ஆல்பினாவுக்கு அதுதான் முதல் விமானப் பயணமாக அமைந்தது. அதற்கு முன் வரை அவள் எங்குமே விமானத்தில் சென்றதில்லை. சின்ன வயதில் அப்பாவோடு ரயில் பயணம் செய்வதே அவளுக்கு பெரிய கனவாக இருந்தது. அதன் பின்னர் ரயில் பயணம் என்பது அவளின் சென்னை நாட்களின் அன்றாடம் ஆகிப்போனது. ஆனால் எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பாள். என்றாவது ஒருநாள் நிறைய பணம் சேர்த்து குறைந்தபட்சம் மதுரையிலிருந்து சென்னை வரையிலாவது விமானத்தில் ஒரு முறை சென்று வர வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. பிறகொரு காலத்தில் அதற்காக பணமும் சேர்க்க ஆரம்பித்தாள். சென்னையில் விடுதியில் தங்கி கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அனுப்பும் பணத்தில் கொஞ்சத்தை எப்படியாவது மிச்சப்படுத்தி வைத்து வந்தாள். ஆனால் அது எப்படியோ செலவாகிப் போன அதிசயத்தை இன்று வரை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
சென்னை விமான நிலையத்தின் முகப்பில் ஆல்பினா பெரிய ட்ராலி பையுடன் நின்றுக் கொண்டிருந்தாள். டாக்ஸி ட்ரைவர் இன்னொரு சிறிய பையையும் இறக்கி வைத்துவிட்டு கிளம்பினான். பின்னாலேயே இன்னொரு டாக்ஸி வந்து அவள் அருகே நின்றது. அதிலிருந்து அவளின் அப்பா, அம்மாவும் இறங்கினர். இந்த காலத்தில் எத்தனையோ புது மாடல்களில் கண்ணாடி வந்தாலும் நான் தேடிப்பிடித்து அந்த பழைய தடிமனான கருப்பு கண்ணாடியை தான் வாங்குவேன் என்று வாங்கி போட்டிருந்தார் அவள் அப்பா. நடு மண்டை முழுமையாக சொட்டை விழுந்து, டை அடிக்கப்பட்ட சில நீண்ட முடிகள் மட்டும் அந்த சொட்டையை மறைக்க முயன்றன. சஃபாரி கோட் சூட் அவர் ஏதோ பெரிய அரசு அதிகாரியாக இருக்க வேண்டும் என்று காட்டியது. உண்மைதான். மின்துறையில் பெரிய அதிகாரி. இன்னும் இரண்டு வருடங்களில் ரிடையர்டுமண்ட். ஆல்பினாவின் அம்மா வழக்காமான ஒரு தமிழ் அம்மாவாகவே இருந்தாள். எதுவுமே தெரியாத வயதில் நடந்த கல்யாணம், அதை தொடர்ந்த குழுந்தை, அடுத்த முப்பது வருடங்களாக கிச்சன் வாசம் என்று அவளின் வாழ்க்கையில் சுவாரஸ்யமான பகுதிகள் மிகக் குறைவு. அவளின் சந்தோசங்கள் எல்லாம் தினமும் காலை அவள் கணவருக்கு மதிய சாப்பாடு கட்டிவிட்டு, டிப்பன் பாக்ஸில் அடங்காத மிச்சத்தை கொல்லைபுற குருவிகளுக்கு கொடுப்பதாகவே இருந்தது.
பின்னால் வருசையாக டாக்ஸிகள் வர இவர்கள் மூவரும் விமான நிலையத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். ஆல்பினாவின் அப்பா பரந்தாமன் நிறைய முறை தான் விமானத்தில் பறந்ததாகவும் எப்படியெல்லாம் விமானத்தில் இருக்க வேண்டும் என்றும் ஆல்பினாவிடம் கூறிக்கொண்டு வந்தார். ஆம். இப்போது பறக்கப் போவது ஆல்பினா மட்டுமே. இங்கிருந்து நியூயார்க்கிற்கு பறக்கப் போகிறாள் ஆல்பினா என்ற 'அங்காள பரமேஸ்வரி'. பரந்தாமன்-ராஜம்மா தம்பதிக்கு பிறந்தவள் தான் இந்த அங்காள பரமேஸ்வரி. சிறு வயதில் இருந்தே இந்த பெயரை அவள் வெறுத்து வந்திருக்கிறாள். பள்ளியில் படிக்கும் போது ஆடி மாத ஒலிப்பெருக்கிகளில் இவளின் பெயர் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒலித்து வகுப்பறைகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்திவிடும். வருகைப்பதிவேட்டிலும் வருடம் தவறாது இவளின் பெயர் தவறாகவே வாசிக்கப்படும். கல்லூரி வரை பொறுத்து வந்த 'அங்காள பரமேஸ்வரி' அதற்கு பிறகு தன்னை ஆல்பினா என்று நண்பர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள். பின்னர் அனைவரின் கைப்பேசிகளிலும் அவளின் பெயர் அதுவாகவே சேமிக்கப்பட்டது. மாநிறத்திற்கும் சிகப்பிற்கும் ஒரு நிறம் இருக்குமல்லவா. அந்த நிறம். பார்ப்பவர்கள் எளிதாக அவளை வட இந்தியக்காரி என்று நினைத்துவிடுவர். போஷாக்கான உடம்புடன். தேவையான தசைகள் இருந்தும், தேவையில்லாத தசைகள் இல்லாமலும் இருந்தாள். அவளுடயை நிறத்துக்கும் அழகுக்கும் அவள் எத்தனையோ விடலைப் பையன்களை கட்டிப்போட்டு காலடியில் வைத்திருப்பாள் என்று அவள் தோழிகள் சொல்லி கேலிச் சிரிப்பார்கள். அது ஒருவகையில் உண்மையும் கூட. பள்ளியிலேயே அவளுக்கு பல காதல் கடிதங்கள் வந்து சேர்ந்தன. காதலர் தினம் என்றாலே அவள் முடிந்தவரை பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்தாள். கல்லூரியில் சொல்லவே தேவையில்லை. ஆனால் இறுதி வரை ஆல்பினா எந்த காதல் வலைகளிலும் சிக்காமல் இப்போது அமெரிக்கா பறக்கப்போகிறாள்.
நியூயார்க் கார்னல் பல்கலைகழகத்தில் ஆல்பினாவிற்கு பி.எச்.டி படிக்க ஊக்கத்தொகையுடன் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் பரந்தாமனும் ராஜம்மாவும் அமெரிக்கா செல்ல சுத்தமாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் பல்வேறு சண்டைகளுக்கும் கொஞ்சல்களுக்கும் பின் ஆல்பினா அவர்களை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாள். சொந்தக்காரர்களின் கல்யாண பேச்சுகளுக்கு இடையில் ஒரு கட்டத்தில் ஆல்பினாவிற்கு அமெரிக்கா வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற நிலையில், பரந்தாமன் வேகமாக பேசி ஆட்டத்தை கலைத்து இப்போது அவளை அமெரிக்கா அனுப்புகிறார். சங்கர் பெரியப்பா தன் வாழ்க்கை முழுவதும் இனி ஆல்பினாவிடம் பேசப்போவதில்லை என்று சபதம் செய்துக்கொண்டார். சரியாக ஒரு வாரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது.
"நான் சொல்லுறத கேளு பரமா. எதுக்கு இவ்வளோ வருசத்துக்கு பின்னாடி இந்த படிப்பெல்லாம். அதுவும் அமெரிக்கா போயி.. தேவை தானா? நம்ம தனசேகரோட பையன் டாக்டரா தான் இருக்கான். நல்ல பையன்...நல்ல சம்பாத்தியம்... நீ ஓ.கேன்னு சொல்லு நானே பாத்து பண்ணுறேன்...என்ன சொல்லுற?"
"வேணாம் பெரியப்பா. நான் படிச்சுட்டு வரேனே..இந்த வாய்ப்புலாம் யாருக்கும் கெடைக்காது..." என்று தலையை கீழே போட்டுக்கொண்டு சொன்னாள் ஆல்பினா.
"என்னமா பெரிய வாய்ப்பு. எங்க படிச்சாலும் இதே டிகிரி தானே.."
"இல்ல பெரியப்பா உங்களுக்கு புரியல. அப்பா போக சொல்லி சம்மதிச்சுட்டார். பாஸ்போர்ட் விசா எல்லாமே ரெடி. இப்போ எதும் மாத்த முடியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..." ஆல்பினாவிற்கு கோபம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. கையை பின்னால் கட்டிக்கொண்டு முறுக்கிக் கொண்டிருந்தால். இந்த ஆளை தாடையில் ஒரே குத்தாக குத்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
"உங்க அப்பாவையே நான் தான் படிக்க வச்சேன். உன்ன பாத்துக்க எனக்கு தெரியாத... உனக்கு அமெரிக்கா பாக்கனும்னா சொல்லு.. கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் பொயிட்டு வா... என் செலவுல நானே அனுப்பி வைக்கிறேன்...என்ன சொல்லுற..." என்று நக்கலாய் சிரித்தார் சங்கர் பெரியப்பா.
"யோவ்...உனக்கு சொன்னா புரியாதா...அறிவில்ல உனக்கு..." என்று சீறிவிட்டாள் ஆல்பினா. பரந்தாமன் ஓடி வந்து ஆல்பினாவை ஒரு அறை அறைந்து சங்கரிடம் மன்னிப்புக் கேட்டார்.
"இனிமே உன் வீட்டு பக்கம் வந்தாலோ...இவ கல்யாணம் பத்தி பேசனாலோ என்ன செருப்ப கழட்டி அடி... இவ நல்லாவா இருப்பா நாசமா தான் போவா..." என்று திட்டிக்கொண்டே அன்று வெளியே போனார். பின்னர் அம்மாவும் வந்து ஆல்பினாவை இரண்டு அடி போட்டார். ஆனால் அவரை திட்டிவிட்டோம் என்று ஆல்பினா மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.
செக்-இன்களை தாண்டி ஆல்பினா உள்ளே சென்றாள். பரந்தாமனும் ராஜம்மாவும் கையசைத்தனர். பரந்தாமன் வந்த கண்ணீரை அடக்க முடியாமல் தோற்றுப்போனார். ராஜம்மா எந்த முயற்சியும் இல்லாமல் விம்மி விம்மி அழுதாள். ஒரே பெண் அல்லவா!
முதல் அனுபவமாய் இருந்தது ஆல்பினாவிற்கு எல்லாமே. சன்னலுக்கு அருகே இருக்கை கிடைத்தது. ஒரு பணிப்பெண் வந்து சீட் பெல்ட் போடும் யுக்திகளை விளக்கிக் கொண்டிருந்தாள். முதலில் தடுமாறிய ஆல்பினா பின்னர் போட்டாள். எல்லா பயணிகளும் ஏறிக்கொண்டனர். விமானம் கிளம்பப் போவதாய் அறிவிக்கப்பட்டது. மெதுவாக விமானம் நகர ஆல்பினாவிற்கு அடிவயிற்றில் ஏதோ அழுத்துவது போல இருந்தது. விமானத்தின் வேகம் அதிகரித்தது. ஆல்பினா கண்ணை மூடிக்கொண்டாள். வேகமெடுத்த விமானம் விண்ணில் தன்னை செலுத்திக்கொண்ட பின் தடுமாற்றங்களின்றி நிதானமானது. ஆல்பினா கண்ணைத் திறந்தாள். அவள் மேகங்களுக்கு மேலே நகர்ந்துக் கொண்டிருந்தாள். மாலை சூரியனின் கதிர்கள் ஒவ்வொரு மேக உருண்டைகளில் மேலும் பட்டு பட்டு அவள் கண்ணை கூசியது. அவள் பக்கத்து இருக்கை காலியாக இருத்தது.
சில மணி நேரத்திற்கு பின் விமானம் தில்லியில் ஒரு மணிநேரம் நின்றுவிட்டு செல்லும் என்ற அறிவிப்பு வந்தவுடன் விமானம் இறங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தன. விமானம் இறக்குவதற்காக தரையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அதிகமாக ஆடியது. ஆல்பினாவிற்கு ஏதோ சரியில்லாதது போல தோன்றியது. கண்கள் இருண்டு தன்னால் மூடிக்கொண்டன. ஆல்பினா மயங்கிப் போனாள்.
- தொடரும்...
No comments:
Post a Comment