் பிரமாண்டமான அறையில் அலங்கரிக்கப்பட்ட கட்டில் நடுவே கிடந்தது. கட்டிலின் தூண்களில் இருந்த வேலைப்பாடுகள் கம்பீரமாக மிளிர்ந்தது. சன்னல்கள் திரையால் மறைக்கப்பட்டிருந்த போதிலும் காற்று அந்த மரணத்தை விலக்கிப்பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிலில் ஒரு மனிதர் உடலில் உயிரில்லாமல் படுத்திருந்தார். தூக்கத்திலேயே உயிர் போயிருக்க வேண்டும். அருகில் இரண்டு பணியாளர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களின் பார்வை அந்த மனிதரின்மீது இருந்து அகலவில்லை. பெரும் ஓலத்துடன் ஒரு பெண் உள்ளே வந்து இறந்துகிடந்த அந்த மனிதரின் மார்பில் சரிந்து விழுந்து அழ, அவள் அணிந்திருந்த ஒரு வைர மாலை சிதறி விழுந்தது. அவளைப் பின் தொடர்ந்து வந்த இருவர் அந்தப் பணியாளர்களுக்குச் சைகை காட்ட, அவர்கள் அந்த அறையைவிட்டு வெளியே சென்று கதவை சாத்தினர். அந்தப் பெண்ணின் அழுகைகளும் விசும்பல்களும்தான் அந்த அறை முழுவதையும் நிறைத்தன. ஒரே ஒரு மூலையில் இருந்த விளக்கும் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்தது.

"மகாராணி தாங்களே இவ்வண்ணம் அழுது தீர்த்தால் இனி நடக்க வேண்டிய ராஜ காரியங்களை யார் பார்ப்பார்கள்? மக்கள் தங்கள் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறார்கள் அரசியே"


சத்தம் வந்த திசையில் பார்த்தோமேயானால், பின்னால் நின்று கொண்டிருந்தான் மருதையப்பர். பல்லவ அரசின் அப்போதைய தலைமை அமைச்சர். மிகவும் அனுபவம் உள்ள அமைச்சர். ராஜாங்க காரியங்கள் மட்டுமின்றிப் போர் தந்திரங்களிலும் வல்லவர். ஒரு காலத்தில் சாளுக்கியர்களின் ஆதிக்கத்தைப் பல்லவர்கள் முறியடித்துக் காஞ்சியில் ஆட்சியமைக்க முக்கியமான காரணமாக இருந்தவர் மருதையப்பர்.


மன்னர் சிம்மவிஷ்ணு கடந்த ஒரு மாதமாகவே நோய்வாய்ப்பட்டுப் படுத்தப் படுக்கையாகிப்போனார். வடக்கில் இமயம் முதல் தெற்கில் இலங்கை வரை எத்தனையோ மருத்துவர்கள் வந்து பார்த்தும் மன்னரின் உடல்நலம் சரியாவதாய்த் தெரியவில்லை. மகாராணி மந்திராயினி தேவியும் அரசர் கூடவே இருந்து சேவைகளைச் செய்துக்கொண்டிருக்க, மருதையப்பர் அனைத்து அரசாங்க காரியங்களையும் திறம்படச் செய்துவந்தார். இதுதான் சமயம் என்று சாளுக்கிய ஒற்றர்கள் காஞ்சியில் புகுந்துவிட்டார்கள். அதைப் படைத்தளபதி சூரியத்தேவன் சரியான முறையில் கையாண்டு அந்த ஒற்றர்களைச் சிறையில் தள்ளிக்கொண்டிருந்தான். இப்படியே சென்ற அந்த ஒரு மாத காலம் பெரிய இடியாக மன்னரின் மரணத்தில் வந்து நின்றது.


"அரண்மனை வாயிலில் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது மகாராணி. நாம் ஆகவேண்டிய காரியங்களை மேற்கொண்டாக வேண்டும்...", கணீரென்று ஒலித்த படைத்தளபதி சூரியத்தேவனின் குரலில் மெல்ல எழுந்தார் மகாராணி. அழுது தோய்ந்து அவரின் கண்கள் சிவந்துப்போயிருந்தது. ஒரு மகாராணிக்கான எந்தவொரு கலையும் இல்லாமல் போனது அவரது முகம். மரணம் எல்லாருக்கும் அப்படித்தானே. மன்னரின் உடல் முழுவதும் மந்திராயினி தேவியின் கண்ணீர் ஈரப்படுத்தியிருத்தது. எதுவும் பேசாமல் பித்தபிடித்தவர் போல அமர்ந்திருந்தார். அந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை. அவரை ஒருபோதும் அப்படி இருந்து யாரும் பார்த்ததில்லை.

சிறிது நேரத்தில் மற்ற முக்கியமான அமைச்சர்களும் அதிகாரிகளும் வந்தனர். தலைமை அமைச்சர் மருதையப்பரும் படைத்தளபதி சூரியத்தேவனும் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்து மாடத்தில் நடந்துக்கொண்டிருந்தனர்.


"மன்னர் இவ்வளவு சீக்கிரம் இறந்திருக்கக் கூடாது" என்றார் சூரியத்தேவன்.


மருதையப்பர் தலையைக் கவிழ்ந்துக்கொண்டு பேசினார்.

"வடக்கே சாளுக்கையர்களும், தெற்கே சோழர்களும் கண்டு அஞ்சும் ஒரு மாபெரும் பல்லவ அரசனை இந்தக் காஞ்சி நகரம் இழந்துவிட்டது. ஒருகாலத்தில் இந்தத் தமிழகத்தில் பல்லவம் என்ற ஒரு அரசாங்கமே பெயர் தெரியாமல் போவதாய் இருந்ததது, அப்போது சரிந்துக்கொண்டிருந்த நமது ராஜ்யத்தை மீண்டும் தூக்கி நிறுத்தியவர் நம் மன்னரே. எத்தனை ஆண்டுகளானாலும் நம் மன்னரின் புகழ் அழியப்போவதில்லை"

"சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே, ஆனால் அரசரின் பாதியாகிய நம் மகாராணி இப்படி உடைந்துப்போயிருப்பதைப் பார்க்க முடியவில்லை. வடக்கில் சாளுக்கியர்களுக்கு எப்படியும் மன்னரின் மரணம் இன்னேரம் தெரிந்திருக்கும். எந்த நேரத்திலும் தாக்க வரலாம், எனவே உடனடியாக அரசி இளவரசருக்கு முடிசூட்ட வேண்டும்"

"என்ன சொல்கிறீர்கள் தளபதி! நம் இளவரசர் மகேந்திரனுக்கு வெறும் ஆறு வயது தானே ஆகின்றது. அவரால் எப்படி இந்த நாட்டை ஆளமுடியும், எதிரிகளை விரட்ட முடியும்? என்னைப் பொருத்த வரையில் மகாராணியே அரசேற்று இளவரசர் வளரும் வரையில் நாட்டை ஆளவேண்டும்"


"சரிதான், ஆனால் மகாராணியின் இப்போதைய நிலையைப் பார்த்தீர்களா? அவர் ஏற்கனவே இழப்பின் துயரில் இருந்து மீளமுடியாமல் இருக்கும் இந்த நேரத்தில், அவர்மீது ராஜ்ய சுமையை ஏற்றி வைப்பது சரியாகத்தெரியவில்லை"

"ஆம். எனக்கும் அதுதான் படுகிறது. நீங்கள் நம்முடைய ராஜ்ஜிய எல்லைகளின் பாதுகாப்புகளைப் பலப்படுத்துங்கள். சாளுக்கிய அரசவையில் எடுக்கப்படும் முடிவுகளை நமது ஒற்றர்கள் மூலம் உடனடியாகத் தெரிந்துக்கொண்டு எனக்குத் தெரியப்படுத்துங்கள். மன்னரை ராஜ மரியாதைகளுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறேன். மேலும் இளவரசர் முடிசூடுவதற்கான வேலைப்பாடுகளைச் செய்கிறேன். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் எதிரிகளுக்கு நாம் தரும் வாய்ப்பாக அமைந்துவிடும்"

"அப்போது நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன் அமைச்சரே" என்றவாறே தலைமை அமைச்சர் மருதையப்பருக்கு வணக்கம் வைத்து நகர்ந்தார் சூரியத்தேவன்.

"ஒரு நிமிடம் தளபதி அவர்களே...நம் தலைமை பொற்க்கொல்லன் தங்ககுமாரரை ஆட்கள் அனுப்பி உடனடியாக அரண்மனைக்கு அழைத்துவர செய்யுங்கள்"


"இந்த நேரத்தில் யாரையும் தேவையில்லாமல் அரண்மனையிற்குள் விடுவது நல்லதல்ல அமைச்சரே..."


"என்ன தளபதியாரே மறந்துவிட்டீரோ? நம் காஞ்சி நகரித்தின் அடுத்த மன்னர் முடிசூடப்போவது அந்தப் பொற்கொல்லன் கையில்தான் இருக்கிறது"


"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே, அந்தப் பிராமாண்ட பல்லவ சாம்ராஜ்யம் அமைவது ஒரு பொற்க்கொல்லன் கையில் இருக்கிறதா?"


"ஆம் சூரியத்தேவரே, நம் ராஜகுல வழக்கப்படி பரம்பரை பரம்பரையாகத் தங்கத்தால் செய்யப்பட்ட குதிரை சிலையை இளவரசருக்கு பரிசாகக் கொடுத்து அரசமைப்பது வழக்கம். நம் மன்னரோ அவருக்குக் கொடுக்கப்பட்ட தங்க குதிரை சிலையை மிக நெருக்கடியான காலத்தில் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு நிதியாகத் தந்துவிட்டார். இனி புதிய தங்க குதிரை சிலை செய்யவேண்டுமல்லவா? அதற்காகத்தான் அவரை வரச் சொன்னேன்"


"சரி மருதையப்பரே அப்படியே ஆகட்டும்"


சூரியத்தேவர் அங்கிருந்து வேகமாகச் சென்றார்.








அந்த நள்ளிரவில் காஞ்சி நகரின் வியாபாரிகளின் மாடவீடு தெருவைத் தாண்டி, எளிமையான குடிசைகள் அமைந்த வீதியில் காவலர்கள் ஐந்துபேர் அந்த வீட்டின் மரக்கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தனர். வேகமாகத் தட்டியதில் கதவில் விரிசல் விழுந்தது. ஒரு முதியவர் கையில் விளக்குடன் வந்து கதவை திறந்தார்.


"தங்ககுமாரர் ஐயாவிற்கு வணக்கங்கள். படைத்தளபதி சூரியத்தேவன் தங்களை விரைந்து அரண்மனைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார்", என்று ஐந்து வீரர்களும் செய்தியை கூறிவிட்டு நகர்ந்தனர். தங்ககுமாரர் தள்ளாத வயதில் நடுங்கும் விரல்களுடன் கதவை சாத்திவிட்டு ஒரு துணியை எடுத்து உடலை சுற்றிக்கொண்டார். குதிரைகள் என்ன நிலையில் இருக்கிறதென்று பார்ப்பதற்காகக் கொல்லைபுறத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் அவர் பேரன் முத்துக்குமாரன் விழித்திருந்தான். அவனுக்கு ஆறுவயது இருக்கும்.


"இப்போ கோட்டைக்குப் போகனுமா தாத்தா? என்னைத் தனியா விட்டுட்டுப் போகப் போறீர்களா?" தூக்கத்தில் கண்விழித்துத் தூக்கம் கலையாமல் கேட்டான் பேரன் முத்துக்குமாரன்.

"ஆமா முத்து, நான் போயிட்டுச் சீக்கிரமா திரும்பி வந்துவிடுகிறேன். நீ சமத்தா தூங்கிட்டு இரு. நீ முழிக்கும் முன் தாத்தா வந்துடுவேன்" என்று அவனைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, கொல்லை வழியாகக் குதிரையில் கோட்டையை நோக்கி விரைந்தார் தங்ககுமாரன்.

தங்ககுமாரன் குடும்பம்தான் அந்த ஊரிலேயே மிகச் செல்வந்த பொற்கொல்லன் குடும்பமாக இருந்தது. பரம்பரை பரம்பரையாக அரச முடிசூட்டுகளுக்குத் தங்ககுதிரையை இவர்கள் குடும்பம்தான் செய்வார்கள். ஒரு காலத்தில் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனை காட்டுப்பகுதியில் எதிரிகள் சுற்றி வளைத்த போது, தங்ககுமாரரின் முன்னோர்களில் ஒருவர் அவரது உயிரை கொடுத்துக் காப்பாற்றினார் என்று ஒரு கதை இருக்கிறது. அதன் காரணமாக அப்போதிலிருந்து மன்னர்களுக்கு மிக நெருங்கிய குடும்பமாக மாறிப்போயினர். அன்றிலிருந்து முடிசூட்டுதலின்போது இளவரசருக்கு பரிசாகத் தரப்படும் பாரம்பரிய தங்ககுதிரை சிலையைச் செய்யும் பெருமையும் வந்து சேர்ந்தது. இப்போது இறந்துப்போன சிம்மவிஷ்ணுவின் முடிசூட்டுவிழாவில் தங்ககுதிரை செய்தது தங்ககுமாரர் தான். ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் தங்கத்தோடு புரண்ட இவர்கள் இன்று குடிசையில் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சிம்மவிஷ்ணு முடிசூட்டிக்கொண்ட காலத்தில் சாளுக்கியர்களுடன் நடந்த போரில் பல்லவர்களின் ஆயுதங்களும் படைபலமும் குறைந்துப்போனது. அப்போது மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த செல்வத்தைத் தந்து ஆயுதங்கள் செய்ய உதவியளித்தனர். அப்போதுதான் சிம்மவிஷ்ணு தன்னுடைய தங்ககுதிரை சிலையையும் அதற்காகக் கொடுத்தான். அந்தக் காலத்தில் தங்ககுமாரர் தன்னுடைய அனைத்து செல்வத்தையும் பல்லவ அரசுக்கு கொடுத்தார். அதை வைத்து பல்லவ அரசு ஆயுதங்கள் செய்து போரில் சாளுக்கியர்களை விரட்டியது. தங்ககுமாரரின் மகன் அந்தப் போரில் கலந்து உயிரைவிட, அவன் மனைவியும் இறந்துப்போனாள். அதன்பின் அவர்கள் மகன் முத்துக்குமாரனை, தங்ககுமாரர் தான் வளர்த்து வருகிறார்.


அவரைப்போலவே உடல் முழுவதும் நரைத்த ரோமங்களைக் கொண்ட தங்ககுமாரரின் குதிரை அரண்மனை கதவுகளை அடைந்தது.


2015 - காஞ்சிபுரம்

"இதுவரைக்கும் நமக்கு இந்தக் காஞ்சிபுரத்த சுத்தி இருக்கு ஏரியாக்கள்ள அதிகமாகத் தொல்லியல் எச்சங்கள் கிடைச்சு இருக்கு. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ஆரம்பிச்சு பல்லவர்களோட சின்னங்கள் எச்சங்கள் உட்பட ஒரு பல காலவரையறை சேர்ந்த பொருட்கள் நமக்குக் கிடைச்சு இருக்கு. தென் தமிழகத்திற்கு எப்படி ஒரு மதுரையோ அது மாதிரி இங்க காஞ்சிபுரம். இந்த நகரத்தோட ஒட்டுமொத்த வரலாற்றையும் நாம வெளிய கொண்டு வருவோம். இதுவரைக்கும் நீங்க ப்ரொஜெக்டர்ல பார்த்த எல்லாமும் இதுவரைக்கும் இங்க கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள். ஆனா நம்ம தமிழ்நாட்டோட வரலாற முழுமையா எழுதுறதுக்கும் நம்மோட பழங்கால வணிகச் செயல்பாடுகளைத் தெளிவா புரிஞ்சுக்கவும் நமக்கு இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் தேவை. இப்போ நம்ம இருக்க வடவூர்ல நிறையத் தொல்லியல் தடயங்கள் இருக்கும்னு நம்புறோம். அடுத்த ஒரு வருடத்திற்கு நம்ம வேலை இந்த வடவூர்லதான் இருக்கப் போகுது. நம்மோட இந்த எக்ஸவேஷன் ஆர்கனைஸரா ஜெயகுமார் இருப்பார். நமக்காக நிறையத் தொல்லியல் மாணவர்கள் உதவிக்கு வந்து இருக்காங்க. நாளைக்கு இருந்து நாம இந்த வேலைய ஆரம்பிக்காலாம். தட்ஸ் ஆல் ஜென்டில்மேன்! மத்த விஷயங்களை ஜெயக்குமார் உங்களுக்கு ப்ரீஃ பண்ணுவாறு. டேக் எ ப்ரேக் எண்ட் கம் பேக் ஆஃப்டர் தி லன்ச்" என்று அந்தத் தொல்லியல் உயர் அதிகாரி சத்தியசீலன் உரையை முடிக்க, காஞ்சிபுரம் வடவூர் தொல்லியல் ஆய்வு பகுதியில் போடப்பட்டிருந்த டென்ட்டிலிருந்து அனைத்து அதிகாரிகளும் எழுந்து சென்றனர்.


ஜெயக்குமார் மட்டும் எழுந்து செல்லவில்லை. டென்ட் காலியானது. சத்தியசீலன் அவரின் ஃபைல்களை எடுத்துவைத்துவிட்டு ஜெயக்குமார் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.


"என்ன ஜெய்...யோசனை வேற எங்கையோ இருக்க மாதிரி இருக்கு?" நெடுநேர உரையை ஒரு பெரிய மூச்சு வாங்கலில் ஓய்வெடுத்துக்கொண்டார்.


"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சார்?"


"இல்ல ஜெய், உன் முகத்த பார்த்தா அப்படித் தெரியல...தேர் மஸ்ட் பி சம்திங்..."


"நான் வேற என்ன சார் யோசிக்கப் போறேன்...எல்லாம் அந்தக் கல்வெட்டுத்தான்"


"நீ இன்னும் அத மறக்கலையா ஜெய்...நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கனும்...எல்லா வரலாற்று ஆதாரங்களும் உண்மையின்னு சொல்ல முடியாது...அப்படியே அது உண்மையா இருந்தாலும் அது பாதுகாக்கப்பட்டு இருக்கனும்...அப்படியே பாதுகாக்கப்பட்டு இருந்தாலும் அது நம்ம கையிக்கு கிடைக்கனும்..."


"கண்டிப்பாகக் கிடைக்கனும் சார்...எனக்காக இல்லாவிட்டாலும் சதீஷ்காகக் கிடைக்கனும்..." ஜெயக்குமாரின் வார்த்தைகள் தீர்ந்துப்போய்த் தலையைக் கீழே போட்டான்.


"ஐ அம் சாரி ஃவார் சத்தீஷ். அது உங்க தப்பு இல்ல...அத மறந்திடு ஜெய்..."


"இல்ல சார்...அது என் தப்பு தான்...முழுக்க முழுக்க என்னோட தப்புதான்...அந்த மழையில நான்...அவன....." ஜெய்யின் விசும்பல்கள் அழுகையாக மாற ஆரம்பித்தது. சத்தியசீலன் அவனைக் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார்.


"எங்களுக்கு அது புரியும் ஜெய்...அது நடந்து ஐந்து வருடம் ஆச்சு...நீ அதையே நினைச்சிட்டு இருக்காத...யூ ஹேவ் டூ கம் அவுட் மேன்... உன்ன நம்பி இவ்வளவு பெரிய வேலைய ஒப்படைச்சிரூக்கேன்...இது நீ உன்னையே நிருபிக்க வேண்டிய நேரம் உனக்காக இல்லாட்டியும் சதீஷ்காக நீ நிதானத்தோட செயல்பட வேண்டிய நேரம் இது ஜெய்"


ஜெய் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். அவன் கண்கள் சிவந்துப்போயிருந்தன.


"சரி சார். இன்னிக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் எனக்கு அது கிடைக்கும். அன்னைக்குச் சதீஷ் பெயர் வெளிய வரும். அவன் செய்த தியாகம் வெளிய தெரியும். அந்த ஒரு நாளுக்காகத் தான் நான் காத்திருக்கேன் சார். இல்லையினா இது எதுக்குமே அர்த்தமில்லாம பொய்விடும்"


"இட் வில் ஹேப்பன் ஜெய். சரி நான் கிளம்புறேன் ஹெட் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. இந்த ப்ராஜெக்ட நீ சிறப்பா பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு ஜெய். ஆல் தி வெரி பெஸ்ட்"



"தேங்க் யூ சார்..."


சத்தியசீலன் அந்த டென்ட்டை விட்டு வெளியே வந்து அவர் காரில் ஏறிப்போனார். ஜெயக்குமார் வழியனுப்பிவிட்டு மீண்டும் டென்ட்குள் போய் அமர்ந்தான். கதிர் உள்ளே வந்தான்.


"சார் சாப்பிடலையா...?" என்றான் கதிர்.


"இல்லை கதிர்...பசிக்கல...மதியம் பள்ளி குழந்தைகளோட செமினார் கேள்வி பதிலுக்கு ஸ்டீடன்ட்ஸ் வந்துட்டாங்களா?"


"வந்துட்டே இருக்காங்கலாம் சார்"


"நம்ம டீம்ம ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க...செமினார் முடிச்சிட்டு நம்ம ஈவினிங் பேசுவோம்...அப்புறம்......"


"சொல்லுங்க சார்..."


"ஒன்னுமில்ல...ஏதோ சொல்ல வந்தேன் மறந்துட்டேன்"



ஜெயக்குமார் ஒரு தொல்பொருள் ஆய்வு அதிகாரி. சாதாரண அதிகாரியாகத் துறையில் சேர்ந்த ஜெயக்குமாரின் ஈடுபாடு காரணமாக ப்ரோமோஷன் வழங்கப்பட்டு இன்று காஞ்சிபுரத்திலுள்ள வடவூரில் தொல்பொருள் ஆய்வு அவர் தலைமையில்தான் நடக்கிறது. சிறிது நாட்களுக்கு முன் அங்குக் கண்ணாடி பாசிகள் கிடைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில் இப்போது அங்கு ஆய்வு நடத்தப்படுகிறது. ஜெயக்குமாரின் பால்ய வயதிலிருந்து இப்போது வரைக்கும் நண்பன் சதீஷ் . அவரும் தொல்பொருள் அதிகாரி. ஆனால் ஒரு சம்பவத்தில் ஜெயக்குமார் சதீஷை இழந்துவிட்டான். அதன்பின், பெரிதாகத் தொல்லியல்துறையில் ஈடுபாடு காட்டவில்லை. அந்த இறப்புக்குக் காரணம் ஒரு கல்வெட்டு.


"சார்...நம்ம எவ்வளோ அதிகமா அறிவியல் வளர்ச்சியில முன்னோடியா இருக்கோம்...இந்த காலத்துல வரலாறு நமக்கு முக்கியமா சார்...?"


மாணவர்கள் செமினாரின் முதல் கேள்வி கேட்கப்பட்டது. இப்போது அந்த டென்ட் முழுவதும் மாணவர்களால் நிரம்பி இருந்தது. சில புகைப்படக் காரர்கள் அங்குமிங்கும் ஆங்கிள் பார்த்துப் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நடுநாயகமாக ஜெய் உட்கார்ந்திருந்தான்.


"முக்கியம் தான் தம்பி...எந்தவொரு சமுதாயமா இருந்தாலும் அந்தச் சமுதாயம் அதோட வரலாற்றைத் தெரிஞ்சிருக்கனும்..அப்போதான் அவங்க வருங்காலத்தை அமைக்க முடியும்...என்னைக்கோ கலிலியோ போட்டுவச்ச விமானத்தோட வடிவமைப்ப வச்சு நாம விமானம் கண்டுபிடிக்கலையா? அது மாதிரிதான் இது...அடுத்த கேள்வி"


"தமிழ் தான் முதலில தோன்றின மொழின்னு சொல்லுறாங்களே அது உண்மையா சார்?"


"அது உண்மையின்னு இந்த உலகத்துக்கே தெரிஞ்சாலும் அது நிருபிக்கிறதுக்கு நம்மகிட்ட மிக வலுவான ஆதாரங்கள் இல்லை. எந்த ஒரு மொழிய எடுத்துக்கிட்டாலும் அதன் அடிப்படை நோக்கம் செய்தி பறிமாற்றமா இருக்கு... ஆனா நம்மளோட தமிழ்மொழி, அதையும் தாண்டி நம்ம வாழ்வியலோட கலந்து இருக்கு...அத நினைச்சு நாம பெருமை படலாம்...ஆனால் மத்த மொழிகளை அதை வச்சுக் குறை சொல்ல கூடாது...அடுத்த கேள்வி..."


"சார்...சரியா ஐந்து வருசத்துக்கு முன்னாடி நீங்க ஒரு கல்வெட்ட சுக்குநூறா உடைச்சு சேதப்படுத்தினதா உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே...அது உண்மையா சார்..."

"அது......."


ஜெயக்குமாரின் உடல் வியர்த்தது. கைகள் லேசாக நடுங்கியது. கண்கள் பரபரப்படைந்தது. எதுவும் பேசாமல் டென்டைவிட்டு வெளியே சென்று விட்டான். மாணவர்களுக்குள் சலசலப்பு ஏற்ப்பட கதிர் அனைவரையும் செமினார் முடிந்தது என்று அனுப்பி வைத்துவிட்டான். ஜெயக்குமார் டென்டைவிட்டு வெகுதூரம் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்துக்கொண்டான். அந்த மரத்தின் நிழல் அவனுக்குப் போதுமானதாக இல்லை. உடலில் அங்குங்கு சூரியன் சுட்டது. ஆனாலும் அவன் கைகள் நடுங்குவது நிற்கவில்லை. உதடுகள் துடித்தது. மிகச் சத்தமாக வெடித்து அழுதான்.சத்தம் டென்ட் வரை கேட்டது. அனைத்து அதிகாரிகளும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்களுக்குள் ஏதேதோ சலசலத்துக்கொண்டனர்.


சிறிது நேரம் கழித்து ஜெய் வந்தான். எல்லா அதிகாரிகளுக்கும் அடுத்த நாள் நடக்க வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்திவிட்டுக் காரில் ஏறினான். கதிரையும் காரில் ஏற்றிக்கொண்டான்.


"எனக்குத் தெரியும் சார்..." கதிர் பேசினான். ஜெயக்குமார் ஓடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாட்டை அணைத்தான்.


"என்ன தெரியும்?"


"ஐந்து வருடத்துக்கு முன்னாடி நடந்த அது..."


"ம்ம்ம்ம்..."


"அந்தக் கல்வெட்டுல அப்படி என்னதான் இருந்தது சார்?"


"....."



"சார்...நான் ஏதும் தப்பா கேட்டு இருந்தா மன்னிச்சுடுங்க சார்..."


"இல்லை கதிர்...தப்பெல்லாம் ஒன்னும் இல்ல...நாம இத பத்தி நாளைக்குப் பேசுவோமே..."


கதிர் இறங்க வேண்டிய இடம்வர அவன் இறங்கிச் சென்றான். ஜெயக்குமாரின் மனதில் அந்தக் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த நினைவகளின் வடு அவன் மனதை கிளறிக்கொண்டு இருந்தது. கல்வெட்டில் இருந்த 'தங்கக்குதிரை' என்னும் ஒற்றை வார்த்தையை அவனால் ஐந்து வருடமாகியும் மறக்க முடியவில்லை.




-தொடரும்…


Leave your comments on the story below.

Saturday, May 9, 2020

சைக்கிள் பகுதி 7: பிரியாணி

சைக்கிள் முழுவதுமாக இருளுக்குள் மூழ்கியது. பாதைகளில் முன்பு இருந்த சிறிய பவுர்ணமி வெளிச்சம்கூட இப்போது காணவில்லை. மீண்டும் அந்த ஓடை எங்கிருந்தோ வந்து சாலையின் பக்கம் சேர்ந்துக்கொண்டது. சாலையில் மணல் அதிகமாக இருந்த காரணத்தால் சுத்தமாக மதியால் மிதிக்க முடியவில்லை. மணி ஏழரையை கடந்துவிட்டது. சில இடங்களில் நிறுத்துவது ஆபத்தாக இருந்தாலும் நிறுத்தி ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் போனான். முன்னால் கேட்ட சாலை சத்தங்கள் கூட இப்போது கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த சாலைபோய் இதுக்கும்மேல் பாதை இல்லை என்பதைப்போல முடிந்துவிட்டது. மதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் கூகுள் மேப்ஸ் அந்த பக்கம் பாதை இருப்பதாய் காட்டியது. ஆனால் அங்கு ஓடை தான் இருந்தது. ஓடையை சைக்கிளில் கடக்க முடியாது கூடவே அந்த பக்கம் கரையும் தெரியவில்லை. மதிக்கு அழுகை வருவதுபோல இருந்தது. அந்த கரையிலேயே உட்கார்ந்தான்.

'சைக்கிள் வாங்கி எத்தன வருசமாச்சு தம்பி?' சைக்கிள் கடைக்காரர் சைக்கிளை உற்றுப்பார்த்துக்கேட்டார்.

'ஒரு எட்டு வருசம் இருக்கும்னே...இன்னிக்கி மதியம் ரொம்ப தூரம் போறேன்...கொஞ்சம் பிட்டிங் பாத்துக்கொடுங்க'

மதி அன்று காலையிலேயே சைக்கிளை சுந்தரம் சைக்கிள் கடையில் கொடுத்துவிட்டிருந்தான். எல்லா போல்ட் நட் சரியாக இருக்கிறதா என்று அவ்வப்போது பார்ப்பது அவன் வழக்கம்.

'சைக்கிள் இங்க நிறைய பேருக்கு வெறும் சைக்கிள் தம்பி...சில பேருக்குத்தான் அது ஒரு உயிரு...என்னத்தான் எருமைமாடு கணக்கா வண்டி வந்தாலும்...நம்ம சைக்கிள் மாதிரி வருமா?'

மதி ஏதும் பேசவில்லை. அவன் கண்களில் லேசாக கண்ணீர் வந்தது. இந்த சைக்கிள் எமோஷன் இவருக்காவது புரிந்ததே என்று தோன்றியது.

'நீங்க சைக்கிள் வச்சிருந்திங்களா ணே???'

'வச்சிருந்தேன்...செத்துப்போச்சு...இந்த கடைய முதல ஆரம்பிக்கிறதுக்காக பிரிச்சு போட வேண்டியதாப்போச்சு...ஆனா என்ன? அது செத்துப்போன நாள இப்போ எத்தன சைக்கிளுக்கு உயிர் தரேன் பாரு' என்றார் சிரித்துக்கொண்டே. அவர் ஆழ்மனதில் உள்ள துக்கம் மதிக்கு மட்டுமே புரிந்தது. சுந்தரம் சைக்கிளை சரிபார்த்து முடித்தார்.

நிலவு மீண்டும் வெளியில் வந்துவிட்டு ஓடையில் பிரதிபலித்து.
மதி கரையில் மதி உட்கார்ந்திருக்க அவனை உரசிக்கொண்டு ஒரு பன்றி ஒரு முட்புதருக்குள் மிக வேகமாக நுழைந்தது. அவன் அந்த முட்புதரை நோக்கினான். யாரோ முட்களை வெட்டிப்போட்டு எதையோ மறைத்தது போல இருந்தது. ஒரு பெரிய குச்சியை எடுத்து அந்த புதரை விலக்கினான். அதன் வழியே ஒரு பாதை தென்பட்டது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு சைக்கிளை அந்த பாதையில் இறக்கினான். இரண்டு பக்கமும் கருவேல மரங்கள். கொஞ்ச நேரம் பள்ளத்தில் உருள்வதுபோல சைக்கிள் உருண்டது. அதன் பின்னர் மேடாக இருந்தது. முட்கள் அவன் உடலில் அங்கங்கு கீறின. மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓட்டினான். சைக்கிள் இறக்கத்தில் இறங்கி ஏறி ஒரு தார்சாலையில் இணைந்தது.
வேகமான லாரிகள் போய் வந்துக்கொண்டிருந்தன. பயணிகள் பேருந்துகள் கடந்தன. அனைத்து விதமான வண்டிகளும் போய் வந்தன. மதி சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு சந்தோசத்தில் கத்தினான். புதிய உத்வேகத்துடன் மீண்டும் சைக்கிளை வேகமாக ஓட்டினான். இன்னும் ஐந்து கிலோமீட்டரில் குத்தாலம்.

மதியின் சைக்கிள் குத்தாலத்தில் அவன் அறையில் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் வாசலில் நின்றுக்கொண்டிருந்தது. மதி மேசையில் இலைப்போட்டு நீரை தெளித்துக் கழுவிக்கொண்டிருந்தான். சர்வர் ஒரு பிளேட்டில் சிக்கன் பிரியாணியை அடைத்து வந்து வைத்தார். லெக் பீஸ் துருத்திக் கொண்டிருந்தது.

-முற்றும்

Thursday, May 7, 2020

சைக்கிள் பகுதி 6 : அசோக மரம்

மதிக்கு அப்போதெல்லாம் இரவில்தான் சைக்கிள் ஓட்ட பிடிக்கும். அந்த மூன்று சக்கர சைக்கிளில் அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதையும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்துவிடுவான். அவன் வரும் வரை அம்மா ஒரு வாய் ஊட்டுவதற்கு சோற்றை கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பாள். அப்போது மதிக்கு மூன்று வயது. மூன்று சக்கர சைக்கிளில் அந்த அப்பார்ட்மெண்டை சுற்றிக்கொண்டு வருவது அவனுக்கு பிடித்தமான ஒன்று. அப்பார்ட்மெண்டிற்குள் வண்டிகள் ஏதும் வராததால் பயம் இல்லை. அதுவும் பின்னாடி யாரையும் ஏற்ற மாட்டான். அவனே ஓட்டிக்கொண்டு வந்து முடிக்க வேண்டும். அவனுடைய ஒரே பொழுதுபோக்கு அதுவாகத்தான் இருந்தது. ஒரு நாள் அப்படி ஓட்டும்போது ஒரு பள்ளத்தில் சைக்கிளை விட்டு கவிழ்ந்து சகதியில் விழுந்துவிட்டான். இன்னொருநாள் ஓட்டிக்கொண்டே தூங்கிவிட்டான். பகல் நேரத்தைவிட அவனுக்கு இரவில் ஓட்டுவதே அவனுக்கு ஏதோ பிடித்து இருந்தது. இரவில் அந்த குளிர்காற்றும் நிலவொளியும். யாருக்குத்தான் பிடிக்காது.

ஆனால் அந்த ஒரு பக்க சாலையில் மட்டும் எப்போதுமே அவனுக்கு பயம். அந்த சாலை நெடுகிலும் உயரமான அசோக மரங்கள் இருக்கும். பகல் நேரத்தில் ஏதும் இல்லை. இரவு நேரத்தில் அந்த இருட்டில் உயரமான அந்த மரங்கள் அசைவது அந்த வயதில் அவனை மிக பயமுறுத்தியது. பல நேரம் அந்த சாலையுடன் சென்று திரும்பியிருக்கிறான். சில நாள்கள் கனவுகளில் அந்த மரங்கள் வந்து பயமுறுத்தும். அதற்குப்பின் மதி அந்த அங்கிருந்து வேறு வீட்டிற்கு மாறிவிட்டனர். இங்கு சைக்கிள் ஓட்டவே முடியாமல் இருந்தது. இப்போது அங்கேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. பயமாக இருந்தாலும் அது அவனுக்கு பிடித்திருந்தது.

நாய்கள் சூழ்ந்துக்கொண்டதால் மதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விரட்ட முற்பட்டாலும் அவை விலகுவதாக தெரியவில்லை. அது அதுகளின் இடம் அதனால் அப்படித்தான் இருக்கும். குரைக்கின்ற நாய் கடிக்காது என்ற எண்ணத்தில் மதி முன்னேறினான். அப்போது அந்த குடிசையில் இருந்து ஒருவர் வெளிப்பட்டு நாய்களை அதட்டினார். அவை அமைதியாகின.

வெளியில் தொங்கிக்கொண்டிருந்த லாந்தரில் அவர் முகம் பாதி மட்டுமே தெரிந்தது. மேலே சட்டைப்போடவில்லை. இடுப்பில் வேட்டிப்போல ஒன்று கட்டியிருந்தார். முகத்தின் சுருக்கங்கள் பயமுறுத்தின. ஏழுபது வயது இருக்கலாம். இந்த காட்டுக்குள் இப்படி ஏன் இவர் இருக்கிறார் என்று தோன்றியது. அவர் நாய்களை விரட்டிவிட்டு மதியிடம் போகும்படி சைகை காட்டினார். மதி அவர் அருகில் நிறுத்தி இந்த பாதைகளை பற்றிக்கேட்டான். அவரும் ஏதோ சொன்னார். மதியிடம் தண்ணீர் காலியாகி இருந்தது. சரி இவரிடம் கேட்கலாம் என்று கேட்டான். அவர் தண்ணீர்  குடிக்க உள்ளே அழைத்தார். மதிக்கு செல்லலாமா? வேண்டாமா? என்று சந்தேகம். ஒரு நம்பிக்கையோடு உள்ளே நுழைந்தான். நாய்கள் முறைத்தன.

தென்னங்கூரையில் பிண்ணப்பட்ட வீடு. வீட்டிற்குள்ளும் ஒரு லாந்தர். வெளிச்சம் போதுமானதாக இல்லை. ஒரு பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒரு மூலையில் ஒரு பானை. அவ்வளவுதான். அதைத்தவிற அந்த வீட்டில் வேறு ஏதும் இல்லை. அவர் அந்த பானையில் கிடந்த தண்ணீரை பாதி வெட்டப்பட்ட ஒரு பிலாஸ்டிக் பாட்டிலில் எடுத்துக்கொடுத்தார். கைகள் நடுங்கின. தண்ணீர் உப்பாய் இருந்தது. லாந்தர் அணைவது போல எரிந்தது.

'எங்க போவது தம்பி ?'
அவர் மதியை பார்க்கவில்லை. ஒருவேளை இவருக்கு கண் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் தெரிந்தது.

'சிதம்பரத்துல இருந்து வரேன்...குத்தாலம் போவனும்'

'அங்க இருந்து சைக்கிளையே வாரீகளா?'

'ஆமாங்க ஐயா'

'பாத்துப்போங்க சாமி. காலம் கெட்டுக்கிடக்கு'

'சரிங்க ஐயா. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க...தனியாவா இருக்கீங்க'

'இல்ல சாமி. நம்ம வீடு சீருகாழில இருக்குது, விவசாயங் செழியாம நிலத்தெல்லாம் வித்துப்புட்டு வேல கிடைக்காம இங்க சுடுகாட்டுல வேல பாக்குறேன். இன்னிக்கி போவ நேரமாச்சு. இந்த பஸ்ஸு சனியன் இருக்காது அதான் இங்க தங்கிடுவேன். எல்லாம் நம்ம புள்ளிங்க தான். பாசக்காரனுங்க...'
என்று நாய்களை பார்த்தார். அதுகளும் அவரை பார்த்தனர்.

மதி அவரிடம் போய் வருவதாய் கூறிக்கொண்டு வெளியே வந்தான். அவர் அவன் கையில் சில பிஸ்கட்டுகளை கொடுத்து நாய்களுக்கு போடச்சொன்னார். நாய்கள் அவனை பார்த்து வாலாட்டின. அவனை சூழ்ந்துக்கொண்டன. அவன் காலை நக்கின. மதி அவரிடம் நூறு ரூபாயை எடுத்து நீட்டினான். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.

'எனக்கு என்ன சாமி, ஒரு நாளிக்கி ஒரு வேளையாவது சாப்டுறுவேன், அதுவும் இல்லாம இருக்கவங்களுக்கு குடுங்க'
இதுவே அவர் மதியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்.

இன்னும் ஐந்து கிலோமீட்டரில் மெயின்ரோடு வந்துவிடும். அடுத்த ஐந்து கிலோமீட்டரில் குத்தாலம் வந்துவிடும் என்று கூகுள் மேப்ஸ் காட்ட மிச்சமிருந்த கொஞ்சூண்டு சக்திகளை ஒன்று திரட்டி சைக்கிளை மிதித்தான். நாய்கள் வாலை ஆட்டி டாட்டா சொன்னன.

-ஆமொ

Tuesday, May 5, 2020

சைக்கிள் பகுதி 5 : முத்தம்

பௌர்ணமி நிலவை மேகங்கள் மறைத்துக்கொண்டிருந்த ஒரு பின்னிரவு அது. ஷீலா அன்று வெளியூரில் இருந்து நள்ளிரவில் வர மதி அவளை பேருந்து நிலையத்திலிருந்து விடுதியில் கொண்டு வந்து விடுவதற்காக சைக்கிளில் வந்திருந்தான். ஷீலா பின்னால் அமர்ந்துக்கொள்ள மதி அவளை ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதித்தான்.

'பேசாம வர?' மதி பேசினான்.

'இந்த அமைதி நல்லா இருக்கு...சத்தமே இல்லாம...'

'அப்போ நானும் சத்தம் போடாம இருக்கனுமா?'

'நீ பேசுனா இன்னும் நல்லா இருக்கு'

மதி சிரித்தான். மதி அப்போது கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தான். இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வருகின்றனர். அதை காதல் என்று அவர்கள் ஒரு போதும் சொல்லிக்கொள்வதில்லை. ஏதோ ஒரு இனம்புரியாத பந்தம். அப்படியே அதை வகைப்படுத்தியிருந்தனர்.

இரவின் பனி காற்றோடு சேர்ந்து வீசியது. மரங்கள் அசைவது மட்டுமே அந்த நேரத்தின் பெருஞ்சத்தமாக இருந்தது. ஷீலா மதி மேல் சாய்ந்துக்கொண்டாள். சைக்கிள் ஒரு குளத்தை கடக்கையில் ஷீலா சைக்கிளை நிறுத்த சொன்னாள். அவர்கள் பகலில் அந்த குளத்திற்கு வருவதுண்டு. வெகு நேரம் அந்த குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். மதி பொறி வாங்கிக்கொண்டு வந்து மீன்களுக்கு போடுவான்.

'ஒரு நாள் இந்த மீனெல்லாம் புடிச்சு நல்லா புளி கரைச்சு எண்ணெய் மிதக்குற மாதிரி ஒரு மீன் கொழம்பு வச்சுக்கொடு ஷீலா'

'அத்தன ரூசி கேக்குதாக்கும்...மொதல்ல என்ன கட்டிக்கோ இந்த குளத்துல மீன் புடிச்சு இங்கையே வைக்கலாம்...'

'படிப்பு முடியட்டும்...நான் ஒரு வேலைக்கு போறேன்...நீயும் போ...அப்புறம் வீட்ல சொல்லலாம்'

சைக்கிளை குளத்தின் கறையில் நிறுத்தினான் மதி. ஷீலா இறங்கிக்கொண்டாள். இரவு அந்த குளத்தை இன்னும் அதிகமாக அழகாக்கியிருந்தது. மீன்கள் தண்ணீருக்கு மேல் பரப்பிலே இருந்தன். நிலவொளி அவை உடம்பில் பட்டு பிரகாசித்தது. இருவரும் ஒரு மணல் திட்டில் உட்கார்ந்தனர். ஏதோவொரு பறவை மேலே பறந்துக்கொண்டிருந்தது.

'நேரமாகலியா?' மதி கேட்டான்.

'நேரம் கெடக்குது...யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரி ஒரு அழகு........'

'காதலனா?'

'இல்ல குளத்த சொன்னேன்...அழகு குளம்'
ஷீலா சிரித்தாள். நட்சத்திரங்கள் மின்னுவது சிரிப்பது போல இருந்தது.

கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை. அந்த மௌனம் அவர்களுக்கு பிடித்திருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்கள் ஏதோ பேசிக்கொண்டது. மீன்களுக்கு புரியவில்லை.

மதி மெதுவாக அவன் முகத்தை அவள் முகத்தின் அருகில் கொண்டு வந்து தன் உதடுகளை அவள் உதடுகள் மேல் பதித்தான். காற்றில் மிகவும் நெருக்கமாக இருக்கும் பூக்கள் நகராமல் உராசிக்கொள்வதுபோல உதடுகள் இருந்தன. இருவரும் மிகவும் இறுக்கமாக கட்டிக்கொண்டனர். முத்தம் தொடர்வது நிறுத்தப்படவே இல்லை. மதியின் கைகள் ஷீலாவின் உடம்பில் பரவ ஆரம்பித்தது. தேவையான ஆடைகள் கலையப்பட்டன. நிலவு மேகத்திற்குள் மறைந்துக்கொண்டு அவர்களுக்கு இருளை போர்வையாக போர்த்தியது. உடல்கள் சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தன. ஊடல் வியர்த்து முடித்திருந்தபோது மணி அதிகாலை மூன்றை தாண்டியிருந்தது. குளத்தில் மீன்களை காணவில்லை. நிலவு இப்போது எங்கேயோ இருந்தது.

மதிக்கு இப்போது ஷீலாவிடன் பேசவேண்டும் போல இருந்தது. ஆனால் அந்த கிராமத்தில் சிக்னல் கிடைக்கவில்லை. இரவின் குளிரில் மெதுவாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். கிராமத்தின் எல்லைப் பகுதி போல. காடு போல இருந்தது. வெறும் மணல் ரோடுதான். அதுவும் ஒரு அடி அகலத்தில் தான் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் பெரிய பள்ளம். கொஞ்சம் இடறிவிட்டாலும் பள்ளத்தில் உருள வேண்டியதுதான். நிலவைக் காணவில்லை. இருட்டில் குத்துமதிப்பாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அங்கங்கு பாதை இறங்கியது அங்கங்கு ஏறியது. அது கண்டிப்பாக மனித நடமாட்டம் இல்லாத பகுதி. இருசக்கர வாகனம் வந்தால் கூட செல்வது கடினம்தான். இடதுபக்க பள்ளத்தில் ஒரு ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.வலது பக்கத்தில் மிகப்பெரிய மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. மரங்களின் ஆட்டம் அவனை பயமுறுத்தியது. கூகுள் மேப்ஸ் என்ன இழவுக்கு இந்த பாதையை காட்டியது என்று அவனுக்கு தெரியவில்லை. சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் அது தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

கொஞ்சம் தூரம் தள்ளி மரங்களின் கிளைகள் மிக தாழ்வாக இருந்தன. அவன் மீது உரசியது. இருட்டில் இலைகள் கண்ணுக்கு தெரியவில்லை. திடீர் திடீரென்று இலைகள் அவன் தலையை தொட்டன. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் அப்படிபட்ட பாதையில் பயணிப்பதாய் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் இது சரியான பாதைதான என்ற சந்தேகமும் வந்துவிட்டது. வழியில் ஒரு சுடுகாட்டை கடந்தான். பிணங்கள் ஏதும் எரிவதாய் தெரியவில்லை. மணலில் சைக்கிளை மிதிப்பது சிரமம். சாதாரண பாதையில் ஓட்டுவதை விட கொஞ்சம் கூடுதல் பளு போடவேண்டும். அதுவே அவனை சோர்வுபடுத்தியிருந்தாலும் சைக்கிளை அந்த இருட்டில் தோன்றவில்லை. என்ன வேண்டுமானால் நடக்கலாம். யாராவது அடித்துப்போட்டுவிட்டு எல்லாவற்றையும் திருடிவிட்டு போனால் கூட உடலை கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும் இந்த காட்டில். நிலவு சில மேகங்களை விலக்கிக்கொண்டு எட்டிப்பார்த்தது. அந்த வெளிச்சம் கொஞ்சம் நிம்மதி கொடுத்தாலும் இந்த நாள் அவன் வாழ்க்கையின் இறுதி நாளாக இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. எங்கோ தூரத்தில் சாலையின் வண்டி சத்தங்கள் கேட்டன.

சிறிதுதூரம் வந்ததும் ஒரு சிறிய குடிசை தூரத்தில் தெரிந்தது. ஒரு விளக்கொளி. ஆள் நடமாட்டமும் இருந்தது. யாராக இருந்தாலும் இந்த பாதை சரியானது தானா? இன்னும் எவ்வளவு தூரம்? என்றெல்லாம் கேட்டுவிட நினைத்தான். குடிசையை நெருங்கும்போது உறுமல் சத்தங்கள். உறுமல்கள் மிக வேகமாகவே குரைப்பாக மாறியது. பத்து நாய்களுக்கு மேல் இருக்கும். அவனை சூழ்ந்துக்கொண்டன. சில நாய்கள் அங்கேயே இருந்து குரைத்தன. சில நாய்கள் மதியை நோக்கி ஆக்ரோஷமாக குரைத்துக்கொண்டு முன்னேறின.

-தொடரும்.

Monday, May 4, 2020

சைக்கிள் பகுதி -4 : கிளி

லேசாக மயக்கம் வருவது போல இருந்தது. மதியம் குடித்த கரும்பு ஜூஸ் எப்படியும் இன்னேரம் செரித்து இருக்கும். தொடர்ந்து கால்கள் சுழன்றுக்கொண்டே இருந்ததால் தொடைகள் வலித்தது. முதுகெலும்பில் அதைவிட வலி அதிகம். பாதி தூரம்தான் கடந்து இருப்பதாய் கூகுள் மேப்ஸ் காட்டியது. சூரியன் மெதுவாக மறையத்தொடங்கி இருந்தது. மணி ஐந்து ஆகிக்கொண்டிருந்தது. சில தெருக்களில் புது ஆள் என்று முறைப்பார்கள். நாய்கள் குரைக்கும். வலித்த கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்தபோதுதான் அந்த கூட்டம் அங்கு இருந்தது. ரோட்டின் மேல் இருந்த வீட்டின்முன்தான் கூட்டம். ரோட்டுக்கும் சேர்த்து பந்தல் போட்டு இருந்தார்கள். வெளிய கிடந்த நாற்காலிகள் பத்தாமல் பாதிபேர் நின்றுக்கொண்டிருந்தனர். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டின் பக்கவாட்டில் ஒரு நான்குபேர் பாடையைத் தயார் செய்துக்கொண்டிருந்தார்கள்.  இழவு வீடுபோல.

மதி சைக்கிளில் நெருங்கியும் கூட்டம் விலகவில்லை. யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை. உள்ளே அழுகை சத்தம் ஓய்ந்துப்போயிருந்தது. சிலர் மட்டுமே தேம்பும் சத்தம் கேட்டது. ஒரு மூலையில் தாரைகள் நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் பெரிய ஆயிரம் வாலாவை விரித்தான். அவன் வெடி வைப்பதற்குமுன் அந்த இடத்தை கடந்து விடவேண்டும் என்று தோன்றியது. லேசாக பெல் அடித்தான். கூட்டத்தில் யாரோ ஒருவன் பார்த்துவிட்டான்.

'ஏம்பா நகருங்க...ஆளு போவுது வழிவிடுங்க' என்று யாரோ கத்த கூட்டம் விலகியது. மதி சைக்கிளை நுழைத்துக்கொண்டு அந்தப்பக்கம் வெளியே வந்தான். கொஞ்சம் தூரம் கடந்த பின் தாரை சத்தமும் வெடி சத்தமும் கேட்டது. சூரியன் முழுமையாக மூழ்கிப்போயிருந்தது. ஆனால் வெளிச்சமிருந்தது.

கொஞ்சம் தூரம் கடந்ததும் ஒரு சின்ன பெட்டிக்கடை வந்தது. உடல்வலியை போக்கிக்கொள்ள ஒரு கலர் வாங்கிக்குடித்தான். கீழே உட்கார முடியாமல் முட்டி வலித்தது. பேசாமல் பேருந்திலோ ரயிலிலோ வந்து இருக்கலாம் என்று தோன்றியது. இனிமேல் பின்னாடியும் போக முடியாது. நடக்கிறது நடக்கட்டும் என்று வலியை பொறுத்துக்கொண்டு சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தான்.

இரண்டு பக்கமும் வயல்வெளிகள். மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அவர்களை பார்த்துக்கொண்டே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான்.

அதுவும் ஒரு பள்ளி விடும் நேரம்தான். அப்போது மதி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு என்பதால் வகுப்பு முடிய ஆறுமணி ஆகிவிடும். மதியின் நண்பன் விஜய் அப்போது டி.வி.எஸ் வண்டியில் வருவான். அப்போது அது பிரபலம். மதிக்கு அந்த வண்டி ஓட்ட தெரியாவிட்டாலும் விஜய் கூட பின்னால் அமர்ந்து வீட்டுக்கு போவான். அன்று ஏதோ மதிக்கு அவன் ஓட்ட வேண்டும் என்று தோன்றியது. விஜயும் ஒப்புக்கொண்டான். வண்டி கிளம்பியது. முதலில் சற்று தடுமாறினாலும் மதி நன்றாகவே ஓட்டினான். ஒரு வீட்டை கடக்கையில்  ஒரு கிளி சக்கரத்தின் உயரத்திலேயே பறந்துவந்து சக்கரத்தில் சிக்கியது. இரண்டு சக்கரத்திலும் நசுங்கியது. மதி பிரேக் பிடிப்பதற்குள் இதுவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு வந்து பார்க்கும் போது அந்த கிளி ரத்த வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து ஒரு அம்மாவும் அவள் மகளும் வெளியே வந்து துடித்துக்கொண்டிருக்கும் கிளியை பார்த்து கதறி அழுதனர். தெருவே கூடிவிட்டது. யாரும் மதியை திட்டவில்லை. அவன் மீது தப்பு இல்லை என்று தெரிந்தது. எல்லோரும் மதியையும் விஜயையும் போக சொன்னார். இருவரும் உடனடியா சென்று ஒரு மருந்துக்கடையில் கட்டும் மருந்தும் வாங்கிக்கொண்டு வரும்பொது கிளி இறந்துப்போயிருந்தது. அந்த அம்மா பிணமான கிளியை கையில் வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். அதுதான் மதி சந்தித்த பெரிய இழவு. அன்று இரவு மதி சாப்பிடவும் இல்லை. தூங்கவும் இல்லை. ஒரு மாதத்திற்கு மேல் மதியால் அதை மறக்க முடியவில்லை.

இருட்டத் தொடங்கிவிட்டது. வழி கிராமங்களை விடுத்து ஒதுக்குப்புறமாக ஒரு சாலையில் புகுந்தது. சுத்தமாக வெளிச்சமில்லை.

-தொடரும்