சுடுகாட்டில் இருந்து திரும்பி வரும்போது லேசாக இருட்டிவிட்டது. ராமசாமி கடைசியாக வந்துக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் பத்து பதினைந்து பேர் சென்றுக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் இங்கேயே குளித்துவிட்டுப் போகலாம் என்று வடக்கே இருக்கும் ஏரிக்குச் செல்லும் குறுக்கு பாதை வழியாகப் போகத் தொடங்கினர். கொஞ்சம் தூரம் கடந்ததும் முன்னால் சென்றுக்கொண்டிருந்த பத்து பதினைந்துப் பேர் இன்னும் முன்னால் சென்று விட்டனர். ராமசாமியின் கண்களுக்கு இப்போது அவர்கள் அவல் அளவில் தெரிந்துக்கொண்டிருந்தனர். ராமசாமியை நூல் பிடித்த மாறியே வந்துக்கொண்டிருந்தான் சுக்கன். சுக்கனுக்கு அப்போது ஆறு வயது தான் ஆகிக்கொண்டிருந்தது. தன் தந்தை இறந்து கொள்ளி வைத்தான் என்பதை அவன் புரிந்துக்கொள்ள் இன்னும் பத்து வயது ஆகும் என்று ராமசாமி நினைத்துக் கொண்டிருந்தான். ராமசாமி தான் சுக்கன் தலையை மொட்டை அடித்திருந்தான். ராமசாமி அந்த ஊரில் எல்லாருக்கும் முடி திருத்தம் செய்யும் நாவிதன் என்பதையும் தாண்டி சுக்கனின் தாய் மாமன். ஈரம் காயாமல் இருந்த அவன் உடலில் திருநீர் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. இப்போது முன்னால் சென்று கொண்டிருந்த பத்து பேரும் மாலை நேரத்து மார்கழி பனியில் மறைந்துப் போயிருந்தனர். பகல் முழுக்கத் தப்பட்டை அடித்த ஓய்ந்து, ஊர் அமைதியாக இருந்தது.
"அப்பா வந்துடுவாருன்ன..." ராமசாமி அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தான்.
"அதான் எரிச்சுட்டீங்களே!"
"எரிச்சாளும் அப்பா வருவாரு சுக்கா"
"எப்படி வருவாரு? அதான் எல்லாம் கருகிடுச்சே!"
ராமசாமிக்கு இந்த உரையாடல் தொடர்வதில் விருப்பமில்லை போலும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. போகும்போது உதறிவிட்டுக் கொண்டே சென்ற சம்பங்கிகள் காலில் மிதிப்பட்டன. சுக்கன் அதை மிதிக்கால் நடக்க முற்பட்டான்.
"இத மிதிச்சா பேய் புடிச்சுடுமா மாமா?"
"....."
"மாமா சொல்லுங்க...பேய் புடிச்சுடுமா?"
"...."
ராமசாமி கண்களில் கண்ணீர் வர எந்தச் சத்தும் இல்லாமல் காய்ந்துப்போயிருந்தாலும், அவன் உள்ளுக்குள் அழுதுக்கொண்டிருந்தான். இப்படி அறியா மனமாக இருந்து சுக்கனுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? தன் தங்கை சிவகாமிக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? என்றெல்லாம் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு வந்தான்.
சுக்கன் மீண்டும் ராமசாமியின் கையைப் பிடித்து உசுப்பினான்.
"சொல்லுங்க மாமா..."
"ஆமா அப்படித்தான் சொல்லுவாங்க...பேயி புடிக்கும்முன்னு"
"அப்போ அப்பா தானே பேயா வருவாரு...சொல்லுங்க மாமா..."
"...."
"மாமா"
"ம்"
அதன்பின் சுக்கன் எல்லாப் பூக்களையும் மிதித்துக்கொண்டே சென்றான். வீடு நெருங்கிவிட்டது. வீட்டில் பெண்களின் ஓலச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சிவகாமியின் வளையல்களை உடைக்கும் சத்தம் சடால் சடால் என்று வெளியே கேட்டது. ஒரே ஒரு கிழவி மொத்த கூட்டத்திற்கும் சேர்த்து ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தாள்.
"வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?
சிங்க தெருவெல்லாம்
சிந்தி அழுகிறேனே
சிங்கார சிங்கபூர
கண்ணீரில் கழுவுறேனே
வட்டிகடன் வாங்கி
வாக்கப்பட்டுப் போறவள
வாசலோடு நிக்கவச்சி
வந்துநானும் சேர்ந்தேய்யா
வட்டிகடன் கட்டி
வண்டியில சாமான்வாங்கி
வந்தவக வாயடக்க
வரிசை கொடுத்தேன்ய்யா
பக்கவாதம் வந்து
பாலகனா போனவரே
தொண்டைகுழி விக்கி
தொலைதூரம் போனதேனோ?" என்று அந்தக் கிளவி பாடி முடிக்க, மஞ்சள் நிறைந்து சூழ்ந்திருந்த சிவகாமியின் தாலியை ஒரு பெண் கத்தியால் வெட்டி தலையைச் சுற்றி தூக்கி வீசினாள். இன்னொருத்தி சிவகாமியின் நெற்றியில் அழிப்பதற்காகவே இப்போது வைக்கப்பட்ட பெரிய வட்ட குங்குமத்தை உள்ளங்கையால் மேல் நோக்கி தேய்த்து அழித்தாள். சரியாகப் போகாமல் நெற்றியிலேயே இருந்தது. இன்னொருத்தி ஒரு சொம்பு நிறையத் தண்ணீரை சிவகாமியின் நெற்றியில் தெளித்து முழுவதுமாகக் குங்குமத்தை நீக்கினாள்.
வீட்டிலிருந்த பெண்கள் கூட்டம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. வெளியே ராமசாமியும் சுக்கனும் திண்ணையில் அமர்ந்திருந்தனர். கூடவே சில ஆண்களும் அமர்ந்திருந்தனர். ராமசாமியிடம் பெரியண்ணன் வந்து சவரக்கத்தியை நீட்டினான். ராமசாமிக்குக் காலையில் அவனுக்கும் பெரியண்ணனுக்கும் நடந்த சண்டை நினைவுக்கு வந்தது.
காலையில் ராமசாமி சந்திரனின் பிணத்திற்கு அருகே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தான். அப்போது பெரியண்ணன் வந்து அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். பெரியண்ணன் எல்லா எழவு வீட்டிலும் ஏதாவது பிரச்சனை செய்துவிடுவான். அவன் வேண்டுமென்றே செய்ய நினைக்கவில்லை என்றாலும் எப்படியோ நிகழ்ந்துவிடும். அது போலத் தான் இன்று காலையும் ராமசாமி அருகே வந்து உட்கார்ந்தான்.
"ராமசாமி, நீ எதுவும் இன்னைக்குச் செரைக்க வேணாம். எல்லா வெளிய இருந்த ஆளுங்க வர சொல்லியாச்சு" என்றான் பெரியண்ணன்.
"எதுக்கு ஆளுங்க?" என்றான் ராமசாமி.
"என்ன இருந்தாலும் செத்துப் போனது உன் தங்கச்சியோட புருசன். நீயே அவளுக்கு எப்படி மொட்டை அடிப்ப, அதான் வெளியே இருந்து வேற ஆள வர சொல்லி இருக்கோம். அதுமட்டும் இல்லாம நீ உன் தங்கச்சிக்கு மொட்டை அடிக்க ஒத்துக்குவியோ என்னவோ எங்களுக்குப் பயம்"
"ஏன், நான் ஒத்துக்க மாட்டேன் மொரண்டி புடிப்பேன்னு உன்டா யாரு சொன்னா?"
பின்னால் இருந்த ஆண்கள் கூட்டத்திலிருந்து குரல்கள் பெரியண்ணனை அழைத்துக கொண்டிருந்தது. 'ஏப்பா பெரியண்ணா! எழுந்து வாப்பா இந்தப்பக்கம்', 'பெரியண்ண ஏதோ ரவுச வளக்க போறாண்டோய்' என்றெல்லாம் பேச்சுக்கள் அடிப்பட்டன.
"இல்ல ராமசாமி எனக்கு ஒரு சந்தேகம்? உம்மோட தங்கச்சிக்கு மாசா மாசாம் மொட்ட அடிப்பியா இல்ல ரெண்டு மாசத்துக்கு ஒருக்காவா?"
"ஏய்...மூத்திரகுடிக்கி பயலே..." என்றவாறே ராமசாமி பெரியண்ணனின் மெல் சரிந்து, அவன் முகத்தில் ஓங்கி குத்தினான். பெரியண்ணன் நிலைக்கு வருவதற்குள் மீண்டும் வயிற்றில் ஒரு குத்தி குத்தினான். பெரியண்ணன் இடுப்பில் சொருகி இருந்த குவாட்டர் பாட்டில் உருண்டு போனது. பின்னர் அவன் மீது அமர்ந்து கன்னத்தின் இரண்டு பக்கமும் பளார் பளார் என்று அறை விட்டான். ஆனால் பெரியண்ணன் போதையில் இருந்ததால் அவனுக்கு எந்த வலியும் தெரியவில்லை போல. ராமசாமி எழுந்து எல்லாரையும் பார்த்துக் கத்தினான்.
"இங்க பாருங்க. நான் தான் உங்க வீட்டு புருசனில்லாத பொட்டைங்களுக்கெல்லாம் இப்ப வரைக்கும் செரச்சுக்கிட்டு இருக்கேன். அது என்னோட வீட்டுல நடந்தாலும் நாந்தேன் பண்ணுவேன். அதேனே சட்டம். எவனாவது சலம்பிக்கிட்டு இருந்தா...குறுக்குலையே மிதிச்சு கொன்னுபுடுவேன்"
காலை நடந்த இந்த சண்டையை நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, பெண்கள் எல்லாரும் வெளியை போக, இரண்டு பெண்கள் மட்டும் சிவகாமியை கையைப் பிடித்துக்கொண்டு கூட்டி வந்தனர். ஒரு பலகையில் அவளை அமர வைத்தனர். பக்கத்தில் சிவகாமியின் முடியை போட்டு புதைக்க ஒரு சிறிய குழி தோண்டப்பட்டிருந்தது. சுக்கன் சிவகாமியின் மடியில் உட்கார்ந்துக்கொள்ள ஓடினான், ஆனால் ஒரு பெண் அவனை இழுத்து பிடித்துக்கொண்டாள். ராமசாமியின் கையில் சவரக்கத்தி மிளிர்ந்தது.
சிவகாமியின் முன் அமர்ந்தான். ஒரு சொம்பில் இருந்து தண்ணீரை உள்ளங்கையில் ஊற்றி அவள் தலையில் தெளித்து ஈரப்படுத்தினான். சவரக்கத்தியை பிடித்து அவள் உச்சித் தலையில் லேசாகப் பதித்தான். அவன் கைகள் நடுங்கியது. தரையையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் சிவகாமி. அவளின் மொட்டைத்தலை அவனைக் கற்பனையில் மிரட்டியது.
"சீக்கிரம் பா ராமசாமி, நாங்க போவனும்மில்ல.." என்று பின்னால் நின்றுக்கொண்டிருந்த கொஞ்சம் கூட்டத்தில் சத்தம் வர ஆரம்பித்தது. ஆனால் ராமசாமியின் கை நடுங்கிய படியே இருந்தது. சிவகாமியின் தலையில் இருந்து கத்தியை எடுத்து விட்டு, தலை தொங்க போட்டு விசும்பினான்.
"என்னய்யா இது...ஊருக்கு ஒரு நாயம் உனக்கு ஒரு நாயாமா?" என்று பெரியண்ணன் பேச ஆரம்பித்தான்.
"என்ன ராமசாமி யோசனை? எல்லா நடக்குறது தானே" என்று ஒரு குரல் கேட்டது.
"எங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கெல்லாம் வேணா வேணான்னு சொல்ல சொல்ல செரச்ச...இப்போ என்ன வலிக்குதா...சீக்கிரம் எடுய்யா..இல்லனா பக்கத்து ஊருல இருந்து ஆள கூட்டி வரோம்" என்றது இன்னொரு குரல்.
"காலங்காலமா மொட்ட தலையா இருக்க மத்த பொண்ணுங்கலாம் கிறுக்கிங்க...இவுக தங்கச்சி மட்டும் ஒசத்தியா.." என்றது இன்னொன்று.
ராமசாமி மீண்டும் தன் சவரக்கத்தியால் முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. தன் தங்கையின் மொட்டை தலை அவனைப் பயமுறுத்தியது. பின்னால் மக்களின் பரப்பரப்பு அதிகரித்தது. கத்தியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் பின்னால் இருந்த கொல்லைக்குள் ஓடி இருளில் மறைந்தான்.
"இருங்கப்பா...நம்ம ராமசாமிக்கு பயத்துல மூத்திரம் வந்துடுச்சு...பேஞ்சுட்டு வரட்டும்" என்று சத்தமாகக் கத்தி சிரித்தான் பெரியண்ணன். திரும்பி வந்த போது, ராமசாமியின் தலை மொட்டையாக இருந்தது. அவன் புருவம் மற்றும் மீசையைக் கூடக் காணவில்லை. சில வாக்குவாதங்களுக்குப் பின் கூட்டம் கலைந்து சென்றது.
அதன் பின் அந்த ஊரில் நான்கு விசயங்கள் நடந்தது. சிவகாமி கடைசி வரை மொட்டை அடித்துக்கொள்ளவில்லை, ராமசாமி கடைசி வரை மொட்டை தலையுடனே புருவமும் மீசையும் இல்லாமல் இருந்தான், அந்த ஊரில் எந்தப் பெண்ணின் கணவர் இறந்தாலும் யாருக்கும் மொட்டை அடிக்கப்படவில்லை, சிவகாமியின் முடியை புதைக்கத் தோண்டிய குழியில் வைத்த வேப்பங்கன்று இப்போது வளர்ந்து செழித்திருக்கிறது.
நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது
ReplyDelete